Monday, April 20, 2020

ராமா ராமா என்று சொன்னால்

விசேஷ நாள் ஒன்றில், காஞ்சி ஸ்ரீமடத்திற்கு மகானை தரிசிக்க பெரும் கூட்டம் வந்திருந்தது.

அப்போது அவர் சந்திரமௌலீஸ்வர பூஜை செய்து கொண்டிருந்ததால், வந்திருந்த பக்தர்கள் அனைவரும் அமைதியாக நின்றும், அமர்ந்தும் ஜயஜய சங்கர கோஷத்தை மென்மையாக சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது பக்தர் ஒருவர் இடையே புகுந்து முண்டியடித்துக் கொண்டிருந்தார். மடத்துத் தொண்டர்கள், மகான் பூஜை செய்வதையும், அதன் பிறகு அவர் தரிசனம் தர அமரும்போது, வரிசையில்தான் செல்ல வேண்டும் என்று சொன்னார்கள்.

பூஜையை முடித்து, தீர்த்தப் பிரசாதம் தந்துவிட்டு, வழக்கமாக பக்தர்களுக்கு தரிசனம் தரும் இடத்தில் வந்து அமர்ந்தார் மகாபெரியவர். வேகமாக மகான் முன் வந்து நின்றவர், பெரியவர் எதுவும் கேட்பதற்கு முன்பாக அவராகவே பேசத் தொடங்கினார்.

"சுவாமி எனக்கு ஏகப்பட்ட...". என்று ஆரம்பித்தவரை, அதற்கு மேல் சொல்லவிடாமல், "முதல்லே கொஞ்ச நேரம் அமைதியா அதோ அங்கே போய் உட்காரு. ராம நாமத்தைச் சொல்லு. நானே கூப்பிடறேன்!" மகான் கனிவு கலந்த கட்டளையாகச் சொல்ல அப்படியே சென்று அமர்ந்தார் அவர்.

"சுவாமி எனக்கு வீட்டுல வறுமை. ஆபீஸ்ல நிம்மதி இல்லை. வெளியிடத்துல கடன். இப்படி ஏகப்பட்ட பிரச்னை வாட்டுது. ஒண்ணு முடிஞ்சதாக நினைச்சாலும் உடனே அடுத்தது தொடங்கிடுது. என்னால் இந்த சங்கடங்களைத் தாங்கவே முடியவில்லை. மண்டையே வெடிச்சுடும் போல இருக்கு. எனக்கு நீங்கதான் ஒரு தீர்வு சொல்லணும்!" சொன்னார் வந்தவர்.

அமைதியாக அவரை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்த மகான். "இவ்வளவு நேரம் ஓரமா உட்கார்ந்துண்டு என்ன செய்தாயோ,அதையே தினமும் அரை மணி நேரம் பண்ணு. பிரச்னை தீர்ந்துடும்!" என்று சொன்னார்.

பெரியவர் சொன்னதும் கொஞ்சமும் யோசிக்காமல்,"இங்கே உட்கார்ந்து என்ன செஞ்சேன்? ராமா ராமா என்று சொன்னேன்.அதைச் சொன்னால் என் பிரச்னை தீர்ந்துவிடுமா?  என்று கேட்டார் வந்தவர்.

கொஞ்சமும் கோபம் இல்லாமல், அவரைப் பார்த்த மகான்,"உன்கிட்டே ஒரு கேள்வி. ராம நாமம் சொல்லும் இடத்துக்கெல்லாம் கண்ணுக்குத் தெரியாம ஓருத்தர் வந்து நிற்பாராமே. அது யார் தெரியுமா? என்று கேட்டார்.

"தெரியும்..அனுமான்" .

"அந்த அனுமான் யார் அவதாரம் தெரியுமா? சிவன் அம்சம். சிவன் அங்கே வந்து நின்றால், அம்பாள் உடனே வந்துவிடுவாள். அம்பாள் வந்தால் அவர்களின் குழந்தைகள் முருகனும், கணபதியும் ஆஜராகிவிடுவார்கள். சிவகுடும்பம் உள்ள இடத்தில் மங்களம் நிறையும். அதனால் மகாலக்ஷ்மி வருவாள். அவள் வந்தால் மகாவிஷ்ணுவும் வந்துவிடுவார்.

இப்படி அங்கே எல்லா தெய்வங்களும் வந்துவிட்டால், அங்கே சந்தோஷம் தானாக நிறைந்துவிடும் அல்லவா? அதனால்தான் உன்னை ராமநாமம் சொல்லச் சொன்னேன். புரிந்ததா?"

மகான் சொல்ல, மன நிறைவோடு அவரை வணங்கி பிரசாதம் பெற்றுக் கொண்டு புறப்பட்டார் அந்த நபர். ராமநாமம் சொல்லு என்று கேட்கவைத்து, அதற்கு பதில் சொல்லும் விதமாக, ராமநாமத்தின் பெருமையை எல்லோருக்கும் புரிய வைக்க வேண்டும் என்பதற்காக.

No comments :

Post a Comment