Saturday, October 24, 2020

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1546 TO 1560

1546. அட, தினம் காலையும் மாலையும் இறைவனிடம் சில  நிமிடங்கள் பிரார்த்தனை, சின்ன ஸ்லோகம், 12 தோப்புக்கரணம், இது கூட நம்மால் செய்யமுடியாதா?

1547. மனம் ஒரு குரங்கு. அது தவறான வழிகளில் போகாமல் இருக்க, தனக்குத் தானே கட்டுப்பாடுகள் வைத்துக்கொண்டு, நல்ல வழிகளில் செல்வது நல்லது.

1548.மற்றவரைப் பாராட்டுவது ஒரு கலை.யாருக்கும் சுலபத்தில் வராது.ஏன் பாராட்ட வேண்டும் என்று தோன்றும். விடாதீர்கள். பலன் பின்னால் தெரியும்.

1549. வாழ்க்கையில் முன்னேற, சிறந்த அறிவு, பண்பாடு , ஞானம், நல்ல குணம்  உள்ள ஒருவரை வழி காட்டியாக ஏற்று அவர் சொற்படி  நடக்க வேண்டும்.

1550. ஏழைத் தொழிலாளிகள், வேலைக்காரர்கள், சிறு வியாபாரிகளிடம் பேரம் பேசுவது மனிதாபிமானம் அல்ல. மேலே போட்டுக் கொடுப்பது [டிப்ஸ்] உத்தமம்.

1551. யக்ஞோபவீதம் [பூணூல்] உடலை இரு பகுதிகள் ஆகப் பிரிக்கிறது. வலது பக்கம் உன்னதமான செயல்கள், இடது பக்கம் மற்ற காரியங்கள் செய்வதற்கு.

1552. மகன் அப்பா ஆகும்போது, அப்பா தாத்தா ஆகி விடுவார். மகன் ஒருபோதும் அறிவிலும், அனுபவத்திலும், ஞானத்திலும் அப்பாவைப் போல் ஆக முடியாது.

1553. தாய், தந்தை, மனைவி, மக்கள்தான் உலகம். அவர்களுக்காக உயிரைக் கொடு. அதில் தான் உண்மையான சந்தோஷம் இருக்கு. மற்றது எல்லாம் மாயை.

1554. என்னை விட நீ பெரியவன் என்றால், நான் உன்னை விட மிகப் பெரியவன். நீ என்னை விடச் சிறியவன் என்றால் அடியேன்  உன்னை விட மிகச் சிறியவன்.

1555. நண்பன் கடன் கேட்டான். என் தந்தை கூறினார். பணம் முக்கியம் என்றால்  நண்பனை மறந்து விடு. நண்பன் முக்கியம் என்றால் பணத்தை மறந்துவிடு.

1556. ஒவ்வொரு ஆண்டு முடிவிலும், ஒருவர் தன்னுடைய நிதி நிலையைக் கணக்கு இடுதல் மிக அவசியம் . அதுவே அவர் வளர்ச்சியைக் காட்டும்.

1557. ரூ 50ல் வாழ்க்கையை ஆரம்பித்து 53 வருடங்கள் ஓடிவிட்டன. கடமை, குடும்பம், சிக்கனம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி இதுவே என் தாரக மந்திரம்.

1558. சினிமா மோகம், அரசியல் ஆதரவு, மதச் சார்பு, ஜாதி உணர்வு, இவைகளை நாம் அறவே தவிர்த்தால் நமது நாடும், மக்களும் முன்னேறும் வாய்ப்புண்டு.

1559. இந்த 46 வருட திருமண வாழ்க்கையில், என் மனைவி குழந்தைகள் இல்லாமல், எந்த ஒரு கேளிக்கை நிகழ்ச்சிக்கும் நான் தனியாகச் சென்றது கிடையாது. 

1560. அரசியல், மதம் , ஜாதி, சினிமா, ஆரோக்கியம், பற்றி எழுத, விமர்சிக்க  நிறைய பேர் இருக்கின்றனர். நான் எழுதுவது வாழ்க்கையைப் பற்றி.



No comments :

Post a Comment