Sunday, December 3, 2017

நான் ஒரு விற்பனையாளன்

1967 இல் நான் முதல் முதல் சென்னையில் காலடி எடுத்து வைத்த பொழுது, முதலில் கிடைத்த வேலை ஒரு துணி கடையில். காலை 9 முதல் 1 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் வேலை. உயிர் போய் உயிர் வரும். எப்பொழுது வேலை முடியும் என்று இருக்கும்.

உட்காரவே முடியாது. துணிகள், உடைகள் எடுத்துப் போடுவதிலும் பிறகு வாடிக்கையாளர் பார்த்து விட்டுப் போன பின் அதை திரும்பவும் மடித்து அதன் இடத்தில் வைக்கவும் நேரம் சரியாக இருக்கும். துணிகளைப்  பார்த்து விட்டு வாங்காத வாடிக்கையாளர் மீது கோபம் கோபமாக வரும்.


ஓய்வாக இருக்கும் பொழுது, மேஜையின் மேல் சிறிது சாய்ந்து கொள்ளலாம். கால்கள் இரண்டும் கடுக்கும். வேலையை விட்டு விட்டு ஓடிப் போய் விடலாமா என்று தோன்றும். போனால் சோற்றுக்கு என்ன வழி? பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். என்  விதி அப்படி.


பல வருடங்கள் கழித்து வாழ்க்கையில் வெற்றி அடைந்து, முன்னேறி குடும்பத்துடன் துணி  கடைக்கு போகும் பொழுது மலரும் நினைவுகள் மாதிரி பழைய ஞாபகங்கள் வரும். துணிகள் விற்கும் இடத்தில் நான் நிற்பது போல் தோன்றும். 


அங்கு நிற்கும் சிறுவனையோ சிறுமியையோ பார்க்கும் பொழுது பரிதாபமாக இருக்கும். என் மனைவி குழந்தைகளுக்கும் அவர்கள் கஷ்டத்தை விளக்கிக் கூறி இருக்கிறேன். அதனால் எப்பொழுது துணிகள் வாங்க கடைக்குச் சென்றாலும் சில தீர்மானங்களுடன் தான் போவோம். 


1.எவ்வளவு ரூபாய்க்கு வாங்கப் போகிறோம்? 2.யாருக்கு வாங்கப் போகிறோம்? 3. என்ன விலையில் வாங்கப் போகிறோம்? 4. என்ன கலரில் வாங்கப் போகிறோம்? 5. ஒன்று அல்லது இரண்டு கடைக்கு மேல் போகக் கூடாது. 6. பழைய உடை நல்ல நிலையில் இருந்தால் யாருக்குத் தானம் கொடுப்பது ?


இவைகளைத் தீர்மானம் பண்ணிவிட்டு கடைக்கு சென்று குறைந்த அளவு துணிகளைப் பார்த்து அதில் எது பிடிக்கறதோ அதை வாங்கிக் கொண்டு வருவோம். சிலரைப் போல கடையையே  புரட்டிப் போட்டு ஒன்றும் வாங்காமல் அடுத்த கடைக்கு போகும் பழக்கம் 
கிடையவே கிடையாது.

No comments :

Post a Comment