Thursday, May 2, 2019

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1261 TO 1275

1261. தெரிந்து மிதித்தாலும்,தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு வலி ஒன்றுதான். மிதித்தவனுக்குத்தான் எறும்பினுடைய வலி தெரிவதில்லை

1262. நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. அழகாய் அமைந்த வாழ்க்கையைக் கூட, சிலருக்கு சரியாக வாழத் தெரிவதும் இல்லை.


1263."சந்தோஷமா வாழறேன்"னு காட்டிக்கொள்ள பணம் தேவைப்படுகிறது. உண்மையில், சந்தோஷமா வாழ பணம் ஒரு பொருட்டே இல்லை என்பதும் கேள்விக்குரியதே.


1264. நோய் வரும் வரை அளவில்லாமல் உண்பவன், நோய் வந்தபிறகு, உடல் நலமாகும் வரை எதையும் உண்ணாதிருக்க வேண்டி வரும்.உணவு கட்டுப்பாடு அவசியம்.


1265. பணம் சம்பாதிப்பது, குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல. கஷ்டம். ஆனால் பணத்தைச் செலவழிப்பது, குண்டூசியால் பலூனை உடைப்பது போல. சுலபம்.


1266. நீங்கள் சம்பாதித்த பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா? செலவு செய்யுங்க.உங்கள் மதிப்பு தெரியவேண்டுமா?யாரிடமாவது கடன் கேட்டுப் பாருங்க.


1267. புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்துப் பிச்சை போடுவது கூட சுயநலமே.வலது கை கொடுப்பது இடது கைக்குக் கூட தெரியக்கூடாது. அதுதான் தானம்.


1268. அனுபவம் ஞானத்தை தருகிறது. அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.தீயின் சூடு தொட்டால் தெரியும்.


1269. வாழ்க்கையைக் கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இருங்கள். அதற்கு அவமானம் தெரியாது. விழுந்தபின் அழுது, பிறகு திரும்ப எழுந்து நடக்கும்.


1270. திருமணம் என்பது, ஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும், ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் வாழ்க்கைத் துணையாகத் தேடுவது.


1271. முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள். பின்னால் வருபவனிடம் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள். அவனால்தான், உங்களை முந்திச்செல்ல முடியும்.


1272. மீண்டும் முகம் பார்த்து பேச வேண்டியிருக்கும் என்ற காரணத்திற்காகவே நம்முடைய பல கோபங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன. தவிர்க்க இயலாது.


1273. தவறான வழியில் சம்பாதித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு தான் வருகிறது. அது நேர்மையான வழியில் செலவழிக்கப்படுவதும் இல்லை.


1274. பகலில் தூக்கம் வந்தால், உடம்பு பலவீனமா இருக்கென்று அர்த்தம். இரவில் தூக்கம் வரவில்லை என்றால், மனசு பலவீனமா இருக்கென்று அர்த்தம்.


1275. தன்னை நல்லவராக காட்டிக் கொள்வதற்காக, அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும் எவரும், நீண்ட காலம் நல்லவர் வேடத்தில் இருக்கவே முடியாது.


No comments :

Post a Comment