Friday, April 12, 2019

இறைவனுக்கு நன்றி

நான் தினமும் காலையும் மாலையும் நடைப்பபயணம் செய்வது வழக்கம். அது உடலுக்கு மட்டுமில்லாமல் மனதுக்கும் ஆரோக்கியமானது. அப்படி செல்லும் போது சில சமயங்களில் சில காட்சிகள் கண்ணில் படும். அதைக் கட்டுரையாக எழுதுவது வழக்கம்.

இன்று காலையில் நடந்து செல்லும் போது ஒரு காட்சியைக் கண்டேன். ஒரு வீட்டிற்கு வெளியே ஒருவர் பூ பறித்துக் கொண்டிருந்தார். செம்பருத்திப் பூ. இறைவனுக்கு உகந்தது. அவருடைய இறை பக்தியை மனதில் பாராட்டிக் கொண்டு மேலே பயணத்தைத் தொடர்ந்தேன்.


ஒரு சுற்று முடிந்து இரண்டாவது சுற்று வரும் போது அதே நபரை இன்னொரு வீட்டுக்கு வெளியே பூ பறிப்பதைக் கண்டேன். ஆச்சரியமாக இருந்தது. இவருக்கு எத்தனை வீடு? அவரை நெருங்கி விசாரித்தேன். அவர் கூறியது ஆச்சரியமாக இருந்தது.


அவருக்கு எந்த வீடும் சொந்த வீடு இல்லை. தினமும் பல வீடுகளில் பூக்களைப் பறித்து தன்னுடைய வீட்டில் பூஜைக்கு பயன் படுத்துவது அவர் வழக்கம். மேலும் கேட்டதில் அவர் ஒரு அலுவலகத்தில் வேலை பார்ப்பதாகவும், இறை நம்பிக்கை அதிகம் உண்டு என்றும் தெரிந்து கொண்டேன்.


நான் அவரிடம் இதைக் கூறினேன். "சார், நான் கூறுவதைத் தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள். கடவுள் நமக்குப் படி அளக்கிறான். அதற்கு நன்றி சொல்ல நாம் பூஜை புநஸ்காரம் என்று செய்கிறோம். அது ஒருவருடைய நேர்மையைக் காட்டுகிறது. ஆனால் அதில் சில கட்டுப்பாடுகள் இருக்கிறது" என்றேன். என்ன என்று வினவினார்.


"நாம் இறைவனுக்குக் கொடுப்பதை, இறைவன் நமக்குக் கொடுத்ததில் இருந்து கொடுக்கவேண்டும். நமக்கு அவன் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் அதிலிருந்து ஒரு பத்து ரூபாய் கொடுத்தால் போதும், அவன் சந்தோஷப் படுவான். பிறருடைய பொருளை எடுத்துக் கொடுக்கக் கூடாது. அதில் பலன் எதுவும் இல்லை. அது திருடுவதற்குச் சமம். அதற்குத் தண்டனையும் உண்டு." என்றேன்.


சிறிதும் எதிர்த்துப் பேசாமல், நான் சொல்வதை ஒப்புக்கொண்டு," மிகவும் நன்றி சார். நீங்கள் சொல்வது புரிந்தது. இனிமேல் அப்படியே செய்கிறேன்" என்று கூறி விடை பெற்றார். என்னுடன் எந்தவிதமான விவாதமும் செய்யவில்லை. இந்தக் காலத்தில் இது போல ஒருவரை நான் முதன்முதலாக பார்க்கிறேன்.


நான் எந்த ஒரு நல்ல விஷயத்தையும் ஸ்வாமி அலமாரியில் வைத்து எடுத்து, பிறகு தான் மேலே வேலை துவங்குவேன். நாம் எதையும் இறைவனுக்கு முதலில் அர்ப்பணம் செய்யவேண்டும். ஆபத்து காலத்தில் அவன் நமக்கு நிச்சயம் துணை வருவான். இதில் முழு நம்பிக்கை வேண்டும். 
நான் பலமுறை அதை அனுபவித்து இருக்கிறேன். அதைப்பற்றி கட்டுரைகளும் எழுதி இருக்கிறேன்.



No comments :

Post a Comment