Wednesday, November 1, 2017

அன்று முதல் குடிக்க மாட்டேன்

1981, எனக்கு 36 வயது. சென்னையில் ஒரு பெரிய கம்பனியில்  வேலை. அந்த வருடம் தமிழ் நாட்டில் மது விலக்கு ரத்து செய்யப் பட்டது. என் அலுவலகத்தில் ஒரு 6 நண்பர்கள் சேர்ந்து மாலையில் அலுவலகம் முடிந்தவுடன் எல்லோரும் சேர்ந்து மது அருந்தலாம் என்று முடிவு எடுக்கப் பட்டது. என்னையும் அதில் சேர்த்து விட்டனர். 

எனக்கு அதில் பழக்கம் கிடையாது. இருந்தாலும் ஒரு நண்பனின் வற்புறுத்தலால் சரி என்று சொன்னேன். எல்லா ஏற்பாடுகளும் தடபுடலாக செய்யப் பட்டு அதற்கு வேண்டிய பொருட்கள் எல்லாம் வாங்கப் பட்டது. மாலை ஒரு 7 மணி வாக்கில் ஆரம்பம். எனக்கு ஒரு பக்கம் வீட்டை நினைத்து பயம். மறு புறம் ஒரு விதமான ஆர்வம். 

கொரிக்க சிப்ஸ், பகொடா, காரக் கடலை எல்லாம் இருந்தது. அப்பொழுதுதான் வாந்தி வராதாம்.. எனக்கு ஒரு க்ளாஸ் கொடுத்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கச் சொன்னார்கள். குடித்து முடிந்ததும் தலை கிர் என்று சுற்றியது. மயக்கம் வந்தது. உடனே வாந்தியும் வந்தது.  

கழிவு அறைக்குச் சென்று எல்லாவற்றையும் வாந்தி எடுத்தேன். தலை வலி பயங்கரமாக  இருந்தது. அப்படியே படுத்து விட்டேன். ஒரு மணி நேரம் கழித்து எழுந்தேன். தலைவலி நிற்க வில்லை. மயக்கம் குறைந்து இருந்தது. இரவு மணி 9 ஆகிவிட்டது. பஸ் பிடித்து வீடு போக நேரம் ஆகிவிடும். மனைவி கோபப் படுவாள். என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தேன். 

நண்பன் ஒருவன் என் வீட்டுக்கு அருகில் இருக்கிறான். மோட்டார் சைக்கிளில் வருவான். மயக்கம் காரணமாக அவனால் வண்டி ஒட்ட முடியவில்லை.அவனை வீட்டில் கொண்டு போய் விட முடியுமா என்று கேட்டான். சரி என்று அவனைப்  பின்னால் வைத்துக் கொண்டு, அவன் வீட்டில் விட்டு விட்டு, என் வீடு வந்தேன். 

ஒன்றும் பேசாமல், சாப்பாடு வேண்டாம் என்று கூறி விட்டுப் படுக்கையில் விழுந்தேன். மறுநாள் காலை எழுந்த உடன் மனைவி ஒன்றும் கேட்க வில்லை. ஏதோ குற்றம் செய்தது போல இருந்தது. அதன் பிறகு 36 வருடங்களில் ஒரு முறை கூட மது குடித்தது கிடையாது. மதுப் பழக்கம் வராமல் தப்பியது இறைவன் அருள்.

யாராவது குடித்தவர் அருகில் இருந்தால் வாந்தி வந்து விடும். இதை ஏன் குடிக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கும். மதுவை அதிகம் குடிக்காமல் இருந்த தமிழ் நாட்டில் பலர் குடிக்க ஆரம்பித்தனர். அதிலும் ஏழைகள் அதிகமாக குடிக்க ஆரம்பித்தனர்.  எனக்கு தெரிந்த காரணத்தை சொல்கிறேன்.

வெளி நாட்டில் வயது வந்த ஆணும் பெண்ணும் மது அருந்துகிறார்கள். ஆனால் அவர்கள் குளிருக்காக, உடல் நலம் கருதி சிறிய அளவு குடிக்கிறார்கள். ஆனால் நாம் குடிப்பது அது தரும் மயக்கதிற்காக. மயக்கம் குறையக் குறைய அளவு அதிகம் ஆகிறது. அதனால் வார்நிஷ் போன்ற அதிக மயக்கம் தரும், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களைக் குடிக்கிறார்கள்.

அந்தக் காலத்தில் சினிமாவில் குடிப்பது போல் காட்ட மாட்டார்கள். காதலில் தோல்வி, வாழ்க்கையில் தோல்வி என்றால் குடிப்பது போல் காட்டுவார்கள். இப்பொழுது அப்படி இல்லை. குடிப்பதே தொழில். குடிக்கும் காட்சி இல்லாமல் ஒரு சினிமா கிடையாது. நம் நாட்டிற்கு மது ஏற்றதல்ல. குடிப்பதை உடனே நிறுத்த வேண்டும். அது வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு.

No comments :

Post a Comment