Thursday, November 1, 2018

நானும் எனது நெருங்கிய நண்பனும்.

1. நான் இளையவன். அவர் மூத்தவர்.

2. நான் ஐயர் அவர் முதலியார்.

3. நான் நல்ல நிறம். அவர் கோதுமை நிறம்

4. நான் சைவம் அவர் அசைவம்.

5. நான் பட்டதாரி. அவர் எஸ்எஸ்எல்ஸி.

6. எனக்கு இறை நம்பிக்கை உண்டு.  அவருக்குக் கிடையாது.

7. எனக்கு இனிப்பு பிடிக்காது.  அவர் இனிப்பு பைத்தியம்.

8. நான் சிக்கனம்.  அவர் செலவாளி.

9. எனக்கு இரண்டு குழந்தைகள். அவருக்கு மூன்று.

10. எனக்கு பெண் குழந்தை உண்டு.  அவருக்கு கிடையாது.

11. எனக்கு பெற்றோர் இருந்தனர். அவருக்கு இறந்துவிட்டார்கள்.

12. எனக்கு சம்பளம் ரூ 1000. அவருக்கு ரூ 1500.

13. அவர் சிவாஜி கணேசன் ரசிகர். எனக்கு குறிப்பாக யாரையும் பிடிக்காது.

14. அவர் கலைஞர் கருணாநிதியின் பக்தன். நான் பரமாச்சாரியரின் பக்தன். 

15. அவர் அரசியல் பேசுவார். நான் பேச மாட்டேன்

16. அவர் அரசியல் மீட்டிங் போவார். நான் போக மாட்டேன்.

17. நான் காமகோடி படிப்பேன் அவர் முரசொலி படிப்பார்.

18. நான் கடன் வாங்கமட்டேன். அவர் கடன் வாங்குவார்.

19. அவருக்கு பிராமணர்களை பிடிக்காது. எனக்கு எல்லோரையும் பிடிக்கும்.

20. அவர் டீ  கடையில் டீ குடிப்பார்.  நான் குடிக்க மாட்டேன்.

21. அவருக்கு ரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி உண்டு. எனக்குக் கிடையாது.

22. நான் உயிரோடு இருக்கிறேன். அவர் இறந்து விட்டார்.

நாங்கள் 1967 இல் இருந்து 1997 வரை முப்பது வருடங்கள் இணை பிரியாத தோழர்கள். இருவரும் சேர்ந்து பஸ் அல்லது சைக்கிளில் வருவோம். தினம் சந்திப்போம். பல விஷயங்களைப் பற்றி பேசுவோம். ஒரு நாள் கூட சண்டை போட்டது கிடையாது. ஒருவர் நம்பிக்கையில் ஒருவர் தலையிட்டது கிடையாது. ஒருவரை ஒருவர் மாற்ற முயற்சி செய்தது கிடையாது. அவரது இளைய மகனும் எனது மகளும் பொறியியல் கல்லூரியில் ஒரே வகுப்பு. இப்போது அவரை நினைத்தாலும் என் கண்கள் கலங்குகின்றன.


No comments :

Post a Comment