Monday, November 27, 2017

வயதான தந்தையின் வேதனை.

டேய், என்னைத் தெரியுதா? நான் தான் உன் அப்பாடா. எனக்கு இன்னைக்கு 85 வயசு ஆவுது. உனக்கு என் பிறந்த நாள் ஞாபகம் இருக்கா? டேய், உன் கூட பேசணும். உனக்கு நேரம் இல்லைனு எனக்கு தெரியும். உனக்கு பல ஜோலீ. பெண்டாட்டிய கவனிக்கணும், பிள்ளையைப் பாக்கணும், பல இடத்துக்கு போவணும். 

அப்பதான் பணம் பண்ண முடியும். நீ பணக்காரன் என்று எனக்கு தெரியும். உலகத்தில் உள்ள பணம் எல்லாம் உங்கிட்டெ இருக்கு. எனக்கு பல சௌகரியம் பண்ணி கொடுத்து இருக்கே. ஆனா நான் எத்தன நாளைக்கு இப்படியே படுத்துக்கிட்டு இருக்க முடியும்? 


எத்தன  நாளைக்கு மோட்டு வளைய பாத்துக்கிட்டு இருக்க முடியும்? இந்த பாட்டை எத்தன  நாளைக்கு கேட்டுக்கிட்டு இருக்க முடியும்? முதுகு எல்லாம் வலிக்கறதுடா. என்னைக் கொஞ்சம் தூக்கி பிடிச்சுக்கோ. கை எல்லாம் நடுங்குது. எதையும் கையாலே பிடிக்க முடியல்லெ. புத்தகம், போன் எதையும். 


கண்ணு சரியா தெரியல்லெ. எழுத்தெல்லாம் சின்னதா இருக்கு. படிக்க முடியல்லெ. வேலைக்காரி குடுக்கற கஞ்சி கசக்குது. மாத்திரை சாப்பிட்டு நாக்கெல்லாம் செத்துப் போச்சு. உன் அம்மா ஞாபகம் வருது. புண்ணியவதி போய் சேர்ந்துட்டா. அவ இருந்தா  சொர்க்கமா இருக்கும்.


கிட்ட வாடா. பக்கத்துல உட்காருடா. என்னைப் பாருடா. என்னோட கலங்கிய கண்ணைப்  பாருடா. என் முடியெல்லாம் கொட்டி போச்சு. தோல் எல்லாம் சுருங்கிப் போச்சு. கண்ணெல்லாம் கலங்கிப் போச்சு. வயசாயிப் போச்சு. என்னடா சிரிக்கரே. அதுலே கொஞ்சம் கூட பிரியத்தை  காணோமே.


தனிமை கொல்லுது. நான் உனக்கு அப்பாடா. என் வாழ்க்கை முடிஞ்சு போச்சுடா. உன் மேலே எவ்வளவு பிரியம் வைத்து இருந்தேன். உனக்காக எதையும் செய்வேன்டா. உன் கூட ஒரு நிமிஷம் இருந்தா போதும் எனக்கு. யாராவது என்னைப் போல கிழவன் செத்துப் போய்ட்டா ரொம்ப வருத்தப்படரே. 


உன் கண் முன்னாலே நான் செத்து கிட்டு இருக்கிறது உனக்கு தெரியெல்லே. யாராவது சின்ன வயசுலே செத்துப் போய்ட்டா  கண்ணுலே ரத்தம் வருது. ஆனா உன் கண் முன்னாடி நான் தினமும் கிழவனாகிறது உனக்குத் தெரியல்லெ. பணம் பண்ணுவதிலேயே  குறியா இருக்கே. 


நான் சாகும் போது கூட உன் மேல் உள்ள பிரியம் போகாதுடா. நாளைக்கு நான் இருக்க மாட்டேன். அடுத்த வாரம் சந்தேகம். எனக்காக நீ நிச்சயம் கண்ணீர் விடுவாய். என்னுடன் பேச வில்லையே என்று உன் நெஞ்சு வலிக்கும். உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன். உன் கண்ணீர் என் நெஞ்சைத் தொடும்.


நாம் இப்பொழுது உயிரோடு இங்கே இருக்கிறோம். நாம் இருவரும் மனம் விட்டுப் பேசுவோம் . தகப்பனும் பிள்ளையுமா இல்லை. ஒரு நல்ல நண்பரா  பேசுவோம். உனக்கு சில விஷயம்  நான் சொல்லணும். உன்னை பெற்றதே என் அன்பை உன்னுடன் பகிர்ந்து கொள்ளத்தான். ஆனா நீ வித்யாசமா  இருக்கே.


உன்னைப் பற்றி எனக்கு நல்லாத்  தெரியும். நீ என் மகன். உன்னை நான் மிகவும் விரும்புகிறேன். எனக்காக கொஞ்சம் என் அருகில் வா. உன் நெஞ்சைத் திறந்து பேசு. சீக்கிரம் வா. இந்தக் கடைசி நிமிடங்களில் நாம் ஒருவரை  ஒருவர் புரிந்து கொள்வோம். வா ராஜா வா.

No comments :

Post a Comment