Thursday, May 3, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 286 TO 300

286. பிறருக்கு புரிந்தது போல் பேசுபவர் அஞ்ஞானி. புரிந்தும் புரியாதது போல் பேசுபவர் விஞ்ஞானி. ஒன்றுமே புரியாதது போல் பேசுபவர் தான் ஞாநி.

287. பாவங்களைச் செய்யும் பொழுது அனுபவிக்கும் சந்தோஷங்களை விட, அந்த பாவங்களைச் செய்வதால் ஒருவர் அடையும்  தண்டனைகளின் வேதனை அதிகமானது.

288. எப்பொழுதும் பொய் சொல்லக் கூடாது. உண்மையே சொல்ல வேண்டும். பிறருக்கு தீங்கு விளைவிக்கும் என்றால் உண்மையைப் பேசாமல் இருப்பது நல்லது.

289. தாய், சகோதரி, மனைவி மூவரும் ஒருவருக்கு முக்கியமானவர்கள். யார் உயர்வு, தாழ்வு என்று பார்க்கும் போது தான் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

290. மனைவியின் தெய்வ பக்தி கணவனின் நலன் காக்கும் பாதி கவசமாகும். கணவனும் தெய்வ பக்தியுடன் இருந்தால் இருவருக்கும் முழுக் கவசம் ஆகும்.

291. ஒருவருடன் நான் பேசும் போது, இதற்கு மேல் பேசினால் விவாதம் வரும் என்று எனக்கு தெரியும். அப்போது மேலே பேசாமல் உடனே நிறுத்தி விடுவேன்.

292. நாற்பது வயதிற்குள் ஒருவர் சொந்தமாக வீடு கட்டி இருக்க வேண்டும். அதுதான் திட்டமிட்ட வாழ்க்கைக்கு அடையாளம். அதன் பலன் பிறகு தெரியும்.

293. நடப்பது எல்லாம் ஒரு காரணத்தை முன்னிட்டு நடக்கின்றன. நடப்பது நமக்குத் தெரிகிறது. காரணம் தான் புரியவில்லை. அது இறைவனின் திட்டம் போலும்.

294. சாதாரணமாக, ஆண் குழந்தைகள் அம்மாவிடமும், பெண் குழந்தைகள் அப்பாவிடமும் பிரியமாக இருப்பார்கள் என்று சொல்வார்கள். உங்கள் அனுபவம் என்ன?

295. அன்பு, கடமை, பணம் இவை மூன்றையும் சரியான நேரத்தில், சரியான விகிதத்தில் கையாளுவது ஒரு கைவந்த கலை. அதில் வெற்றி பெறுவது மிகவும் கடினம்.

296. பிறர் வயிற்றுப் பசிக்கு உணவு அளிப்பது பெண்களின் சிறப்பு. அவர்கள் படும் கஷ்டத்தை உணரவேண்டும். குறை சொல்வது தவறு. பாராட்ட வேண்டும்.

297. தோல்வி வாழ்க்கையின் முடிவு அல்ல. நன்றாக யோசித்து ஒருவர் தன்னுடைய தவறுகளைத் திருத்திக் கொண்டால் வெற்றியை நிச்சயம் அடைய முடியும்.

298. எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருப்பவர்களிடம் வைரஸ் கிருமி நெருங்காது என்று நான்  நினைக்கிறேன். ஏனென்றால் சிரிப்பே ஒரு வைரஸ் தானே.

299. எழுதுவது என்பது ஒரு தனிக் கலை. அது கற்பனையின் சிறந்த வடிவம். எவ்வளவு படித்தாலும் எழுதுவது கடினம். எழுத்தாளர்கள் தனிப்பட்டவர்கள்.

300. எனக்கு ஒன்று பிடிக்காது என்று கூறினால், உங்களுக்கு அது பிடிக்கும் என்று கூறலாம். ஆனால் எனக்கு வாழத் தெரியவில்லை என்று கூறுவது தவறு.




No comments :

Post a Comment