Sunday, April 1, 2018

திரைப் படம் எடுக்கலாம் வாரீகளா?

நமது கதாநாயகன் முதல் காட்சியில் தாயை தெய்வமாகக் கருதி வணங்குவார். எப்பொழுதும் தந்தை இருக்க மாட்டார். யாரிடமும் கை கட்டி வேலை செய்ய மாட்டார். அடிக்கடி பன்ச் டயலாக் பேசுவார். விதவிதமாக உடை அணிவார்.

அவருடன் கூட, அவரால் பேச முடியாத அசிங்கமான இரட்டை அர்த்தமுள்ள வசனங்களைப் பேச, ஒரு நண்பர் இருப்பார். இருவரும் வெளியே போகும் பொழுது கூப்பிடாமலேயே பஞ்சாயத்து பண்ணுவார். எல்லோரும் அவர் சொல்வதைக் கேட்பார்கள்.

அதைப் பார்த்து அழகான ஒரு பெண் அவரைக் காதலிப்பார். இருவரும் பாட்டுப் பாடி பல நாடுகளில், பல உடைகளில் நடனம் ஆடுவார்கள். பிறகு வில்லனுடனும் பத்து பேர்களுடணும் சண்டை போடுவார். இன்னொரு பெண்ணும் அவரைக் காதலிப்பார். 

அவருடன் கனவில் பாட்டுப் பாடுவார். அவருக்காக பத்து பேர்களுடன் சண்டை போடுவார். நடுவில் சம்பந்தம் இல்லாத ஒரு பெண்ணுடன் மது அருந்தி விட்டு அசிங்கமாக உடை உடுத்தி ஒரு குத்து ஆட்டம் போடுவார். பட வசூலை அதிகரிக்க இது ஒரு வழி என்கிறார்கள். 

எப்படியும் கதையில் ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண் இருப்பார். அவர் ஜாக்கிரதையாக இருக்கவே மாட்டார். தேவையில்லாத வேலையை செய்து மாடிப்படியில் தவறி விழுவார். ஒரு படியில் சமாளிக்காமல், இவர் எல்லாப் படிகளிலும் உருண்டு உருண்டு விழுவார். எல்லோரும் பதறி ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் செல்வார்கள்.

மறுபடியும் பத்து பேர்களுடன் சண்டை போடுவார். எந்த ஒரு சண்டையிலும் நம் கதாநாயகனுக்கு உடலில் ஒரு கீறலோ, ஒரு சொட்டு ரத்தமோ வராது. அவர் சட்டை துளியும் கசங்காது. இவர் ஒரு தட்டு தட்டினால் எல்லோரும் 20 அடி தள்ளி விழுவார்கள். அதைப் பார்த்து  வில்லன் சிரித்துக் கொண்டு இருப்பார். கடைசியில் காதலித்த பெண்ணை மணம் செய்து கொள்வார். 

நல்ல கதைகளுக்குப் பஞ்சம். கதை எழுதுபவர்களுக்கு கற்பனை வற்றிவிட்டது. அரைத்த மாவையே அரைப்பதை தவிர அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. இதைப் பார்த்துப் பார்த்து நமக்கும் அலுக்கவில்லை, அவர்களுக்கும் அலுக்கவில்லை. 

பார்க்காமல்  வீட்டில் சும்மா இருக்கவும் முடியவில்லை. பொழுதும் போகணும், டிக்கெட்டுக்கு ரூபாய் 300 செலவும் செய்யணும். வேறு வழி. அதனால் தான் சினிமாவிற்கு பணம் இல்லாமல்  ஏழைகள்  சாராயம் குடிக்கிறார்கள்.

No comments :

Post a Comment