உத்தியோகத்தில் இருக்கும் போது வாழ்க்கையில் பணத்தைத் தேடுகிறோம். அதன் பிறகு வாழ்க்கையில் நிம்மதியைத் தேடுகிறோம். இரண்டுமே கிடைப்பது அதிர்ஷ்டம். இறைவனின் ஆசீர்வாதம்.
உத்தியோகத்தில் இருக்கும் போது ஒருவருக்கு நிகழ்காலமும் எதிர்காலமும் உண்டு. ஆனால் ஓய்வு பெற்ற பிறகு இறந்த காலமும் நிகழ்காலமும் தான் உண்டு. எதிர்காலம் கிடையாது.
உத்தியோகத்தில் இருக்கும் வரை சுறுசுறுப்பாக நேரமில்லாமல் இருந்தவர் ஓய்வு பெற்ற பிறகு வேலை வெட்டி எதுவும் இல்லாமல் நேரத்தை எப்படி கழிப்பது என்று தவிக்கிறார். அவர்களுக்கு எப்போதும் "ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே" தான்.
சில புத்திசாலிகள் தனது நிலையைப் புரிந்து கொண்டு பூஜை, தியானம், யோகா, கோயில், புத்தகம், பிரயாணம், நடை, செய்தித்தாள், இசை, சினிமா என்று நேரத்தை செலவு செய்கின்றனர்.
அவர்களைப் போல நேரத்தை செலவழிக்கத் தெரியாமல் கஷ்டப் படுகிறவர்கள் வேறு வழி இல்லாமல் தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களைப் பிறரிடம் பகிர்ந்து கொள்ள ஆவலாய் இருப்பார்கள்.
சிலருக்குப் பேசத் தெரியும். சிலருக்குப் பேச வராது. பொறுமையாகக் கேட்க வேண்டும். விவாதம் செய்யக் கூடாது. சண்டை போடக் கூடாது. அவருடைய சந்தோஷம் தான் முக்கியம் என நினைக்கவேண்டும்.
அவர்களுடன் பேசுவது, அவர்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வது அவசியம். இல்லை என்றால் அவர்களுக்குப் பலவித மன நோய்கள் வருவதற்கு வாய்ப்புண்டு. செலவும் கஷ்டமும் அதிகமாகும்.
குடும்பத்தில் உள்ள நெருங்கியவர்கள் தான் அவருடன் கவலையுடனும், இரக்கத்துடனும் பேசி அவருக்குப் பொழுது போக உதவ முடியும். இல்லையென்றால் முதியோர் இல்லத்திற்கு அனுப்ப வேண்டும்
பிறகு அவர் வாழ்க்கை நரககமாகி பல நோய்களுக்கு ஆளாகி தானும் கஷ்டப் பட்டு பிறரையும் கஷ்டப் படுத்தி கடைசியில் நொந்து நூலாகி ஒருவிதமாக இறைவனடி சேருவார்.
குடும்பத்துக்காகத் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் செலவு செய்த ஒருவருக்கு நாம் காட்டும் நன்றிக் கடன் இதுதானா என்று யோசிக்க வேண்டும். எதை நாம் விதைக்கிறோமோ அதுதான் விளையும்.
இதனால் நமக்குக் குறைவு ஒன்றும் ஏற்படப் போவதில்லை. அவருடைய ஆசீர்வாதமும் சந்தோஷமும் நமக்கு என்றும் நன்மையே தரும். நமது குழந்தைகள் மனதில் அழுத்தமாகப் பதியும். சிறிது யோசியுங்கள்.
என் குழந்தைகள் பிஸி, அவர்களுக்குப் பேசத் தெரியும், ஆனால் அதிகம் பேசுவதில்லை.. நான் பொழுது போகாமல் கஷ்டப்படும் போது என் அருகில் வந்து பேசத் தூண்டுவார்கள். நான் பேசுவதை மிகுந்த ஆர்வத்துடன் கேட்பார்கள்.
நானும் ஏதாவது பழைய கதைகள் அல்லது புதிய கதைகள் என்று எனக்குத் தோன்றியதை உளருவேன். அவர்களும் மிக சுவாரசியமாக பங்கு கொள்வார்கள். என் மனதில் அழுத்தம் குறையும், சந்தோஷம் உண்டாகும்.
No comments :
Post a Comment