Sunday, November 19, 2017

ஒரு ஹோட்டல் முதலாளியின் சிநேகிதம்.

1967 ம் வருடம் நான் சென்னை தியாகாராய நகரில் குடி இருந்தேன். பாண்டி பஜாரில் சாந்தா பவன் என்ற ஹோட்டல் ஒன்று உண்டு. இப்பொழுது அதற்கு பாலாஜி பவன் என்று பெயர். அப்பொழுது அது மிகச் சிறிய ஹோட்டல். பொருட்கள் வெளியே தயாரிக்கப்பட்டு இங்கே கொண்டு வந்து விற்கப் படும்மொத்தம் 6-8 மேஜைகள் தான். 

தரம் நன்றாக இருக்கும். அதனால் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பிட்ட வேளையில் குறிப்பிட பொருட்கள் தான் கிடைக்கும். சாப்பாடு கிடையாது. டிபன் மட்டும்தான். சினிமா துறையைச் சேர்ந்த பல பெரும் புள்ளிகள் இரவில் இங்கு வந்து சாப்பிடுவார்கள். இரவில் ஹோட்டலுக்கு வெளியே மேஜை போட்டு வியாபாரம் நடக்கும். அங்கு தக்காளிச் சட்னி மிகவும் பிரசித்தம்.


ஹோட்டல் முதலாளியின் பெயர் தேஜு ஷெட்டி. 45 வயது இருக்கும். கொண்கனி நாட்டைச் சேர்ந்தவர். கரகரத்த குரலில் நன்றாகத் தமிழ் பேசுவார். பருத்த உடல், பெரிய தொப்பை, அழகில்லாத தோற்றம், உதடுகள் வெட்டுப் பட்டு இருக்கும். எப்பொழுதும் வெள்ளை உடை அணிந்து இருப்பார். என்னிடம் மிக சிநேகிதமாகப் பழகுவார். 


ஹோட்டலில் பொருட்களின் தரத்தைப் பற்றி அக்கறையுடன் விசாரிப்பார். எனது காப்பியில் சிறிது குடித்துப் பார்த்து தரத்தைப் பரிசோதிப்பார். ஹோட்டலில் என்ன முன்னேற்றம், மாறுதல் செய்யலாம் என்று கேட்பார். தொழிலில் அவருக்கு இருந்த அக்கறையும், கஸ்டமர்களிடம் உள்ள மரியாதையையும் நான் மிகவும் பாராட்டுவேன். 

சாப்பிட்டபின் பணம் கொடுக்காமல் நானோ, வாங்காமல் அவரோ இருந்ததில்லை. 

என் வேண்டுகோளை ஏற்று இரண்டு கடை தள்ளி இருந்த ஹோட்டல் ஒன்றை வாங்கி சாப்பாடு போட்டு நல்ல முறையில் நடத்தினார். அந்த அளவு நேர்மையாகவும், பக்தியுடன் வியாபாரம் செய்வது கஷ்டம். சிறிது சிறிதாக வியாபாரத்தை மேலே கொண்டு வந்தார். நம்பிக்கை, நாணயமாக வேலை செய்ய சொந்த ஊரில் இருந்து ஆட்களை கொண்டு வந்து, ஒரு வீடு வாடகைக்கு எடுத்து, தங்க வைத்து,  சாப்பாடு  போட்டு, சம்பளம், விடுமுறை கொடுத்து கவனித்துக் கொண்டார்.


எல்லோரும் ஒரு குடும்பம் போல் வாழ்ந்தனர். பக்கத்து கடைகளை விலைக்கு வாங்கி, மாடியில் இடத்தைப் பெருக்கி, பெரிய ஹோட்டல் ஆக  மாற்றினார். வியாபாரம் நன்றாக நடந்தது. விலை ஏற்றம் செய்யும் போதெல்லாம் என்னிடம் விவரம் கூறுவார். லாப நஷ்டம், உணவில் விஷம் கலக்கும் ஆபத்து, பலருக்கு சாப்பாடு போடும் திருப்தி பற்றி பேசுவார்.


இடத்திற்கு வாடகை, வேலைக்காரர்களுக்கு சம்பளம், மூலப் பொருட்கள், பகடி, கடை  விஸ்தாரிப்பு செலவு, மின்சாரம், ஏஸீ, மேஜை நாற்காலிகள் பழுது பார்ப்பது, தேய்ந்து போன தரையை மாற்றுவது, மருத்துவ செலவு, கடன் பேரில் கட்டும் வட்டி என்று பலவிதமான கஷ்டங்களை என்னிடம் சொல்வார். 


ஹோட்டல் நடத்துவது, தினம் கல்யாணம் செய்வது போல். வெற்றியும் வரும் தோல்வியும் வரும். நடிகரின்  வாழ்க்கையைப் போல் இது நிரந்தரம் இல்லை என்று கூறுவார். ஏன் பல ஹோட்டல்கள் சீக்கிரம் மூடி விடுகிறார்கள் என்று எனக்கு அப்பொழுது புரிந்தது. 1974 இல் எனக்குத் திருமணமான போது எங்கள் இருவருக்கும் ஒரு விருந்து கொடுத்தார். 


அதன் பிறகு நான் திருவல்லிக்கேணி சென்று விட்டதால், அடிக்கடி ஹோட்டலுக்கு செல்வதில்லை. ஒரு நாள் போனபோது கடையை விற்று விட்டு சொந்த ஊருக்குச் சென்று விட்டார் என்று கேள்விப் பட்டேன். என்ன காரணம் என்று தெரியவில்லை. கொஞ்சம் வருத்தமாகவும், ஏமாற்றமாகவும் இருந்தது. பிறகு அவரைப் பார்க்க முடியவில்லை. ஒரு நல்ல நண்பரை இழந்த வருத்தம் இப்பொழுதும் எனக்கு உண்டு. 

























  
  

No comments :

Post a Comment