Sunday, April 26, 2020

தமிழ் சினிமா - ஒரு கண்ணோட்டம்.

தமிழ் மக்களிடம் சினிமாவை ரசிப்பதில் ஒரு தவறான அணுகுமுறை இருக்கிறது. சினிமாவில் நடிப்பைப் பற்றி  ஒரு தவறான அபிப்பிராயம் இருக்கிறது. சினிமாவை எப்படி ரசிப்பது, எப்படி நடிப்பது என்று விளக்குவது தான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.

VITORIO DE SICA வின் BICYCLE THIEVES  பிரென்ச் திரைப்படம் பார்த்திருக்கிறீர்களா? தன்னுடைய வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான சைக்கிளைத் திருடியவனைத் தேடி அலையும் ஒருவனின் பரிதாபமான கதை. அதில் நடித்தவர் சாதாரணமான நடிகர். படம் பிரமாதமாக இருக்கும். கதை அப்படி.

அதேபோல, சமீபத்தில் "பாரம்" என்ற தமிழ்த் திரைப்படம் பார்த்தேன். அதில் நடிகர்கள் யாருமே தெரியாதவர்கள். சிறப்பாக நடித்தார்கள். படம் இயற்கையாக நன்றாக இருந்தது. யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். இவர்தான் நடிக்க வேண்டும் என்று வரைமுறை கிடையாது.

கோழி முதலில் வந்ததா, முட்டை முதலில் வந்ததா என்பது பதில் சொல்ல முடியாத ஒரு கேள்வி. அதேபோல, மக்களை வைத்து சினிமாவா அல்லது சினிமாவை வைத்து மக்களா என்பதும். மேலும் சினிமாவில் நடிகர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம்.

முதன் முதலில் திரு சிவாஜி கணேசன் மிகைப்படட நடிப்பை நாடகங்களிலும், திரைப்படத்திலும் கொண்டு வந்தார். அன்றைய சூழ்நிலையில் அது வேறு விதமாக இருந்தது. அதையே நல்ல நடிப்பு என்று நம்பினர்.

தன்னை நிலைநிறுத்திக் கொள்ள, சரித்திர, புராண மற்றும் குடும்பப் படங்களிலும் தனது மிகைப்படட நடிப்பைத் தொடர்ந்து நடித்தார்.. கமல், ரஜினி மற்றும் பல நடிகர்கள் அவரைப் பின்பற்றினர். மிகைப்பட்ட நடிப்பு நடிப்பே இல்லை.

ஒரு புத்தகம் படிக்கிறோம். கதை நன்றாக இருந்தால் மேலே படிக்கிறோம். இல்லாவிடில் படிக்காமல் விட்டு விடுகிறோம். அங்கு கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். சினிமாவில் நாம் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. 

ஒரு திரைப்படத்தை ரசித்தால் அந்தக் கதையை எழுதியவர் யார் என்று நாம் பார்ப்பதில்லை. அதில் நடித்த நடிகர் யார் என்று பார்க்கிறோம். இது ஒரு தவறான அணுகுமுறை. கதை ஆசிரியருக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை.

நல்ல கதைகளைத் திரைப்படமாகத் தயாரிக்கும் போது அதிகமாக எழுத்தாளர்கள் உருவாகுவார்கள். இப்போது நடிகர்களுக்காக கதை எழுதுகிறார்கள். இது நல்ல அறிகுறி அல்ல. எழுத்தாளர்கள் குறைந்து விடுவார்கள்.

வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் குழந்தையாக, சிறுவனாக, வாலிபனாக, கணவனாக, தந்தையாக, தாத்தாவாக வாழ்ந்து இருக்கிறோம். சினிமாவில் நடிபபது போலவா நாம் வாழ்ந்தோம். நாம் சாதாரணமாகத்தானே இருந்தோம்.

சினிமாவில் காட்டுவது போலவா நாம் ஒவ்வொரு சமயத்திலும் வாழ்க்கையில் நடிக்கிறோம். அது இயற்கைக்கு முரணாகத் தெரியவில்லையா?. அதை எப்படி உங்களால் ரசிக்க முடிகிறது? ஒரு கதையில் யார் வேண்டுமானாலும் நடிக்கலாம்.

ஒரே நடிகர் திரும்பத்திரும்ப பல படங்களில் பல பாத்திரங்களில் நடிபபது உங்களுக்கு ஒருவித சோர்வைத் தரவில்லையா? அவரால் கதைக்கு முக்கியத்துவம் இல்லாமல் போகிறது. படம் அதன் தரத்திற்கு ஓடாமல் நடிகருக்காக ஓடுகிறது.

பாடகர்களைத்தவிர வாழ்க்கையில் யாரும் பாட்டுப் பாடுவது இல்லை. இடத்திற்குத் தகுந்தால் போல் பின்னணியில் இசை பாடல் சேர்க்கலாம். இந்தியத் திரைப்படங்களைத் தவிர, உலகில் வேறு எந்தத் திரைப்படத்திலும் பாடல் ஆடல் காட்சிகள் கிடையாது.

வெளிநாட்டுத் திரைப்படங்களில் பாடல்கள் கிடையாது. பாடகர், இசையமைப்பாளர் சேர்ந்து தனியாக "இசை ஆல்பம்" வெளியிடுகிறார்கள். விற்பனை அதிகம். நமது நாட்டில் திரைப்படங்களில் பாடல்கள் உண்டு. ஆடியோ கேசட் கொஞ்சம் உண்டு. விற்பனை ஆகாது.

இதை மக்கள் உணரவேண்டும். நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படங்களை வரவேற்க வேண்டும். நடிகர்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது. அப்போது செலவு குறையும். டிக்கெட் விலையும் குறையும். பலருக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.

ஏதோ ஒரு ஆர்வத்தில் இதை எழுதினேன். எந்தவிதமான மாற்றமும் ஏற்படாது என்று எனக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும் ஒரு ஆசை. முயற்சீி செய்து பார்ப்போமே என்று. ஆசை யாரை விட்டது. நான் ஊதுர சங்கை ஊதிவிட்டேன், விடியும் போது விடியட்டும்.

No comments :

Post a Comment