Sunday, November 5, 2017

குழந்தைகளை யார் கெடுத்தது?

நான் என் குழந்தைகளின் தாயார். நீ பாட்டி. நீ அவர்களுக்கு ரொம்ப செல்லம் கொடுக்கிறாய். நீ அவர்களுக்கு இல்லை என்று சொல்வதே இல்லை. நான் கண்டிப்பாக வளர்க்க நினைத்தால் அதை நீ கெடுக்கிறாய். தானே பல் தேய்க்க, தலை வாரிக் கொள்ள, தானே சாப்பிட, தானே ட்ரெஸ் போட்டுக்க, நேரத்துக்குத் தூங்க, வீட்டுப் பாடத்தை எழுத. எல்லாவற்றிலும் நீ தலை இடுகிறாய்.

நான் அவர்கள் கெட்டுப் போவதை விரும்பவில்லை. அவர்கள் நல்ல குழந்தைகள் ஆக வளர வேண்டும். அவர்களுக்கு டிசிப்லின் வரணும். தானே எல்லாவற்றையும் செய்து கொள்ள, ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்க, பகிர்ந்து கொள்ளத் தெரியாது. அவர்கள் குழந்தையாய் இருந்த போது தானே தூங்க வேண்டும் என்று நான் நினைத்தால், நீ அவர்களை தோளில் போட்டு தூங்கப் பண்ணுவாய்.


அவர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் உடனே ஓடுகிறாய். எப்படி அவர்கள் தானே செய்து கொள்வார்கள்? அவர்களுக்கு நிறைய பரிசுகள் கொடுக்கிறாய். அவர்கள் அதை பார்த்து சந்தோஷப் படுகிறார்கள். அந்த மாதிரி என்னால் கொடுக்க முடியாது. என்னை பற்றி என்ன நினைப்பார்கள்?


பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பி வந்தால் உடனே அவர்களிடம் ஓடுகிறாய். அவர்களுக்கு பிடித்தமான இனிப்பு, பணியாரம் எல்லாம் செய்து கொடுக்கிறாய். அதனால் அவர்கள் எப்பொழுதும் உன்னிடம் வருகிறார்கள். எல்லாப் பாட்டிகளும் இப்படித்தான். குழந்தைகளைக் கெடுக்கிறார்கள். உன்னை ஊருக்கு அனுப்பி விடலாமா என்று கூட யோசித்தேன்.


நீ இறந்து போகும் வரை.


எப்படி அவர்களுக்கு சொல்வது? சாவு என்றால் என்ன வென்று தெரியாதே. நம்ப மாட்டார்களே. தினம் உன்னை நினைத்து அவர்கள் அழுகிறார்கள். இப்பொழுது எனக்கு புரிகிறது. அவர்களுக்கு நீ எவ்வளவு முக்கியம் என்று. உன்னை எவ்வளவு நேசித்தார்கள் என்று. இவ்வளவு சீக்கிரம் நீ இறப்பாய் என்று நான் நினைக்கவில்லை.


இப்பொழுது அவர்கள் யார் உதவியும் இல்லாமல் எல்லா வேலைகளையும் தானே செய்து கொள்கிறார்கள். நல்ல மார்க்கு வாங்குகிறார்கள். படிப்பில் கவனம் செலுத்துகிறார்கள். உன் சமையல், சாப்பாடு, கதைகள், அன்பான வார்த்தைகள், கை மருந்துகள், எல்லாவற்றையும் விட உன் அன்பு எல்லாவற்றையும் நேசிக்கிறார்கள்.


நான் தவறு செய்து விட்டேன். உன்னை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. உன்னை நினைத்து என் குழந்தைகள் ஏங்குகின்றன. எப்பொழுதும் சிரித்த முகத்துடன் சந்தோஷமாக இருக்கும் பாட்டி நீ. உன்னுடைய அறிவுரை, கவனிப்பு, அன்பு அவர்களுக்கு இப்பொழுது கிடைக்க வில்லை.


இப்பொழுது அவர்கள் வெற்றி காணும் பொழுது உன்னை நான் நினைக்கிறேன். உன்னைக் கடும் சொற்களால் பேசியது என் தவறு. நீ உடனே திரும்பி வா. நான் ஒரு வார்த்தை கூட கடிந்து சொல்ல மாட்டேன். நீ அவர்களுக்கு எதை வேண்டுமானாலும் கொடு. எனக்கு சம்மதம். திரும்பி வா.


உன்னால் வர முடியாது என்று எனக்குத் தெரியும். அவர்கள் மனதில் என்ன எண்ணங்கள் ஓடுகிறது என்று என்னை விட உனக்குத்தான் நன்கு தெரியும். அவர்கள் நம்பிக்கை, பயம், தனிமை எல்லாவற்றையும் பற்றி உனக்குத் தெரியும். வா. வந்து அவர்கள் எவ்வளவு மாறி விட்டார்கள் என்று பார்.


அவர்கள் கண்களைப் பார், புதிய உடைகளைப் பார், காற்றில் அவர்கள் முடி பறப்பதைப் பார், அவர்கள் வயது வந்தவர்களாக பொறுப்புடன்  இருப்பதை பார். நீ அவர்களை விட்டுப் போகவில்லை. அவர்களுடன் நீ சந்தோஷமாக இருந்தாய். உன்னுடைய அன்பு தான் எல்லாமே. உனக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரிய வில்லை. நீ திரும்பி வந்தால் மிகவும் சந்தோஷப் படுவேன். வருவாயா?


இப்படிக்கு உன் அன்புள்ள 

மருமகள் / மகள்

No comments :

Post a Comment