Friday, July 13, 2018

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே

1960 ஆம் ஆண்டு, எனக்குப் பதினைந்து  வயது. எனது அம்மா வழிப் பாட்டி தாத்தாவுடன் தங்கி பள்ளி இறுதி வகுப்பு [SSLC] படித்துக் கொண்டிருந்தேன். தாத்தாவிற்கு நிலம் நீச்சு எல்லாம் உண்டு. நெல், உளுந்து, பயறு முதலியன அறுவடை ஆகும். 

அறுவடை நாட்களில் நானும் என் சகோதரனும் வயலுக்குச் சென்று மேற்பார்வை பார்ப்பது எங்கள் வேலை. அறுவடையான பொருட்களை திருட்டுப் போகாமல் இருக்க இரவில் களத்து மேட்டில் திறந்த வெளியில் படுத்துக் காவல் காக்க வேண்டும்


மறுநாள் எல்லாப் பொருட்களையும் மூட்டையாகக் கட்டி வண்டியில் ஏற்றி வீட்டுக்குக் கொண்டு வந்து ஹாலில் கொட்டி வைப்போம். தினம் அதை ஒரு கூடையில் அள்ளி, வாசலில் தெருவில் வெய்யிலில் காய வைக்க வேண்டும்.


காய வைத்த தானியங்களை மறுபடியும் மாலையில் வீட்டுக்கு உள்ளே கொண்டு செல்ல வேண்டும். இது மாதிரி பல தடவை செய்து நன்றாகக் காய்ந்த பின்பு நெல்லை பத்து அடி உயரத்தில் உள்ள நெல் களஞ்சியத்தில் ஏற்ற வேண்டும்.


நெல்லை ஏற்றுவதற்கு முன்பு களஞ்சியத்தில் சுற்றி தரை ஓரமாக நெல் படுதைகளை விரித்து பிறகு நெல்லைக் கொட்ட வேண்டும். அரை அரை மூட்டையாக தோளில் சுமந்து ஏணியில் ஏறிக்  கொட்ட வேண்டும். அவ்வளவு நெல்லையும் கொட்டுவதற்குள் உடல் முழுதும் நெல் புழுதி படிந்து அரிக்கும்..


தேவையான போது கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து நெல் மஷினுக்கு எடுத்துச் சென்று அரைத்து அரிசியாக வீட்டிற்குக் கொண்டு வர வேண்டும். அரிசியைத் தவிர குறுணை, தவிடு ஆகியவற்றைத் தனியாக வைக்க வேண்டும்.


அரிசியில் பலவகை சாதங்களும், குறுனையில் நொய்ப் பொங்கல், உப்புமாவும், சமைப்பார்கள்  தவிடை புன்ணாக்கு, பருத்திக் கொட்டை ஆகியவற்றுடன் தண்ணீரில் கலந்து மாட்டிற்குத் தீவனமாகக் கொடுப்பார்கள். எங்கள் வீட்டில் இரண்டு பசு மாடுகள் உண்டு. 


ஒன்று வெள்ளை மற்றது செவலை. விடுமுறை நாட்களில் தொழுவத்தை சுத்தம் செய்து, மாடுகளைக் குளிப்பாட்டி, பொட்டு வைத்து, சாம்பிராணி காட்டி, காய்கறி, வாழைப்பழ தோல், தவிடு, புன்ணாக்கு, பருத்திக் கொட்டை முதலியவற்றை உண்ணக் கொடுப்போம்.


ஒன்று லக்ஷ்மி, மற்றது கல்யாணி. கூப்பிட்டால் ஓடி வரும். வாஞ்சையுடன் கையை நக்கிக் கொடுக்கும். காலையும் மாலையும் கோனார் வந்து பால் கறந்து கொடுப்பார். பாட்டி அப்பொழுதான் கறந்த நுரைப் பாலை தினமும் எங்களுக்குக் குடிக்கக் கொடுப்பார்கள்.


சில சமயங்களில் மாடுகள் ஓயாமல், நிறுத்தாமல் தொண்டை கிழியக் கத்தும். கேட்கப் பரிதாபமாயும், நாராசமாயும் இருக்கும். பாட்டியிடம் கேட்டால் அது உம்மாச்சியைப்  பார்த்துக் கத்துகிறது என்பார். பாட்டி சொல்வதை உண்மை என்று நம்புவேன்.


பிறகு கோனார் வந்து பத்து ரூபாய் வாங்கிக் கொண்டு அதைக் கூட்டிச் சென்று கத்துவது நின்ற பிறகு கொண்டு விடுவார். அது உம்மாச்சியைப்  பார்த்து விட்டது என்று நினைப்பேன். ரொம்ப வருடம் கழித்துத் தான் எனக்கு அது ஏன் கத்தியது என்று புரிந்தது..


அரை நீஜார் மட்டும் அணிந்து மேல் சட்டை அணியாமல் வேர்க்க விறுவிருக்க வேலை செய்ய வேண்டும். ஒவ்வொரு தடவையும் வேலை முடிந்த பிறகு, நன்றாகக் குளித்து விட்டு வந்தால் பாட்டி சாப்பாடு போடுவார்கள். 


பொன்னி பச்சரிசியின், பழைய சாதத்தில், தாளிதம் செய்து, உப்புப் போட்டு, ஆடையுடன் பசுவின்  தயிரைக் கலந்து, நன்கு பிசைந்து, மாவடு, நாரத்தங்காய் ஊறுகாய், பழைய வத்தல் குழம்புடன் கையில் போடுவார்கள் பாருங்கள். சொர்க்கம் தெரியும்.


இன்று ஓரளவு ஆரோக்கியமாக இருப்பதன் காரணம் அன்று சாப்பிட்ட சாப்பாடும் உழைப்பும் தான். அதில் சந்தேகம் எதுவும் ல்லை. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே, இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே ஏன் நண்பனே?

No comments :

Post a Comment