Saturday, November 3, 2018

அலமாரியில் இருந்து

1. ஆடி வெள்ளிக்கிழமை.

இன்று ஆடி வெள்ளிக்கிழமை. அதுவும் கடைசி வெள்ளிக்கிழமை. ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் எது தவறினாலும் என் மனைவி ஒரு பாயசம் செய்து இறைவனுக்கு நெய்வேத்யம்  செய்வது தவறாது. 


எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது. பிரசாதம் கருதி கொஞ்சம் சாப்பிடுவேன். இன்று ஜவ்வரிசி பால் பாயசம். சேமியா பால் பாயசமாக இருந்தால் குழந்தைகள் நூடுல்ஸ் போல விரும்பி சாப்பிடுவார்கள். 


எனக்கு திரு சாவியின் "வாஷிங்டன்இல் திருமணம்" நாவல் ஞாபகம் வந்தது. அமெரிக்கர்கள் ஜவ்வரிசியை ஃபோர்க் கொண்டு சாப்பிடும் கலாட்டாவை ரசித்தது நினைவுக்கு வந்தது.


2. வியாபாரத் திறமை.

கோதுமை, கேழ்வரகு, புழுங்கல் அரிசி, உடைத்த கடலை நான்கையும்  சம அளவில் தனித்தனியாக மிதமாக வறுத்து , கலந்து, சிறிது ஏலம் சேர்த்து மிஷினில் நைசாக அரைத்து, சலித்து, பாலில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் அவர்களுக்கு சக்தியும்,விட்டமீன்களும் நல்ல தாது பொருட்களும் கிடைக்கும். செலவும் குறைவு. 

அதையே ஒரு பாட்டிலில் அடைத்து, ஒரு வயதில் நாலு அடி வளர்வது போலவும், படிக்காமலேயே நூறு மார்க் வாங்குவது போலவும், ஒரே பந்தில் வீரட் கோலியை வீட்டிற்கு அனுப்புவது போலவும் காட்டி அநியாய விலையில் நம் தலையில் கட்டுவது தான் வியாபாரத் திறமை. நாம் எல்லோரும் வாங்குவோம்  என்று அவர்களுக்கு நன்றாகத் தெரிகிறது.

3. மூட நம்பிக்கை.

ஒரு ஜென் ஸந்யாஸி தியானத்தில் அமர்ந்தார். அப்போது ஒரு பூனை அங்கும் இங்கும் ஓடி அவருக்கு இடைஞ்சல் கொடுத்தது. அவர் தனது சிஷ்யர் ஒருவரை கூப்பிட்டு அந்தப் பூனையை  ஒரு தூணில் கட்டச் சொன்னார்.


சிறிது காலம் சென்று, அவர் இறந்த பிறகு அவருடைய சிஷ்யர் தியானம் செய்யும் போது அதே போல பூனையை தூணில் கட்டச் சொன்னார். 


பிறகு தியானம் செய்வதற்கு முன்பு பூனையைத் தூணில் கட்ட வேண்டும் என்ற நம்பிக்கை வழக்கத்திற்கு வந்தது.

4. சினிமாவில் நடிப்பது பல வகைப் படும். 


1. அளவாக நடிப்பது, 

2. அளவுக்கு மீறி நடிப்பது, 
3. இயக்குநர் சொல்லிக் கொடுத்தபடி நடிப்பது, 
4. சில படங்களில் மட்டும் சிறப்பாக நடிப்பது, 
5. சிறந்த கதையில் நடிப்பது, 
6. இயற்கையாகவே நடிப்புத் திறமை இருப்பது. 

அழகுக்கும் நடிப்புக்கும் துளியும் சம்பந்தம் இல்லை. தமிழ் திரைப்படங்களில் இயற்கையாகவே சிறந்த நடிப்புத் திறமை உள்ள என்னைக் கவர்ந்த பத்து நடிகர்கள் இவர்கள்.


1. டி. எஸ். பாலையா.
2. எஸ். வி. ரங்கா ராவ்.
3. எஸ். வி. சுப்பையா.
4. எம். ஆர். ராதா.
5. ஜே. பி. சந்திரபாபு.
6. நாகேஷ்.
7. வடிவேலு.
8. பிரகாஷ் ராஜ்.
9. எம். என். நம்பியார்.
10. மனோரமா.
உங்கள் அபிப்பிராயம் மாறுபட்டு இருக்கும் என்று எனக்கு நன்கு தெரியும்.

5. தீபாவளி மலரும் நினைவுகள் 


தீபாவளி அன்று காலை 4 மணிக்கு உங்களை கண்டிப்பாக எழுப்பி, கோலம் போட்ட ஒரு மரப் பலகையில் உட்கார வைத்து, மிளகு, மிளகாய், வெற்றிலை போட்ட நல்லெண்னை ஒரு ஸ்பூன் உங்கள் தலையில் வைத்து, வயதான பெண்மணி ஒருவர் கௌரி கல்யாணம் வைபோகமே என்று பாட, தீபாவளி களை கட்ட ஆரம்பிக்கும்.,


பிறகு நீங்கள் உடலில் எண்ணை தேய்த்து, வெந்நீரில் குளித்து, புதிய ஆடை அணிந்து, இறைவனைத் துதித்து, பெரியவர்களை நமஸ்காரம் செய்து, அம்மா கொடுக்கும் லேகியத்தை சாப்பிட்டு, பிறகு காரம், இனிப்பு சாப்பிட்டு, விடியும் வரை பட்டாசு வெடிக்கப் போய் விடுவீர்கள்.


இது மாதிரி நான்  ஒரு சிறுவனாக, பெரியவனாக, அண்ணனாக, கணவனாக, அப்பாவாக, தாத்தாவாக இதுவரை 65 தீபாவளிகளை சந்தித்து இருக்கிறேன். அந்த மகிழ்ச்சிகரமான நாட்கள் இனி திரும்பி வராது.

No comments :

Post a Comment