Monday, July 20, 2020

மனித உருவில் கடவுள்

அந்தப் பெரியவருக்கு அறுபது வயதிருக்கும். ஹைவேஸில் போகின்ற வண்டிகளை அந்தக் கடைக்கு வருமாறு அழைத்துக் கொண்டிருந்தார். உணவுண்டு வந்த பிறகு கவனித்தேன், அவர் இடம் மாறவேயில்லை. அமரவே இல்லை. மெல்ல பேச்சு கொடுத்தேன்.

”பேரென்னங்க ஐயா“

“முருகேசனுங்க“

”ஊருல என்ன வேல“

”விவசாயமுங்க“

”எத்தன வருசமா இந்த வேல செய்றீங்க“

”நாலு வருசமா செய்றேங்க“

”ஏன் விவசாயத்த விட்டீங்க“

”எனக்குத் தஞ்சாவூர் பக்கம் கிராமமுங்க; ஒரு பொண்ணு, ஒரு பையன். விவசாயந்தான் பொழப்பே நமக்கு. ஆனா, மழை இல்லாம, விவசாயமெல்லாம் பாழா போச்சு சார். கடன உடன வாங்கி, என்னென்னமோ பண்ணி பார்த்தேன், ஒண்ணும் விளங்கலே. இதுக்கு மேல தாளாதுன்னு, இருக்கிற நிலத்த வித்து, கடனெல்லாம் அடைச்சுட்டு, மிச்ச மீதிய வச்சு, பொண்ணுக்கு கல்யாணத்த பண்ணேன்.

நாலு வருசத்துக்கு முன்னாடி இங்க வந்து வேலைக்கு சேர்ந்தேன். மூணு வேளை சாப்பாடு. தங்க இடம், மாசம் 7500/- ரூபா சம்பளம். இந்த வேலையப் பாத்துகிட்டே, பையன என்ஜினியருக்குப் படிக்க வைச்சேன். படிச்சி முடிச்சிட்டு, போன மாசம் தான், பையன் கோயம்புத்துருல வேலைக்குச் சேர்ந்தான்.”

“அப்படியா, உங்க பையன் என்ஜினியரா, சூப்பர். சரி, அதான் பையன் வேலைக்கு போறான்ல, நீங்க ஊரோட போக வேண்டியதுதானே, பெரியவரே“

”போவேன் சார், என் பையனே நீ கஷ்டப்பட்டது போதும்ப்பா, வந்துடு, எல்லாம் நான் பாத்துக்கிறேன்னு” தான் சொல்லுறான், ஆனா கொஞ்சம் கடன் இருக்கு, அதையும் அடைச்சிட்டா ஊருக்கு போயிடுவேன் சார்“

”எப்போ”

”இன்னும் இரண்டு மாசம் ஆவும் சார்”

”சரி, கடவுள் இருக்கார் பெரியவரே, நல்லதே இனி நடக்கும்“.

பெரியவர் சிரித்தார். “மனுஷங்கதான் ஸார், கடவுள், முகம் தெரியாத, என்னை நம்பி வேலை தந்து, வேலைகாரன்தானேன்னு பாக்காம, இதோ, வயசானவனுக்கு கால்வலிக்கும்ன்னு உக்காற சொல்ற என் முதலாளி ஒரு கடவுள்,

“உங்கப்பா ஏன் இப்படி கஷ்டப்படணும், பேசாம நம்ம கூட வந்திருக்கச் சொல்லு, கூழோ, கஞ்சியோ பகிர்ந்து சாப்பிடலாம்னு ” சொன்ன, என் மாப்பிள்ள ஒரு கடவுள்.

“நீ வேலைக்கு போவாதப்பா, எல்லாம் நான் பாத்துகிறேன்ன்னு சொன்ன என் புள்ள, ஒரு கடவுள்; 

"நான் கடன அடைச்சுடுவேன்னு என்னை நம்பி, தொந்தரவு பண்ணாத எனக்கு கடன் கொடுத்தவங்க ஒரு கடவுள்.

"அப்பப்ப ஆதரவா பேசுற, உங்களைமாதிரி இங்க வர்ற ஆளுங்க எல்லாரும் தான் சார் கடவுள். மனுசங்கதான் சார் கடவுள் “

அவருக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்தேன். தன்னுடைய தவறுகளால் வருவது கஷ்டங்கள். கடவுள் ஒவ்வொருவர் கஷ்டத்தைத் தீர்க்க அவர்கள் முன்னே சங்கு சக்கரத்தோடு வர முடியாது. அதனால் மனிதர்களை அனுப்புகிறார்.

கடவுள் மனித உருவத்தில் உதவி செய்கிறார். “தேவானாம் மானுஷ்ய ரூபாணாம்”

No comments :

Post a Comment