Saturday, November 4, 2017

நான் கிடந்து முழிக்கிறேன்.

காலை மணி 5. விழிப்பு வந்து விட்டது. சரியான தூக்கம் இல்லை. வெறும் கோழி தூக்கம் தான். 6 மணிக்கு மற்றவர்கள் எழுந்து காப்பி கொடுக்கும் வரை காத்திருக்க வேண்டும். நானே போட சோம்பல், இஷ்டமில்லை. 

மணி ஆறு. காப்பி குடிச்சாச்சு. இனி கடவுளை வேண்டிக் கொண்டிருந்தால் காலைக் கடன் வரும்.  நடைப் பயிற்சி போனால்  கால் வலிக்கிறது. செய்தித் தாள் படிக்கலாம் என்றால் முடியவில்லை. எழுத்து பொடிப் பொடியாக இருக்கு.


பின்பு குளியல். தியானம்  பண்ணலாம் என்றால் அதிக நேரம் உட்கார முடியவில்லை. முதுகு வலிக்கிறது. மனம் அதில் ஈடுபட மறுக்கிறது. பக்தி கொஞ்சம் கூட வர மாட்டேன் என்கிறது. 11 மணி வாக்கில் சாப்பாடு. 


தினம் சாம்பார், பொரியல், மோர். அலுத்து விட்டது. வேறு சாப்பிட்டால் வயிறு ஒத்துக் கொள்ளாது. உண்ட மயக்கம். படுத்த உடன் தூக்கம் வராது. புத்தகத்தை எடுத்துப் படித்தால் தூக்கம் வரும். புத்தகத்தை மூடினால்  தூக்கம் போய் விடும். 


படிக்கலாம் என்றால் எழுத்து பொடிப் பொடியாக இருக்கு. படித்தால் தலை வலி வருகிறது. மதியம் 2 மணிக்கு காப்பி. பின் மாலை 4 மணிக்கு இட்லி அல்லது தோசை. வேறு கிடையாது. அதுவும் அலுத்து விட்டது. 


முகநூலைப் பார்க்கலாம் என்றால் எல்லாம் போர். ஒரே அரசியல், சினிமா, பிரச்சனை, வாக்குவாதம். கருத்தை கவரும்படியாக எதுவும் இல்லை. இரவு மணி 8. அதே சாம்பார், பொரியல், மோர். என்ன செய்வது என்றே தெரிய வில்லை. 


72 வருடங்கள் ஓடிவிட்டன. தினம் இப்படியே இன்னும் எவ்வளவு நாட்கள் போகணும். வெளியே போக முடியாது. வழி தெரியாது, காது கேட்காது, பாஷை தெரியாது. வீட்டிற்கு உள்ளே இருக்க கஷ்டமாய் இருக்கு. பகவான் கருணை வேண்டும். 


பற்கள் இல்லை, காது கேட்க வில்லை. கண் சரியாகத் தெரியவில்லை. உணவு ஜீரணம் ஆகவில்லை. எல்லோரும் சந்தோஷமாக இருப்பது போலவும் நான் மட்டும் கஷ்டப் படுவது போலவும் தோன்றுகிறது.


அவர்கள் கஷ்டம் அவர்களுக்கு. அவர்கள்  வேலையை அவர்கள் பார்க்கிறார்கள். எனக்கு விடிவு காலம் எப்பொழுது வரும் ? காலம் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். நான் கிடந்து முழிக்கிறேன்.














No comments :

Post a Comment