Monday, April 2, 2018

ஏன் இந்த [ஏ] மாற்றம்

"கணவனே கண்கண்ட தெய்வம்" திரைப்படத்தில் அழகான கதாநாயகன் ஜெமினி கணேசன், ஒரு சாபத்தால் அருவருப்பாக மாறுவார். கடைசியில் பழைய அழகான உருவத்தை மறுபடியும் பெறும்போது எல்லோரும் கைதட்டி பாராட்டுவார்கள். 

இதிலிருந்து என்ன தெரிகிறது? கதாநாயகன் அழகாக இருப்பதையே எல்லோரும் விரும்புகின்றனர். காலம் காலமாக நடிகர்களுக்கு அழகு முக்கியமாக இருந்தது. அடுத்தது நடிப்புத் திறமை. உலகம் முழுவதும் எல்லா நடிகர்களும் தாடி, மீசை இல்லாமல் தான் நடித்து வந்தார்கள். 


எல்லோரும் அதை வரவேற்றார்கள். ஒரு படம் பெண்களால் விரும்பப் பட்டால் குடும்பம் முழுவதும் படம் பார்க்க வருவார்கள், வரவு அதிகமாகும். பெண்களைக் கவர நடிகர்கள் அழகாக இருக்க வேண்டும் என்ற நிலமை ஒரு காலத்தில் இருந்தது.


அதிக வியாபாரம் உள்ள ஹிந்தி படங்களில் நடிகர்கள் மீசை, தாடி இல்லாமல் நடிக்கிறார்கள். ஆனால் தமிழ் படங்கள் மிகவும் மாறி விட்டன.  முகம் தெரியாமல் தாடி, மீசை வைத்துக் கொண்டு நடிப்பது வழக்கமாகிவிட்டது. 


காதல் காட்சிகளில் தாடி மீசையை ஏன் எடுத்து விடுகிறார்கள்? அவர்களுக்கே தெரிகிறதல்லவா. எம்ஜியார், என்டிஆர், சிவாஜி, தேவ்ஆனந்த், ஜெமினி கணேசன், மம்முட்டி, மோகன்லால், போன்றோர் அவர்கள் தோற்றம், அழகுக்காக ரசிக்கப் பட்டார்கள். 


ஹிந்தி, பெங்காலி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் நடிகர்கள் தாடி மீசை இல்லாமல் தான் நடிக்கிறார்கள். ஆனால் தமிழ் நடிகர்களுக்கு மீசை வீரத்தின் அடையாளம். அது இல்லாமல் நடிக்க மாட்டார்கள். ஆனால் தாடி எதற்கு? 


மாறு வேஷம் போட, அரசர்கள் இரவில் ரோந்து போக, திருடனாக நடிக்க தாடி மீசை வைத்துக் கொள்வார்கள். ஏற்கனவே துளியும் அழகில்லாத முகத்தைப் பார்க்க சகிக்கவில்லை. இதில் தாடி மீசை வேறு. வசூலுக்கு பெண்களின் உடைகளைக் குறைத்து விட்டு இதை சரி கட்டுகிறார்கள்.


எம்.எஸ்.வி.யும், இளையராஜாவும் இரு கண்கள். எம்.எஸ்.வி.யின் பாடல்கள் கொஞ்சம் மேல் ஸ்தாயியில் இருக்கும். இளையராஜா பாடல்கள் கொஞ்சம் கீழ் ஸ்தாயியில் இருக்கும். முதல்வர் டி.எம்.எஸ் ஐயும் பின்னவர் எஸ்.பி.பி. ஐயும் அதிகம் பயன் படுத்தினார்கள்.


இப்பொழுது  இசை. கேட்க சகிக்கவில்லை. எந்த வேளையில் கீ போர்டும் ஸ்டீரியோவும் வந்ததோ அப்ப பிடிச்சது தலைவலி. பாடும் குரலை இசைக் கருவிகள் கொண்டு அழுத்தி சரியாகக் கேட்க முடியாமல் செய்கிறார்கள். சுசீலாவின் "தங்கத்ிலே ஒரு குறை இருந்தாலும்" கேளுங்கள்.


ஏன் இந்த மாற்றம்? எப்படி வந்தது? யார் கொண்டு வந்தார்கள்? நீங்கள் அதை வரவேற்கிறீர்களா? இல்லை என்றால் ஏன் படம் பார்க்கப் போகிறீர்கள்? நாம் கொடுக்கும் பணத்திற்கு நமக்குத் திருப்தி வேண்டாமா? பிடிக்கவில்லை என்றால் தவிர்க்க வேண்டாமா?


நான் ஒரு வயதான பழைய பெருச்சாளி. நான் எழுதியதில் ஏதேனும் தவறு இருந்தால் அருள் கூர்ந்து என்னை மன்னிக்கவும். அடியாள் வைத்து என்னை அடித்துத் துன்புறுத்த வேண்டாம். என்னால் தாங்க முடியாது.




No comments :

Post a Comment