Wednesday, April 10, 2019

காய்கறிகள் வாங்கும்போது

சென்னையில் நான் குடியிருந்த பகுதியிலும், தள்ளு வண்டியிலும் காய்கறி விலை மிக அதிகமாக இருந்ததால், நான் கோயம்பேடு மார்க்கட் போவதுண்டு

மார்க்கட்டில், ஒரு சில வியாபாரிகளிடம் தான் காய்கறி வாங்குவேன். ஏனென்றால் அவர்கள் என்னிடம் மனம் விட்டு அவர்கள் கஷ்டத்தை கூறுவார்கள்


கூறு கட்டி விற்கும் சிறிய வியாபாரிகளிடம் தான் இஞ்சி, பச்சை மிளகாய், எலுமிச்சம்பழம், கொத்தமல்லி, கருவேப்பிலை முதலியன வாங்குவேன்.


பேசிக்கொண்டே தரமான காய்கறிகளை எனக்கு கொடுப்பார்கள். நான் பொருக்குவது கிடையாது. தேவைக்கு மேல் அதிகம் வாங்கி கேட்ட பணத்திற்கு மேல்  கொடுப்பேன்


அப்படி வாங்கிய காய்கறிகளின் விலை அதிகமாக இருக்கும், அல்லது அளவு அதிகமாக இருக்கும், அல்லது என் மனைவிக்குப் பிடிக்காததாய் இருக்கும்.


அவர்களுடைய கஷ்டங்கள் என் மனதை மிகவும் பாதிக்கும். என்னுடைய கஷ்டங்கள் மிகவும் சாதாரணமாகப் போய்விடும். எங்களுடைய நட்பு அதிகமாகும்.


ஒருமுறை கடையில் ஒரு இளைஞன் அமர்திருந்தார். கடைக்காரர் மகனாய் இருக்கும். மிகவும் கராராய் பேசினார். பக்கத்து கடைக்காரர் அவரை கூப்பிட்டு பேசியபின் மரியாதை கூடியது


இந்த 44 வருடங்களில் ஒரு தடவையாவது என் மனைவியிடம் காய்கறி வாங்குவதில் பாராட்டு பெற்றது கிடையாது. எப்பவும் ஏதாவது குற்றச்சாட்டு தான்


வேறு கடையில் வாங்குவதில் இஷ்டமில்லை. பேரம் பேசுவதில் இஷ்டமில்லை. தேவைக்கேற்ப குறைவாக வாங்குவதில் இஷ்டமில்லை. நான் என்னதான் செய்வது?


சென்னையை விட்டு ஹைதராபாத் வந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன.ஒவ்வொரு முறையும் இங்கு காய்கள் வாங்கும்போது அவர்கள் ஞாபகம் எனக்கு வரும்


இங்கு பாஷை தெரியாது. இருந்தாலும் மனது வலிக்கும். கஷ்டப்பட்டு வேலை செய்யும் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் எத்தனை சோகங்கள் இருக்கின்றன.


No comments :

Post a Comment