Saturday, August 4, 2018

நான் சொல்வது சரிதானே.

நான் இது மூன்றாவது தடவை அமெரிக்கா வருகிறேன். 2013ல் முதல் தரம், 2015ல் இரண்டாம் தரம் 2018ல் மூன்றாம் தரம். இன்னும் எவ்வளவு தரம் என்று தெரியவில்லை.

முதல் தடவை மிகப் பிரமாதமாக இருந்தது. இரண்டாம் தடவை மஹா போர். மூன்றாவது தடவை மஹா மஹா போர். அடுத்த தடவை எப்படி இருக்குமோ.


நாடு அழகாகத் தான் இருக்கிறது. அதில் குறைவில்லை. அதில் எனக்கென்ன இலாபம். எனக்குப் பிடிக்கவில்லை. வேறு வழி இல்லை. மகள் இங்கு இருக்கும்வரை வராமல் இருக்கமுடியாது. 


பிறர் தயவு இல்லாமல் பத்து அடி கூட போக முடியாது. நம் இஷ்டத்துக்கு ஒரு கடலை மிட்டாய் வாங்கித் தின்ன முடியாது. ஒரு கரும்புச்சாறு வாங்கிக் குடிக்க முடியாது.


எங்கு போவதாக இருந்தாலும் காரில் தான் போக வேண்டும். எந்த இடமும் பத்து கிலோ மீட்டர் தொலைவில் தான் இருக்கும். இரண்டு தடவை போனால் அலுத்து விடும். ஒரே எந்திர வாழ்க்கை.


மகள், மாப்பிள்ளை, பேரன்கள் எல்லோருக்கும் துளியும் ஓய்வு கிடையாது.. அவர்கள் வேலையை பார்த்துக் கொண்டு இருப்பார்கள். பேசுவதும் அதிகம் கிடையாது.  என்னால் பேசாமல் இருக்க முடியாது. 


எல்லா இடமும் ஏற்கனவே பார்த்து அலுத்து  விட்டது. அமெரிக்கா இந்தியாவைப் போல நான்கு மடங்கு பெரியது. எல்லா இடங்களையும் பார்ப்பது என்பது இயலாத காரியம். நேரமும் செலவும் மிக அதிகமாகும்.


புத்தகம் படிக்கலாம், மடிக் கணனி பார்க்கலாம், பாட்டு கேட்கலாம். தூங்கலாம். அவர்கள் உண்ணும் நேரம்,  உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை வேறு. எங்களது வேறு. நாங்கள் இந்தியன் அவர்கள் அமெரிக்கன்.


மகளிடம் இருக்க வேண்டும் என்பதற்காக வர வேண்டி உள்ளது. சொல்லப் போனால் ஆரோக்கியம் நன்றாக இருந்தால் 2020இலும் இன்னொரு முறை வந்தாலும் வரலாம்.


வயதாகி மகன், மகளுடன் இருக்கும் போது நம்முடைய சௌகரியத்தை பார்க்க முடியாது. அவர்களுடைய விருப்பத்தை பூர்த்தி செய்வது தான் முக்கியம். 


புழல் என்றும் வேலூர் என்றும் நான் குறிப்பிடுவது சிறையை அல்ல. சுதந்திரத்தை இழப்பதை.  ஐம்பது வருடங்கள் சுதந்திரமாக வாழ்ந்து விட்டு பிறகு அதை இழப்பது வருந்துவதற்கு உரியது. 


நல்ல வேளை என் குழந்தைகள் நல்லவர்களாக இருக்கிறார்கள். இல்லை என்றால் நரகம் தான். இறைவன் எப்போது நிரந்தர சுதந்திரம் தருவார் என்று தெரியவில்லை.


என்னை மாதிரி வயதானவர்களுக்கு இந்த இடம் சௌகரியப் படாது. எப்போது ஊருக்குப் போவோம் என்று இருக்கும். உடனே கிளம்ப முடியாது. அதிகம் செலவு ஆகும். 


ஊருக்குப் போனால் எப்போது வருவோம் என்று இருக்கும். வந்தால் எப்போது போவோம் என்று இருக்கும். மனிதன் புத்தி குரங்கு புத்தி. என்ன நான் சொல்வது சரிதானே.

No comments :

Post a Comment