Saturday, September 8, 2018

வாழ்க்கை எனும் ஓடம்

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று  எனக்கு தமிழ் பற்று மிகுந்து இருந்த காலம் ஒரு காலம். கல்கியில் துவங்கி பல எழுத்தாளர்களின் படைப்புகளை ரசித்துப் படித்தது ஒரு காலம். தமிழ் சினிமாவைப் பார்த்து, ரசித்து, நேசித்து, மகிழ்ந்தது ஒரு காலம்.

தாயாருக்குக் கூட செந்தமிழில் மடல் வரைந்த காலம் ஒரு காலம். "அன்பும், அறிவும், ஆற்றலும் ஒருங்கே அமையப் பெற்ற அன்னைக்கு" என்று எழுதியது ஒரு காலம். நண்பன் டானியலுடன் நான் எழுதிய "களஞ்சியம்" என்ற தமிழ்க் கையெழுத்துப் பத்திரிக்கை ஒரு காலம்


கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, திருக்குறள் போன்ற தமிழ் நூல்களில் வரும் பாடல்களைப் படித்தது ஞாபகம் வருகிறது. பொதுத் தமிழ், சிறப்புத் தமிழ் ஆகிய இரண்டு பாடங்களிலும் வகுப்பில் முதல் மார்க் வாங்கியது ஞாபகம் வருகிறது.


அடுத்த தமிழ் வகுப்பு எப்போது வரும் என்று ஆவலுடன் காத்திருந்தது ஞாபகம் வருகிறது. தமிழ் ஆசிரியர் கேட்கப் போகும் கேள்விகளுக்கு சரியான பதில்களை மனப்பாடம் செய்து படித்தது ஞாபகம் வருகிறது. தமிழ் ஆசிரியரிடம் அடிக்கடி சந்தேகம் கேட்டது ஞாபகம் வருகிறது


பஞ்ச கச்சமும், ஜிப்பாவும் அணிந்து, குடுமியாகக் கட்டிய நீண்ட கூந்தலோடு வகுப்பீற்குள் நுழையும்  தமிழ் ஆசிரியர் புலவர் திரு ராதா கிருஷ்ணன் அவர்கள் ஞாபகம் வருகிறது. .கரகரத்த குரலில், செந்தமிழில் அவர் கம்பீரமாகப் பேசுவது காதில் விழுகிறது.


கூந்தல் அவிழ்ந்து தோளில் விழுந்தது தெரியாமல், வகுப்பின் குறுக்கேயும் நெடுக்கேயும் நடந்து "அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்" என்ற ஒரு வரியை ஒரு மணி நேரம் விவரித்த ஆசிரியர்  அவர்களைக் கண் கொட்டாமல் பார்த்தது ஞாபகம் வருகிறது.


இதெல்லாம் 1970ஆம் ஆண்டுக்கு முன்பு தான்.. அதன் பிறகு வாழ்க்கைச் சுழலில், ஆங்கிலத்தின் முக்கியத்தை உணர்ந்து, அதில் கவனம் செலுத்தி, அதைக் கற்று, பயிற்சி பெற்று மேலும் மேலும் வாழ்க்கையில் முன்னேற தமிழைத் தொலைத்தது ஒரு காலம். 


இப்போது தமிழிலும் ஆங்கிலத்திலும்  கற்றது எல்லாம் மறந்து விட்டன. தமிழிலும் புலமை இல்லை, ஆங்கிலத்திலும் புலமை  இல்லை. வயதாகி கண் பார்வை குறைந்து, காதும் கேட்காமல் போன பிறகு எதிலும் ஆர்வம் இல்லாமல் போய் விட்டது. 


வாழ்க்கை எனும் ஓடம், வழங்குகின்ற பாடம், மானிடரின் மனதினிலே, மறக்கவொண்ணா  வேதம்" என்று படித்திருக்கிறேன். முகநூலில் நுழைந்த பிறகு "தங்கிலீஷில்" தான் புலமை இப்போது அதிகம் இருப்பது போல் தெரிகிறது. வேறு வழி இல்லை.

No comments :

Post a Comment