Sunday, November 5, 2017

ராமன் எத்தனை ராமன் ?

காலை மணி ஆறு . எழுந்தவுடன் பல் விளக்கி, முகம் கழுவி சாப்பாட்டு மேஜைக்கு வந்தேன். என் மனைவி காப்பி கொடுத்தாள். "அப்பாவிற்கு" என்றேன். "இன்னம் எழ வில்லை" என்றாள். 

காப்பியுடன் மெதுவாக அவர் அறைக் கதவைத் திறந்து உள்ளே சென்றேன். அப்பொழுதான் விழித்திருப்பார் போல. என்னை பார்த்து மெலிதாக புன்னகை செய்தார். அந்த அழகே தனி. 


பணம், வசதி, நல்ல வகையான கவனிப்பு, சாப்பாடு, நிம்மதியான உறக்கம் மட்டும் தாய், தகப்பனை சந்தோஷப்படுத்தாது. அதற்கும் மேலே தன் பிள்ளைகளிடம் அவர்கள் எதிர்பார்ப்பது.


காப்பியை பக்கத்தில் வைத்துவிட்டு, அவரது வலுவற்ற புஜங்களுடன் சேர்த்து அணைத்து கையைப் பிடித்து நிற்க வைத்தேன். 85 வயதிலும் எல்லாம் தானே செய்து கொள்ள விரும்புவார். பிறர் உதவி பிடிக்காது, என்னைத் தவிர.  


என் மீது அவருக்குத் தனிப் பாசம் உண்டு. ஏன் என்றால் நான் ஒரு மகன் தான். மற்ற இருவரும் பெண்கள். அம்மா இல்லை. எழுந்து பல் விளக்கி நாற்காலியில் அமர்ந்தார். காப்பியைக் கொடுத்தேன். 


அவர் கைக்கு தாங்குவது போல் சூடு இருந்தது. அவரிடம் எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி எதுவும் கிடையாது. அவர் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். எனக்கு ஒரு ரோல் மாடல்.


குடித்து முடித்ததும் இரவு தூக்கம் பற்றி விசாரித்தேன். என்னப்பா, எப்படி இருக்கீங்க? சாப்பாடு டேஸ்டா இருக்கா? பேரன்,பேத்திகள் ஏதும் உங்களுடன் பேசினார்களா? இன்றைக்கு  உங்க பிறந்த நாளுப்பா! நான் ஆபிசுக்கு லீவு போட்டிருக்கேன்பா.


அதான் உங்களுக்குப் பிடிச்ச லைட் ரோஜா கலர்ல ஒரு சட்டை, சிம்பிளா ஒரு 4 முழ வேஷ்டி வாங்கியிருக்கேன். உங்க பிறந்த நாளுக்கு, காலைல நம்ப தெரு பிள்ளையார் கோவிலில் காலை, மதியம் இரண்டு வேளை அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்திருக்கேன்.


சாயந்திரம் உங்களுக்கு புது கண்ணாடியும், நீங்கள் கேட்ட புத்தகமும் ஆர்டர் பண்ணி இருக்குப்பா. அவருக்கு பிடித்த பால் பாயசம் மனைவி செய்து இருந்தாள். அவர் குளித்த பின் கிளம்ப வேண்டும். வாளியில் சரியான சூட்டில் சூடுநீர் வைத்து விட்டு டவல்ஐ  கொடுத்து குளியல் அறைக்கு அனுப்பி வைத்தேன். 


நான் செய்த ஏற்பாடுகளை கேட்டு மனதில் சந்தோஷப் படுவார். அன்ன தானம் அவருக்கு மிகவும் பிடிக்கும். ஏழைகளை கண்டு இறங்கும் குணம் அவரது.  என் கையைப் பிடித்துக் கொண்டு சோபாவில் வந்து அமர்ந்தார். மூக்குக் கண்ணாடியைத் துடைத்து விட்டு அவருக்குப் போட்டு விட்டேன். இதோ இன்னம் சிறிது நேரத்தில் கிளம்ப வேண்டும். அப்புறம் பார்க்கலாமா?

No comments :

Post a Comment