Saturday, October 6, 2018

வானப்பிரஸ்தம்

உலகியலில் ஈடுபடும் ஒரு மனிதனின் வாழ்க்கையை பிரம்மசரியம், கிருஹஸ்தாசிரமம், வானப்பிரஸ்தம் என மூன்று கட்டங்களாகப் பிரித்திருந்தார்கள். அதாவது கல்விப்பருவம், இல்லறப்பருவம், துறவுப்பருவம். 

இதைத்தவிர சன்னியாசம் என்று ஒரு பருவம் உண்டு. அது உலகியலைத் துறந்து செல்பவர்களுக்கு உரியது. இவை நான்கு ஆசிரமங்கள் என்று சொல்லப்பட்டன. நான்கனுள் மனைவியுடன் காட்டிற்குச்சென்று தவம் செய்யும்நிலை வானப்பிரஸ்தம்


எந்த ஒரு மனிதனும் இந்த மூன்று கட்டங்கள் வழியாகக் கடந்து சென்றால்தான் அவன் வாழ்க்கை முழுமை அடையும் என்று விஷ்ணுபுராணம் மூன்றாம் பருவம் ஒன்பதாம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.


வானப்பிரஸ்தம் என்பது ஒருவகைத் துறவு. அதுவரை செய்துவந்த உலகியல் சார்ந்த விஷயங்கள் எல்லாவற்றில் இருந்தும் முழுமையாக விடுபட்டு, தன்னுடைய மனநிறைவுக்குரிய செயல்களை மட்டுமே செய்தபடி வாழ்வதுதான் அது.


பழங்காலத்தில் காட்டுக்குச் சென்றுவிடுவார்கள். இன்றைக்கு காட்டுக்குச் செல்லமுடியாது. இன்றைக்கு நவீன மருத்துவம் வளர்ந்துவிட்டது. ஆகவே மக்களின் ஆயுள் நீள்கிறது. சாதாரணமாக எண்பது தொண்ணூறு வயது வரை வாழ்கிறார்கள். 


ஆனால் அறுபது வயதில் தொழிலில் இருந்து ஓய்வுபெற வேண்டியிருக்கிறது. அதன்பிறகும் முப்பது வருட வாழ்க்கை மிச்சமிருக்கிறது. ஆகவே ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் துறவு தேவை. அதைத்தான் வானப்பிரஸ்தம் என்கிறார்கள்.


பிள்ளைகள் வளர்ந்து அவர்களும் குடும்பவாழ்க்கைக்கு வந்ததும் ஒருவன் அதற்கு மேலும் வாழ்க்கையில் ஒட்டிக்கொண்டிருக்கக் கூடாது. அது அவனுக்கும் கஷ்டம் பிள்ளைகளுக்கு அதைவிடக் கஷ்டம். அவன் தன் மனைவியை பிள்ளைகளிடம் ஒப்படைத்துவிட்டு குடும்பவாழ்க்கையை விட்டு முழுமையாக விலகிவிடவேண்டும். 


அதற்குப்பெயர்தான் வானப்பிரஸ்தம். வனம்புகுதல் என்று பொருள்.

மனைவியும் வானப்பிரஸ்தம் வர விரும்பினால் அவளையும் கூட்டிக்கொண்டு செல்லலாம். வானப்பிரஸ்தம் என்பது ஒருவகைத் துறவு.

தனியாக ஒரு அறையில் தங்கி, தனது துணிகளை தானே துவைத்து, நடைப் பயணம், தியானம், யோகா முதலியன செய்து, தனது உணவைத் தானே சமைத்து உண்டு, நல்ல புத்தகங்களைப் படித்து, பள்ளிச் சிறுவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து, குடும்ப சம்பந்தம் இல்லாமல் தனது வாழ்க்கையை தானே வாழ்தல் வானப்ரஸ்தம் எனப்படும்.  


No comments :

Post a Comment