Thursday, March 26, 2020

வேத பாடசாலையில்

7 வயது முதல் வேத பாடசாலையில் : 

விடியற்காலை ஐந்தரை மணிக்கு எழுந்து, குளித்து விட்டு, ஸந்தியாவந்தனம், ஸமிதானம் முடித்து, ஸ்வாமிக்கு முறை ப்ரகாரம் பூஜை செய்து,

காலை 7:00 மணி முதல் 8:00மணிவரை உபநிஷத் பாராயணம் செய்து,

8:00 மணிக்கு பழையது சாப்பிட்டு,

9:00 மணிக்கு பாடத்திற்கு அமர்ந்து 11:00வரை பாடம் படித்து,

(இதன் நடுவில் வாத்யார் சந்தை சொல்வார்.. அதாவது புதிய பாடத்தைச்சொல்லித்தருவார்..)

அதன் பிறகு பகவானுக்கு நைவேத்யம் செய்து, மாத்தியான்ஹிகம் முடித்து 

12:00மணிக்கு மதிய ஆகாரத்தை சாப்பிட்டபிறகு, ஸமஸ்க்ருத க்ளாஸ் பாடத்தில் அமர்ந்து அதை முடித்து விட்டு, மதியம் உறக்கத்தை தவிர்த்து,

2:00 மணிக்கு வேத பாடத்தை ஆரம்பித்து 4:30 மணிக்கு முடித்து விட்டு, துணிகளை தோய்த்து விட்டு முகத்தை அலம்பி ஸந்தியா வந்தனம், ஸமிதாதானம் செய்துவிட்டு பகவான் பூஜையில் அமர்ந்து அவருடைய அஷ்டோத்ரங்கள் சொல்லிவிட்டு, கிழமைக்கு தகுந்தாற் போல்

1)திங்கட்க்கிழமை: ருத்ரம்,சமகம்,

2)செவ்வாய்: துர்கா சூக்தம், ஶ்ரீ.சூக்தம், 

3)புதன்: விஷ்ணு ஸஹஸ்ரநாமம்,

4) வியாழன்: தோடகாஷ்டகம்,

5) வெள்ளிக்கிழமை: மறுபடியும் துர்கா சூக்தம், ஶ்ரீ.சூக்தம்,

6) சனிக்கிழமை: மறுபடியும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம்,

7)ஞாயிற்றுக்கிழமை: ஆதித்ய ஹ்ருதயம்..

இதை எல்லாம் முடித்து மறுபடியும் வேத பாடத்தை ஆரம்பித்து 9:00 மணிக்கு இரவு ஆகாரத்தை முடித்து விட்டு, மதியம் நடந்த ஸமஸ்க்ருத பாடத்தை படித்துவிட்டு, 10:00மணிக்கு படுக்கைக்கு செல்ல வேண்டும். மறுபடியும் காலை தொடரும். இப்படியாக பாடசாலை ஏழுவருடம் படிக்க வேண்டும்.

விடுமுறை என்றால் சும்மா இருக்க முடியாது. துணி துவைத்தல், தங்கும் இடத்தை சுத்தம் செய்தல், வேத பாடசாலைக்கோ தனி உபயோகத்துக்கோ தேவையான பொருட்களை வாங்குதல், அம்மா, அப்பா , சகோதர சகோதரிகளைச் சந்தித்து அளவளாவுதல் முதலியன நடைபெறும். எல்லாவற்றிற்கும் மேலாக படித்த பாடத்தை சொல்லி நினைவு கூறுதல் நடக்கும்.

நினைவு கூறுவதிலும் ஒரு முறை இருக்கிறது. பதம் பதமாக (சொற்களாக), இரண்டிரண்டாக, ஒரு ஐந்து வரிகளாக (பஞ்சாதி) என்றெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக வேதத்தை , புத்தகம் இல்லாமல், வாய்மொழியாகக் கற்பிப்பர். இதை விடுமுறை தினங்களில் சொல்லிப் பார்ப்பதும், அதை ஆச்சார்யார் (ஆசிரியர்) மேற்பார்வை செய்வதும் “விடுமுறை” நாட்களில் நடக்கும்.

வேத பாடசாலையில் உணவில் சுவைக்கு முக்கியத்துவம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காரணம் நாக்கு சுவைக்கு அடிமையாகி விட்டால் நாக்கில் ஸ்வரம் வராது என்பதால். ( காரம், உப்பு, வெங்காயம், தயிர் அறவே நீக்கப்படும்)

இது தவிர தியானம்,யோகா, பிராணாயாமம் பயிற்சிகளும் உண்டு.

முதல் ஆண்டு இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டுமே தீபாவளி மற்றும் பூணூல் பண்டிகைகளுக்கு மூன்று நாட்கள் மட்டும் விடுமுறை உண்டு. ஊருக்கு சென்று வரலாம். இரண்டாண்டு முடித்த மாணவர்களுக்கு பண்டிகை விடுமுறை கிடையாது.

தற்காலத்தில் தான் சித்திரை மாதத்தில் 10 நாட்கள் விடுமுறை தருகிறார்கள். அனைத்து மாணவர்களுக்கும் வாரம் மாத வருட தேர்வுகள் உண்டு. இதில் எழுத்து தேர்வு சொல் (ஸ்வரம், அக்ஷர சுத்தி) செய்முறை தேர்வுகள் அடங்கும். அப்படி எல்லாம் படித்ததை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு வாழ்நாள் பூராவும் வாழவேண்டும்.

No comments :

Post a Comment