Tuesday, June 1, 2021

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1651 TO 1665

1651. நாம் வாழும் போது யாரை சிரிக்க வைக்கிறோமோ அவர்கள் தான் நாம் இறக்கும்போது அழுகிறார்கள். யாரை அழ வைக்கிறோமோ அவர்கள் சிரிக்கிறார்கள்.


1652. மன அழுத்தமே எல்லா நோய்களுக்கும் காரணம் ஆகும். எல்லாம் இறைவன் செயல் என்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது மன அழுத்தத்தைக் குறைக்கும்.


1653. எத்தனையோ பேர் நன்றாகத் தானே வாழ்கிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம். ஒவ்வொருவருக்கும் இறைவன் ஒரு நேரம் குறித்து வைத்து இருக்கிறான்.


1654. ஒருவரின் பெயருக்குப் பின்னால் இருக்கும் எழுத்துக்களுக்குத் தான் மதிப்பு அதிகம்.  அதுதான் அறிவு, வேலை, சம்பளம், எல்லாம் தருகின்றது.


1655. மனதிற்குப் பிடித்தமான உணவு ஆரோக்கியமாக இருப்பதில்லை. ஆரோக்கியமான உணவு மனதிற்குப் பிடிப்பதில்லை. எதை சாப்பிடுவது என்று தெரியவில்லை.


1656. ஒவ்வொருவரும் தங்களது ஜாதி, மத கோட்பாடுகளைப் பின்பற்றுவது அவசியம். ஆனால் பிறரது ஜாதி, மத உணர்வுகளை இழிவாகப் பேசுவது மட்டும் தவறு.


1657. குளித்த பிறகு, முதுகில் குளிர்ந்த நீர் படும்படி ஷவரில் சிறிது நேரம் காட்டவும். முதுகு அரிப்பு வராது. இது முதியவர்களுக்கு குறிப்பாக.


1658. சாதாரண மக்களை வருமானவரிக்காரர்கள் பிடித்தால் அது அவர்களுக்கு அவமானம். பிரபலமானவர்களைப் பிடித்தால் அது அவர்களுக்கு மிகவும் பெருமை.


1659. சலுகைகள் கொடுப்பதில் மக்கள் மயங்கி விடுகிறார்கள். லஞ்சம், ஊழல், கறுப்புப் பணத்தை ஒழிப்பதில் நடவடிக்கை எடுத்தால் நாட்டுக்கு நல்லது.


1660. அரசாங்க செலவுகள் முற்றிலும் சமப்படுத்துவது தான். ஓரிடத்தில் கொடுக்கும் சலுகையை மற்றொரு இடத்தில் வரியாக  வசூல் செய்து விடுவார்கள்.


1661. உங்களுக்குப் பொருளாதாரம் தெரியவில்லையா? கவலை வேண்டாம். உங்கள் வீட்டுக் கணக்கு தான் நாட்டுக் கணக்கு. பணம், செலவினங்கள் தான் அதிகம்.


1662. ஒருவருடைய தவறுகளை மெதுவாக, ரகசியமாக அவரிடம் மட்டும் சொல்லவேண்டும். அவரது நல்ல செயல்களை பலர் கேட்கும்படி உரக்கச் சொல்லவேண்டும்.


1663. பால் பாக்கெட்டை திறக்க வெட்டும் சிறிய துண்டு ஒரு நாளைக்கு சுமார் ஐம்பது லக்ஷம் குப்பையில் சேருகிறது.இதை ரிசைக்கிள் செய்ய முடியாது.


1664. விதை தரையில் விழுந்தவுடன் விருட்சமாகி விடாது - மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களுக்கு தப்பித்தால்  விருட்சமாக முடியும்.


1665. எந்த விஷயத்தையும் ஒருவரிடம் கூறுமுன் அவர் தகுதி நன்கு அறிந்து கூற வேண்டும். அடக்கம் அமரருள் உய்க்கும் என்பது திருவள்ளுவர் வாக்கு.

No comments :

Post a Comment