Thursday, April 11, 2019

செய்யும் தொழிலே தெய்வம்

வீட்டைக் கட்டிபார், கல்யாணத்தை பண்ணிப் பார் என்று சொல்வார்கள். வீடு கட்டுவது மிகவும் கஷ்டம். நான் எனது 35 வயதிலேயே வீடு கட்டிவிட்டேன். அதற்கு நான் பட்ட  கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. 

ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் எண்ணூறு ரூபாய் வீட்டிற்கே போய்விடும். மீதி பணத்தில் குடும்பம் நடத்த வேண்டும். அதில் இரண்டு குழந்தைகள் வேறு. தாய் தந்தைக்கு பணம் அனுப்ப வேண்டும். 


வீடு கட்டினால் மட்டும் போதாது. அதை ஒழுங்காகப் பராமரிக்க வேண்டும். கிராமங்களில் வருடாவருடம் சுண்ணாம்பு அடிப்பார்கள். நகரங்களில் சிமெண்ட் பெயிண்ட் அடிப்பார்கள். கொஞ்சம் வசதி உள்ளவர்கள் அக்ரிலிக் எமல்ஷன் பெயிண்ட் அடிப்பார்கள்.


எனக்கு வெள்ளை நிறம் மிகவும் பிடிக்கும். வீட்டின் உள் பக்கம் வெள்ளை நிறமும் வெளியே சந்தன நிறமும் அடித்து இருந்தேன். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை எமல்ஷன் பெயிண்ட் அடிககவேண்டும். எவ்வளவு வருடங்கள் ஆனாலும் என் வீடு இப்போது பெயிண்ட் அடித்தது போல் சுத்தமாக இருக்கும்.


ஒருமுறை நிலமை நன்றாக இருந்த போது பெயிண்ட் அடிக்கத் தீர்மானித்தேன். அதற்கு பட்ஜெட் போட வேண்டும். பெயிண்ட் அடிக்க ஆள் ஏற்பாடு செய்ய வேண்டும். அவருடன் ரேட் பேசி இவ்வளவு நாட்களில் முடிக்க உறுதி வாங்க வேண்டும்.


ஷாகுல் ஹமீத் என்ற பெயிண்ட்டரை ஏற்பாடு செய்து இருந்தேன். மிகவும் திறமைசாலி. கூலியும் கம்மி. வேலை சுத்தம். குறித்த நேரத்திற்கு வந்து குறித்த நேரத்தில் போய் விடுவார். எப்போது பார்த்தாலும் பணம் கேட்கும் வழக்கமில்லை. 


வீட்டிற்குள்ளேயே தங்கி பெயிண்ட்டும் அடிப்பது மிகவும் கஷ்டம். உள் பக்கம் சீக்கிரம் பெயிண்ட் அடித்து முடித்துக் கொடுத்தார். வெளியில் அடிக்க ஆரம்பித்த போது ஒரு  சின்னப் பிரச்னை வந்தது. நான் வீட்டின் முகப்பிலேயும் சன்னல்கள் மேலும் மெரூன் கலர் அடித்து இருந்தேன்.


அவர் சொன்னார்,"சார், சுற்றி எல்லா வீடுகளிலும் இதே பெயிண்ட் அடித்து இருக்கிறார்கள். நாமும் அதே பெயிண்ட் அடித்தால் நன்றாக இருக்காது. வேறு கலர் நான் கொண்டு வருகிறேன். உங்களுக்குப் பிடித்தால் அதை அடிக்கலாம்" என்றார். 


எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. வேலையை செய்து விட்டு கூலியை கராராக வாங்கிக் கொண்டு போகும் இந்தக் காலத்தில் இப்படி ஒரு மனிதனா !! என் வீட்டில் எந்தப் பெயிண்ட் அடித்தால் நன்றாக இருக்கும் என்று இவருக்கு ஏன் அவ்வளவு அக்கறை? என்று தோன்றியது. அவர் மீது மதிப்பும் மரியாதையும் இன்னும் கூடியது.


மறுநாள் மெல்லிய பச்சை நிறத்தில் ஒரு லிட்டர் பெயிண்ட் கொண்டு வந்து எல்லா இடங்களிலும் அடித்தார். எனக்கு அந்தக் கலர் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. என் மனைவிக்கும் பிடிக்கவில்லை. ஆனால் அவருக்கு ஷாகுல் ஹமீதைப் பிடிக்கும்.


மாலையில் வேலை முடிந்த பிறகு வீட்டில் இருந்து சிறிது தூரம் தள்ளி நின்று வீட்டைப் பார்த்தார். அவருக்கும் பிடிக்கவில்லை போல் இருந்தது. என்னிடம் வந்து, "நன்றாக இல்லை சார். நாளை வேறு கலர் கொண்டு வருகிறேன் அதைப் பாருங்கள்" என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.


மறுநாள் ஃபாரஸ்ட் க்ரீன் கலரில் ஒரு லிட்டர் பெயிண்ட் கொண்டுவந்தார். அதை எல்லா இடங்களிலும் அடித்தார். மிக அருமையாக இருந்தது. நானும் என் மனைவியும் பாராட்டினோம். முதல் தடவை அடித்த பெயிண்ட்டுக்கு பணம் வேண்டாம் என்று கூறியது இன்னும் சிறப்பு. 


பேசிய தொகைக்கு மேலே அவருக்குப் பணமும், எல்லோருக்கும் வேட்டி தூண்டும், எவர்ஸில்வர் பாத்திரங்களும் பரிசாகக் கொடுத்து அனுப்பினேன். அவர் எனது நெருங்கிய நண்பராகி விட்டார்.


நாம் செய்யும் தொழில் இறைவனால் கொடுக்கப் பட்டது. நமக்கு வரும் கூலியும் இறைவனால் கொடுக்கப் பட்டது. வேலையை நேர்மையாகவும் உண்மையாகவும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் வருவதில்லை.

No comments :

Post a Comment