அவசியமில்லா நுகர்வு
``எங்கப்பா என்னைவிட குறைவாதான் சம்பாதிச்சார். வீட்ல மூணு பேரையும் நல்லாப் படிக்க வச்சு, அவங்களுக்கு வேண்டியதையெல்லாம் பண்ணிட்டு, கொஞ்சம் பணமும் சேமிச்சு சொந்தமா ஒரு வீட்டையும் கட்டிட்டு, கடன் இல்லாம நிம்மதியா வாழ்ந்தார்.
ஆனா, நான் அவரைவிட அதிகமா சம்பாதிக்கிறேன். ஹவுஸிங் லோன், கார் லோன், கிரெடிட் கார்ட்னு ஏகப்பட்ட கமிட்மென்ட்ஸ், வேலை டென்ஷன், ப்ரஷர்னு என்னால அவரைப்போல நிறைவா ஒரு வாழ்க்கையை வாழமுடியல...’’
இன்றைய தலைமுறைக்கு எவ்வளவு சம்பாதித்தாலும், ஐபோன், லக்ஸரி கார், அபார்ட்மென்ட் என எது இருந்தாலும் உண்மையான மகிழ்ச்சி இல்லை . அதைப் போக்கிக்கொள்ள மாரத்தான் ஓடுகிறார்கள்; பார்ட்டிகளில் ஆடுகிறார்கள்; நிறைய செலவழித்து இன்டர்நேஷனல் டூர்கூட போகிறார்கள்... மகிழ்ச்சி எங்கிருக்கிறது என்பது புரிபடவேயில்லை.
இப்படிப்பட்ட இளைஞர்கள தங்களுடைய 30-வது வயதில் ஆறு இலக்க சம்பளம், காஸ்ட்லி கார்கள், சகலவசதி வீடுகள், பார்ட்டி, கொண்டாட்டம் என வாழ்கிறார்கள். ஆனால், ஏதோ குறைவதை உணர்கிறார்கள். உழைத்த பணத்தில் எதை எதையோ வாங்கி, வாங்கிக் குவிப்பதும் மகிழ்ச்சியில்லை என்பதை உணர்கிறார்கள்.
புரிந்துகொண்ட நொடியில் "குறைந்தபட்சம்" என்கிற கான்செப்ட் பிறக்கிறது. பொருள்களை வாங்குவதுதான் மகிழ்ச்சி, என்கிற கருத்து தவறு. உண்மையில், பொருள்களை வாங்குவதில் மகிழ்ச்சியில்லை; அதை எந்த அளவுக்குப் பயன்படுத்துகிறோம் என்பதில் தான் இருக்கிறது.
"குறைந்தபட்சம்" என்றாலே கஞ்சப்பிசனாரி யாக வாழ்வது அல்ல. அவசியமானவற்றுடன் அளவாக வாழ்வது. உடலில் தேவையில்லாத கொழுப்பு சேர்ந்தால், நோய்கள் எப்படி வருமோ அதுபோலவேதான். இடநெருக்கடியில் தொடங்கி பணநெருக்கடி வரை அனைத்திற்கும் காரணமாக இருப்பது இந்த ‘அவசியமில்லா நுகர்வு’தான்.
அதென்ன அவசியமில்லா நுகர்வு?
நடந்துபோகிற தூரத்திற்கு காரில் செல்வது, எல்லோரும் வைத்திருக்கிறார்கள் என்பதற்காகவே அதிக விலைகொடுத்து செல்போன் வாங்குவது, இரண்டுபேர் வாழ கடனுக்காவது நான்காயிரம் சதுர அடியில் மிகப்பெரிய வீட்டை வாங்கிக்கொள்வது, அதில் அலங்காரத்திற்கென லட்ச லட்சமாய் செலவழித்துப் பொருள்களை அடுக்குவது எல்லாமே தேவையில்லா நுகர்வுதான்.
இதைப் பின்பற்றுபவர்கள் . அதிக நேரம், அதிக மகிழ்ச்சி, அதிக சேமிப்பு, அதிக படைப்பாற்றல் என தங்களுடைய வாழ்வில் அவசியமானதை அதிகப்படுத்திக்கொள்கிற வாழ்வையே வாழ்கிறார்கள்’’ நம்முடைய பெற்றோர்களும் முன்னோர்களும் அப்படித்தான் வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.
வீட்டில் தேவையில்லாமல் ஒரு பல்ப் எரிந்தால்கூட ஓடிச்சென்று அணைக்கிற பெரியவர்களை இப்போதும் நம் வீடுகளில் காண முடியும். அதுதான் நம்ம வீட்டு "குறைந்தபட்சம்". இதுபோன்ற சின்னச் சின்ன சேமிப்புகளின் வழிதான் அவர்கள் தங்களுடைய நிம்மதியான வாழ்வாகக் கட்டமைத்தார்கள்.
No comments :
Post a Comment