Saturday, May 27, 2017

பரமாச்சாரியாரின் பார்வையிலே 1

Hi friends,

1. வாழ்க்கைத்தரம்


போதும் என்ற எண்ணம் எவருக்குமே இல்லாமல், பழைய காலத்திலிருந்த திருப்தி இன்றைய ஜனங்களுக்கு அடியோடு இல்லாமல் இருப்பது தரித்திரம்தான்.


'ஒருவன் இரண்டு வேளை காப்பி சாப்பிடுவது நான்கு வேளையாக உயர வேண்டும்; இரண்டு வேஷ்டி வைத்துக் கொண்டிருப்பவன் இருபது வேஷ்டி வைத்துக் கொள்ள வேண்டும்; இதுவே வாழ்க்கைத் தர உயர்வு' என்கிற அபிப்பிராயம் வளர்ந்தால் அது பெரிய தப்பு.


வாழ்க்கைத் தரம் உயர்வது என்று சொல்லிக் கொண்டு வாழ்க்கைத் தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டு போவதால், துராசைதான் அதிகமாகும். எத்தனை சம்பாதியத்தாலும் போதாமல் நாட்டில் தரித்திரம்தான் மிஞ்சும்.


வசதி இருக்கிறவர்கள் தேவைக்குமேல் பட்டுப்படவை, ஸில்க் ஷர்ட் என்று தோஷத்தை அதிகமாக இப்போது வளர்த்துக் கொண்டிருப்பது ஒரு பக்கம், அதே சமயம் இவர்களைப் பார்த்து வசதியில்லாதவர்களுக்கும் சபலம் பிடித்து ஆடுகிறது. அவர்களும் கூடக் கடன் வாங்கியாவது இந்த வேண்டாத தேவைகளைப் பூர்த்தி பண்ணிக் கொள்ள நினைத்து, கடனாளியாகி அநேக உபத்திரவங்களுக்கு உள்ளாகி வருகிறார்கள்.


தேவையை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகப்படுத்திக் கொள்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு சாந்தி குறையும்; சௌக்கியம் குறையும்; நிம்மதியும், திருப்தியும் குறையும். தரித்திரம், துக்கம் உண்டாகும்.


2. வேலையும் பெண்களும்.


​பாரத தேசத்தின் ஸ்திரீ தர்மத்துக்கே விரோதமான போக்குகள் உண்டாகின்றன; கல்யாணமாகாத பெண்களைப் படிக்க வைத்து, வேலைக்கு விட்டு, அவளே சம்பாதிக்கும்படியாகப் பெற்றோர்கள் விடுகிறார்கள். 


முதலில் இது அவமானமாக இருந்தது. ஆனால் முதலில் தயக்கத்தோடு ஆரம்பிக்கிற ஓர் ஏற்பாடு வழக்கத்தில் வந்துவிட்டால் பிறகு அதில் கூச்சம் போய்விடுகிறது. முதலில் அவமானமாக நினைத்த விஷயமே பிறகு பழகிப் போய் விடுகிறது. அதுவே நாகரிகத்தின் அடையாளம் என்ற அளவுக்கு வந்துவிடுகிறது. 


பெண்கள் உத்தியோகம் பார்ப்பது இப்படித்தான் ஆகிவிட்டிருக்கிறது. வயசு வந்த பெண்கள் சர்வசகஜமாக ஆண்களுடன் சேர்ந்து உத்தியோகம் பார்ப்பது நம் தேச ஆச்சாரத்துக்கே விரோதமானது. இதனால் எத்தனையோ தப்பிதங்கள் நேருகின்றன. 


இதை எல்லோரும் கண்டும் காணாமல் இருப்பதுபோல் நானும் இருந்தால் பிரயோஜனமில்லை. என் மனஸில் பட்டதை, நீங்கள் கேட்டாலும், கேட்காவிட்டாலும், வெளியிட்டுச் சொல்வது கடமை என்றுதான் சொல்கிறேன்​.

No comments :

Post a Comment