Friday, January 10, 2020

சமையலறை சங்கதிகள்

இத்தனை வருடங்களாக இட்லி காமினேஷன் 3 : 1 என்றுதான் செய்து வந்தோம். சில வருடங்களுக்கு முன்பு என் ஓர்ப்படி சொல்லித்தந்த பார்முலா கேட்டு இப்பொழுது நீங்கள் திகைக்க போவது போலவே நானும் திகைத்தேன் பிறகு செய்து பார்த்த பிறகு தான் அதன் அருமை புரிந்தது நீங்களும் நம்பிக்கையுடன் முயற்சி செய்யுங்கள்

1. ஒரு கிண்ணத்தில் தனியாக ஒரு ஸ்பூன் வெந்தயம் ஊற வைத்து விடுங்கள். ஒரு டம்ளர் உருட்டு உளுந்தை கழுவி அரைமணி நேரம் ( ஜலம் தாராளமா விட்டு ) ஊற வைத்து பிறகு ஃப்ரிட்ஜில் வைத்து விட வேண்டும். 5 டம்ளர் புழுங்கல் அரிசி 2 டம்ளர் பச்சரிசி ஒரு டம்ளர் அவல் இவற்றை ஒன்றரை மணி நேரம் மட்டுமே ஊறும்படி கலைந்து ஜலத்துடன் வைக்க வேண்டும். இதன் கணக்கை வைத்து உளுந்தையும் வெந்தயத்தையும் முதலில் கிரைண்டரில் போட்டு ஊற வைத்த ஜில் தண்ணீரை விட்டு நன்றாக அரைத்து எடுக்க வேண்டும். பிறகு ஊற வைத்த அரிசியை போட்டு நன்கு நைசாக அரைத்து எடுத்து உப்பு சேர்த்து உளுந்துடன் நன்றாக கலந்து இரண்டு டப்பாக்களில் வைத்துவிடலாம்

இட்லிக்கு அரைக்கும் பொழுது அவ்வப்பொழுது பார்த்து ஓரத்தில் கையை வைத்து அரிசி உளுந்து தங்காமல் கொஞ்சம் கொஞ்சமாக ஜலம் சேர்த்து அரைக்க வேண்டும்

ரொம்ப கெட்டி இல்லாமல் ரொம்ப தண்ணீராகவும் இல்லாமல் நிதானமாக நாம் அரைப்பதில் தான் இருக்கின்றது. மறுநாள் கரண்டியால் ஒரு கலக்கு கலக்கி விட்டு ஃப்ரிட்ஜில் வைத்து விடலாம். ஒவ்வொரு டப்பாவாக ஒருநாள் இட்லி ஒருநாள் தோசை ஒருநாள் குழிப்பணியாரம் என செய்யலாம்

கடைசியாக மீந்த மாவில் வெங்காயம் இஞ்சி பச்சை மிளகாய் கருவேப்பிலை நறுக்கி போட்டு தேங்காய் சேர்த்து குழிப்பணியாரம் ஆக செய்யலாம். இப்படி ஒரு பஞ்சு போன்ற இட்லியை கண்டிப்பாக சாப்பிட்டு இருக்க .மாட்டீர்கள். தோசை வார்த்தாலும் ஹோட்டல் தோசை போல அற்புதமாக மெல்லிசா எடுக்க வரும். தோசைக்கல்லை எண்ணையை தடவி விட்டு பிறகு அடுப்பில் போட்டு முதலில் குட்டி குட்டியாக நாலைந்து வார்த்துவிட்டு பிறகு ஈசியாக எடுக்க வரும்.

2. ஒரு டம்ப்ளர் பச்சரிசி ஒரு டம்ளர் புழுங்கரிசி களைந்து ஊற வைக்க வேண்டும். ஒரு டம்ளர் துவரம்பருப்பு அரை டம்ளர் கடலைப்பருப்பு ஒரு கை உளுத்தம்பருப்பு மூன்றையும் ஒன்றாக களைந்து ஊறவைக்க வேண்டும். இரண்டு மணி நேரம் ஊறியவுடன் அரிசியையும் 7, 8 மிளகாய் வத்தலையும் மிக்ஸியில் ஓரளவு ரவை போல அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஊற வைத்த பருப்பை ஜலம் இல்லாமல் கெட்டியாக ஒன்றிரண்டாக அரைத்து போட வேண்டும். இதில் மஞ்சள் பொடி உப்பு பொடி சேர்த்து கலந்து ஒரு டப்பாவில் வைத்து விட வேண்டும்.

காலை அரைத்தால் மாலையிலும் மாலை அரைத்தால் காலையும் பிரிட்ஜில் வைக்கலாம். தேவையான மாவை எடுத்து அத்துடன் துருவிய காரட் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை கொத்தமல்லி பொடியாக நறுக்கிய முருங்கைக்கீரை அல்லது வாழைப்பூ அல்லது கோஸ் கருவேப்பிலை இவற்றுடன் அவரவர் விருப்பம் போல கலந்து அடை வார்த்தால் மொறுமொறுவென மெல்லிசாக வரும்

3. டம்பளர் புழுங்கல் அரிசியுடன் ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து நன்றாக ஊறவைத்து அரைத்து உப்பு சேர்த்து மறுநாள் வார்த்தால் அற்புதமான மெந்திய தோசை .

4. நாலு டம்பளர் பச்சரிசியை லேசாக சூடு வர அடுப்பில் பிரட்டிவிட்டு பிறகு ஊறவைத்து தனியாக ஒரு டம்ளர் உளுத்தம் பருப்பை ஊறவைத்து உளுத்தம்பருப்பை தனியாக அரைத்து பிறகு ஊற வைத்த அரிசியையும் அரைத்து உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைத்து மறுநாள் கல் தோசை வார்க்கலாம் . விரத காலங்களுக்கு மிக நல்லது.

5. சிவராத்திரி ஏகாதசி போன்ற விரத காலங்களில் உப்பில்லாமல் பத்து இல்லாமல் சாப்பிடுபவர்களுக்கு

இரண்டு தம்ளர் பச்சரிசி அரை டம்ளர் சம்பா கோதுமை ஒன்றாக ஊற வைத்து கிரைண்டரில் அரைத்துக் கொண்டிருக்கும் பொழுதே இத்துடன் கொஞ்சம் தேங்காய் வெல்லம் ஏலக்காய் இவற்றுடன் நைசாக அரைத்து உடனே வார்த்தால் வெண்ணையுடன் அல்லது நெய்யுடன் சாப்பிடலாம். மீந்த மாவை புளிக்காமல் ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது வார்க்கலாம்

6. அவலை ஒரு டபரா கலைந்து துளி ஜலம் சேர்த்து ஊறவைத்து பொல பொலவென ஊறியதும் இத்துடன் வறுத்து உடைத்த நிலக்கடலையை சேர்த்து விடவும், அடுப்பில் ஒரு சட்டியில் நல்லெண்ணெயை விட்டு கடுகு பச்சை மிளகாய் விழுது துளி கறிவேப்பிலை பெருங்காயம் தாளித்து மஞ்சள்பொடி துளி, நறுக்கி வைத்த காரட் தக்காளி குடைமிளகாய் , பட்டாணி , ஸ்வீட் கார்ன் இவற்றை வதக்கி (சற்று மூடி வைத்தால் ஸாஃப்ட் ஆகும்) அடுப்பை அணைத்து, உப்பு எலுமிச்சம் பழம் சேர்த்து அத்துடன் ஊற வைத்த அவலையும் போட்டு மூடி வைத்தால் ஊறியபிறகு விரதம் நாளில் பத்தில் லாமல் சாப்பிடலாம். நான் ரயில் பயணம் கிளம்பினால் இத்துடன் வெங்காயமும் வதக்கி இதுபோல் செய்து கையில் எடுத்துக் கொண்டு செல்வேன்.

7. இனிமேல் பட்டாணி சோளம் இவை சீசன். மலிவாக கிடைக்கும் பொழுது பட்டாணியை நிறைய வாங்கி உரித்து ஒரு பீங்கான் பேசனில் மைக்ரோவேவ் அவனில் ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடம் வைத்து எடுத்து ஆறிய பிறகு ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரீசரில் வைத்து விடலாம். (அல்லது சிறிது நேரம் குக்கரில் ஜலத்திற்குள் வைத்து எடுக்கலாம்)

தேவைப்பட்ட போது எடுத்து உபயோகிக்கலாம். நான் ஸ்வீட் கார்ன் இப்படித்தான் மைக்ரோவேவ் பண்ணி உதிர்த்து வைத்து விடுவேன்.

8. நிறைய வறுத்த கடலையை அப்பள குழவியால் லேசாக உருட்டி ஒன்று இரண்டாக உடைத்து ஒரு டப்பாவில் வைத்துக் கொண்டால் எல்லாவற்றிற்கும் சுலபமாக இருக்கும்
ஃப்ரீ டைமில் இப்படியெல்லாம் செய்து வைத்துக் கொண்டு விட்டால் பிறகு ரொம்ப சுலபம்.

No comments :

Post a Comment