Tuesday, August 4, 2020

தீர்காயுஷ்மான் பவ, ஸௌம்ய

“தீர்காயுஷ்மான் பவ, ஸௌம்ய!" அதுக்கு என்ன அர்த்தம்? காஞ்சி பரமாச்சார்யார் கேள்வி.

ஒருநாள் பெரியவாளை தர்ஸனம் செய்ய, “ஸிரோமணி” பட்டம் பெற்ற பண்டிதர்கள், நாலைந்து வித்வான்கள் ஆகியோர் வந்தார்கள். பரமாச்சார்யார் ஸாஸ்த்ர விஷயங்களை அவர்களுடன் ஸம்பாஷித்துக் கொண்டிருந்த போது பேச்சுவாக்கில்…

”இங்க வரவால்லாம் நமஸ்காரம் பண்ணினா, நா…திருப்பி 'நாராயண, நாராயண' ன்னு சொல்லி ஆஸிர்வாதம் பண்றேன். நா….ஸன்யாஸி! ஆனா, ஸம்ஸாரிகள்… நீங்கள்ளாம் என்ன சொல்லி ஆஸிர்வாதம் பண்ணுவேள்?”

“தீர்காயுஷ்மான் பவ, ஸௌம்ய!” ன்னு சொல்லுவோம்….. பெரியவா”

“ஸெரி…. அதுக்கு என்ன அர்த்தம்?”

“ரொம்ப நாள், தீர்க்கமான ஆயுஸ்ஸோட, ஸௌக்யமா இருன்னு அர்த்தம்”

அங்கிருந்த எல்லா வித்வான்களிடமும் வரிஸையாக கேட்டார்.

“அதே அர்த்தந்தான்…” எல்லோருமே ஆமோதித்தனர்.

பரமாச்சார்யார் கொஞ்ச நேரம் மௌனமா இருந்துவிட்டு, ஒரு அழகான புன்னகையோடு,  ”நீங்க அத்தன பேரும் சொன்ன அர்த்தம் தப்பு !”

பண்டிதர்களுக்கு தூக்கி வாரி போட்டது! அது எப்படி? ஏதோ கொஞ்சமாக ஸம்ஸ்க்ருதம் தெரிந்தவர்கள் கூட இதற்கு அர்த்தம் சொல்லிவிடுவார்கள். அவ்வளவு ஸுலபமான சொல்! அது எப்படி தப்பாகும்! ஒன்றும் புரியவில்லை.

“நானே சொல்லட்டா?”

“பெரியவாதான் எங்களுக்கும் சொல்லணும்” எல்லோரும் காதைத் தீட்டிக் கொண்டார்கள்.

“இருபத்தேழு யோகங்கள்ள, ஒரு யோகத்தோட பேர் 'ஆயுஷ்மான்'! பதினோரு கரணங்கள்ள ஒரு கரணம் 'பவ'ங்கறது! வார நாட்கள்ள 'ஸௌம்யவாஸரம்' ன்னு புதன் கிழமை ! …

இந்த மூணும், அதாவது, ‘புதன்’ கெழமைல ‘ஆயுஷ்மான்’ யோகமும், ‘பவ’ கரணமும் சேர்ந்து வந்தாக்க… அந்த நாள், ரொம்ப ஸ்லாக்யமா சொல்லபட்டிருக்கு. 

அதுனால, 'ஆயுஷ்மான் பவ, ஸௌம்ய'..ன்னு இந்த மூணும் கூடி வந்தா… என்னென்ன நல்ல பலன்கள் கெடைக்குமோ, அதெல்லாம் ஒனக்கு கெடைக்கட்டும்னு ஆஸிர்வாதம் பண்றேன்!…னு அர்த்தம்”

அத்தனை வித்வான்களும் ஒரே நேரத்தில், தண்டம்போல் பரமாச்சார்யார் ஸரணத்தில் விழுந்தனர். இத்தனை எளிய வாழ்த்துக்கு, இவ்வளவு ஆழ்ந்த அர்த்தத்தை காட்டிக்கொடுத்த அந்த “ஞான மேரு”வின் முன் ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணுவதை விட வேறென்ன செய்யமுடியும்?

இதைத்தான் தமிழில் “பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது” என்று சொல்லுவார்களோ! புதன் கிழமையோடு இந்த யோகமும், கரணமும் சேர்ந்து அமையும் நல்ல நாள் அரிது என்பதாலோ!

ஸிரோன்மணிகளுக்கென ஒரு வகை பாடம். நாம் என்றுமே நம் பெரியவாளுக்கு செல்லக் குழந்தைகளாகவே இருப்போம்…… மனஸில் எந்த கல்மிஷமும் இல்லாமல்!

தேங்காயும், வாழைப்பழமும் ஏன் இறைவனுக்கு நெய்வேதியப் பொருட்களாக படைக்கப் படுகின்றன? 

மற்ற எல்லாப் பொருட்களும் மனிதனோ, மிருகமோ எச்சில் செய்து விளைகின்றன. இவை இரண்டும் எச்சில் படாமலேயே விளைகின்றன. வாழை கன்றாக விளைகிறது. தேங்காய் முழுதாக நடப்படுகிறது.

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!  காஞ்சி மகா குருவே சரணம்!

No comments :

Post a Comment