Sunday, September 2, 2018

குண்டுச் சட்டியில் குதிரை

ஆங்கிலத் திரைப்படங்கள் உலகச் சந்தையில் விலை போகிறது. ஹிந்திப் படங்கள் அகில இந்தியச் சந்தையில் வியாபாரம் ஆகிறது. தமிழ்த் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் மட்டும் விலை போகிறது. 

இந்தியாவில் ஆங்கிலம் பேசுவோர் 13 கோடி, ஹிந்தி பேசுவோர் 55 கோடி, தமிழ் பேசுவோர் 6 கோடி. ஆங்கிலம் வேற்று மொழி. ஹிந்தி இந்திய மொழி. தமிழனுக்கு இரண்டும் தெரியாது. கற்க இஷ்டமில்லை.


ஆங்கிலம் தெரியாமலேயே ஆங்கிலத் திரைப்படங்களைப் பார்க்கும் தமிழர்கள் ஏன் ஹிந்தித் திரைப்படங்களைப் பார்ப்பதில்லை என்று புரியவில்லை. அந்த மொழியின் மீது ஒரு இனம் தெரியாத வெறுப்பு.


அதுதான் போகிறது. ஹிந்தி வேண்டாம். தமிழ்நாட்டைச் சுற்றி உள்ள மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளாவது  தெரியுமா என்றால் அதுவும் தெரியாது. எல்லோருடனும் சண்டை.


தமிழ் நாட்டில் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசுவோர்  இருக்கிறார்கள். ஆனால் அந்த மொழிப் படங்களைத் திரையிடுவது இல்லை. அதனால் மற்ற படங்களைப் பார்க்கும் வாய்ப்பு குறைகிறது.


எம்ஜியார், சிவாஜி, ஜெமினி காலம் முடிந்து விட்டது. கமல் ரஜினிக்கு வயதாகி விட்டது. விஜய், அஜித், சூரியாவுக்கு  நடிக்கத் தெரியவில்லை. விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் சிறு குழந்தைகள்.


தமிழ் இலக்கணம் தெரியாதவர்கள் இலக்கியம் பேசுகிறார்கள். தமிழ் தெரியாதவர்கள் பாடல், கதை, வசனம் எழுதுகிறார்கள். நடிகர்களின் விருப்த்திற்குக் கதையை மாற்றி தரத்தை கோட்டை விடுகிறார்கள்.


வியாபாரம் அதிகரிக்க தரம் முக்கியம். தரம் நன்றாக இருக்க புத்தகங்களைப் படிக்க வேண்டும். பிற மொழிப் படங்களைப் பார்க்க வேண்டும். மலையாளப் படங்கள் தரமாக இருப்பது இதனால்தான்.


மலையாளிகள் உலகம் முழுவதும் பரவி இருக்கிறார்கள். அவர்கள் இல்லாத இடமே உலகில் இல்லை. அதனால் மலையாளப் படங்கள் நன்கு வியாபாரம் ஆகிறது. தரமும் கூடுகிறது.


மலையாளப் படங்களின் தயாரிப்பு செலவு மிகவும் குறைவு. நடிகர்கள் அதிகம் பணம் வாங்குவது இல்லை. தரமான கதைகள் எழுதுகிறார்கள். வரவேற்பு அதிகம் இருக்கிறது.


தமிழ்நாடு அளவு கூட இல்லாத கொரியா, ஜப்பான், பிரான்ஸ், போன்ற சிறு சிறு நாடுகள் உலகத் தரம் வாய்ந்த நல்ல திரைப்படங்களைத் தயாரிகின்றன. நாம் ஏன் தரமான படங்களைத் தயாரிக்க முடியாது?


எப்போது  நாம் உலகத் தரம் வாய்ந்த திரைப்படங்களைத் தயாரிக்கப்  போகிறோம்  என்ற ஆதங்கத்தில் இதை எழுதுகிறேன். நடிகர்களின் ஆட்சி எப்போது முடியும் என்ற எண்ணத்தில் இதை எழுதிறேன். 


தரமான இயக்குநர்களுக்கு எப்போது முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்று கனவு காணுகிறேன். இருக்கும் நிலமையைப் பார்த்தால் அது நிறைவேறும் போல் தெரியவில்லை. 


நாம் குண்டுச் சட்டியில் குதிரை ஒட்டிக் கொண்டு இருக்கிறோம்.

No comments :

Post a Comment