Saturday, May 27, 2017

பரமாச்சாரியாரின் பார்வையிலே 3

Hi friends,

1. ஆனந்தம் எங்கே? 


நமக்கு எண்ணி முடியாத ஆசைகள் இருக்கின்றன. ஆனாலும் என்றோ ஒரு நாள் நாம் ஆசைப்படும் வஸ்துக்கள் நம்மை விட்டுப் பிரிவது அல்லது நாம் அவற்றைவிட்டுப் பிரிவது சர்வ நிச்சயம். 


சாவின் மூலம் இந்தப் பிரிவு ஏற்படாமல், அதற்கு முந்தி நாமாக ஆசைகளை ராஜினாமா செய்து விட்டுவிட்டால், அத்தனைக் கத்தனை ஆனந்தமாக இருக்கலாம்.


நமக்கு எத்தனை ஆசைகள் இருக்கின்றனவோ அத்தனை முளைகளை துக்கத்துக்கு அடித்துக்கொண்டு நம்மைக் கட்டிப்போட்டுக் கொள்கிறோம். ஆசைகளைக் குறைக்கக் குறைக்க துக்கஹேதுவுங் குறையும். 


இந்தப் பிறவி முடியுமுன் நாம் சகல ஆசைகளையும் விட்டுவிட்டால் மறுபடியும் பிறந்து அவஸ்தைப்படவே வேண்டாம்; அப்படியே பரமாத்மாவில் கரைந்து ஆனந்தமாகி விடலாம்.


2. மனசாட்சி


இப்பொழுது எல்லாம் தலைகீழாக மாறிவிட்டன. முதலில் மனசாட்சியைத்தான் பார்க்கிறார்கள். நியாயப்படி வேறு ஒரு மார்கமும் இல்லாதபோதுதான் மனசாட்சியை அநுசரிக்க வேண்டும். 


மனசாட்சி என்று ஏன் அதற்குப் பெயர் வந்தது? சாட்சி சொல்லத்தான் யோகியதை உடையது. நியாயாதிபதியாக (ஜட்ஜ்) இருக்க அதற்கு யோக்கியதை இல்லை.


சாட்சியாக வந்தவன் வாயால் பொய்யைச் சொல்வான். அதனால் வாய்சாட்சியை நம்புவதற்கில்லை. ஆனால், மனம் பொய் சொல்லாது. மனசுக்கு எல்லாம் நிஜமாகத் தெரியும். 


"நெஞ்சை யொளித்தொரு வஞ்சகமில்லை" என்று அவ்வைப் பாட்டி சொன்னாள். ஆகவே அதைச் சாட்சியாக மட்டும் வைக்கலாம். இப்பொழுது மனசாட்சியை தர்ம விஷயங்களில் ஜட்ஜாகவே வைத்து விடுகிறார்கள். 


இன்னது நடந்தது என்பதை நிஜமாகவே அது சொல்லும். இதுதான் நியாயம் என்று அதனால் தீர்மானித்துச் சொல்ல முடியாது. தான் நினைப்பதை சரி என்று எப்படியாவது சமாதானம் சொல்லி நிலைநாட்டிக் கொள்வதே அவரவர் மனசும் செய்கிற முடியாக இருக்கும்.


இது எப்படி தர்ம நியாயமாகும்? எனவே, 'மனசாட்சிக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படிச் செய்கிறேன்' என்று சொல்வது தப்பு. எடுத்தவுடன் அதற்கு ஜட்ஜ் ஸ்தானம் கொடுத்துவிடக்கூடாது. 


ஒருவித வழியும் இல்லாமல் போனால், 'நீ தான் சாட்சியாக இருந்து எல்லாவற்றையும் பார்த்திருக்கிறாயே, இப்போது உன் அபிப்பிராயத்தைச் சொல்' என்று மனசிடம் கோட்கலாம். மனசு ஒரு தனி மனிதனைச் சேர்ந்தது. எனவே அது எவ்வளவு தூரம் தன் சுயநலத்தை விட்டு விலகிப் பேசும் என்று சொல்ல முடியாது.


No comments :

Post a Comment