Monday, August 13, 2018

விடிகிற போது விடியட்டும்.

1. நமது  நாட்டின் முன்னேற்றத்தைப் பெருமளவு கெடுப்பது லஞ்சமும் ஊழலும்  கறுப்புப் பணமும் தான். அதனை ஒழித்து விட்டால் எங்கும் சுபிக்ஷம் நிலவும். நிம்மதி பெருகும். வளம் கொழிக்கும். மகிழ்ச்சி உண்டாகும்.

2. லஞ்சம், ஊழலை ஒழிப்பதற்கு அல்லது குறைப்பதற்கு வழி சொல்லாமல், வீணாக மற்றவர்களைக் குறை சொல்வதால் எவ்விதப் பலனும் இருக்கப் போவதில்லை.


3. ஒரு தனி மனிதன் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் போது அல்லது அதன் தலைமையில் இருக்கும் போது தான் ஊழலும் லஞ்சமும் ஆரம்பம் ஆகின்றன என்பது என் கருத்து.


4. ஒரு பட்டத்தை பறக்க விடும் போது அது மேல் காற்றுக்கு சென்று விட்டால் பிறகு தடுமாறாது. நிலையாக இருக்கும்.. கீழ்க் காற்றின் வேகம் அந்தப் பட்டத்தை ஒன்றும் செய்யாது. 


5. அதே போல, கட்சி அரசியலில் ஒருவர் மேல் நிலையை அடையும் போது அவருக்கு தனி சக்தி வந்து விடுகிறது.  அவரை சுலபமாகப் பதவியில் இருந்து நீக்க முடிவதில்லை. 


6. அதனால் எல்லோரும் அவரைக் கண்டு பயப்படுவார்கள். இந்த பயத்தை மனதில் விதைத்த பின், அவர் எது வேண்டுமானாலும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம்.


7. உடனே எல்லோரும் தங்கள் சுய லாபதிற்காக அவரைப் புகழ ஆரம்பிப்பார்கள். மற்றவர்களும்  பைத்தியம் போல அவர்களைப் பின் பற்றுவார்கள். இதை மாற்ற முடியாது.


8. இதுதான் நடைமுறையில் நாட்டில் நடப்பது. இந்த நிலமை எல்லா நிலைகளிலும்  இருக்கிறது. அவர் காலம் முடியும் வரை இது தொடரும். 
இதை மாற்ற என்னதான் வழி ?

9. எல்லா அரசியல் கட்சிகளையும் கலைத்து விட்டு, தொழிலாளர், ஜனநாயகம், குடியரசு என்ற மூன்று கட்சிகள் மட்டும் நம் நாட்டில் இருக்க வேண்டும். வேறு கட்சிகள் எதுவும் இருக்கக் கூடாது.


10. ஒவ்வொரு கட்சியும் பத்து பேர்கள் அடங்கிய குழுவால் ஜனநாயக முறையில் நிர்வகிக்கப் பட வேண்டும். மெஜாரிடீ முறையில் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட வேண்டும்.


11. அகில இந்தியாவில் இருந்து பல துறைகளில் சிறந்து விளங்கும் வல்லுநர்கள் 50 பேர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் வசம் நாட்டை ஆளும் பொறுப்பைக் கொடுக்க வேண்டும்.


12. தேர்தல் முறை, அரசாங்க அமைப்பு, எல்லாம் பழையபடியே தொடர்ந்து இருக்கலாம். ஆனால் தீர்மானங்கள் 50 பேர்கள் அடங்கிய குழுவின் ஒப்புதல் பெற வேண்டும்.


13. தேர்தல் செலவுகளைக் கட்சி தான் செலவு செய்ய வேண்டும். கட்சி தான் கணக்குக் காட்ட வேண்டும். தனி நபர் எந்த செலவும் செய்யக் கூடாது. செலவு செய்தால் அவர் தேர்தல் செல்லாது.


14. யாரும் எந்தப் பதவியிலும் ஐந்து வருடங்களுக்கு மேல் இருக்கக் கூடாது.  குடும்ப நபர்களும் வேறு எந்தப் பதவியிலும் இருக்கக் கூடாது. பதவி முடிந்ததும் அரசியலை விட்டு விலக வேண்டும்.


15. எல்லா அலுவல்களும் கணனி முறையில் மாற்றப் பட வேண்டும். அரசாங்க அலுவல் நேரத்தில் தனியார் யாரும் அலுவலகத்தில் நுழையக் கூடாது. நுழைந்தால் கைது செய்யப் பட வேண்டும்


16. நாட்டின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்ட நல்லவர்கள் ஒன்று சேர்ந்து இதை உச்ச நீதி மன்றத்தில் உடனே கவனிக்க வேண்டிய  ஒரு வழக்காகத்  தொடர வேண்டும்.


17. நான் ஒரு பைத்தியம். இதெல்லாம் நடக்கப் போவதில்லை, யாரும் இதைப் படிக்கப் போவதில்லை  என்று தெரிந்தே இதை எழுதுகிறேன். ஏதோ ஒரு சபலம். ஊதுகிற சங்கை ஊதுகிறேன், விடிகிற போது விடியட்டும்.

No comments :

Post a Comment