Thursday, September 29, 2022

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1816 TO 1830

1816. எளிமையாக வாழுங்கள், இனிமையாகப் பேசுங்கள், ஆரோக்கியமாக இருங்கள், நிம்மதியாகத் தூங்குங்கள், அதுதான் சிறந்த வாழ்க்கை முறை. வேறு இல்லை.

1817. உணவுப் பசி இரண்டு வகைப்படும். ஒன்று வயிறு காலியாகி கேட்பது. இரண்டு நாக்கு வேண்டும் எனக் கேட்பது. முதலாவது நல்லது. இரண்டாவது கெடுதல்.

1818. காதலிக்க ஆணின் முக்கிய தகுதிகள்: ஒரே சாதி, நல்ல படிப்பு, வேலை, சம்பளம், குடும்பம், 3 வயது வித்யாசம், மனப்பொருத்தம், கெட்ட பழக்கம், முன்கோபம் இல்லை.

1819. பல ஊர்களையும், மக்களையும், மொழிகளையும், பண்பாடுகளையும், வாழ்க்கை முறைகளையும் சந்திக்கும் போதுதான், நான் இந்தியன் என்ற உணர்வு  வரும்.

1820. பலதரப்பட்ட மக்கள், பலதரப்பட்ட இடங்களில், பலதரப்பட்ட சூழ்நிலையில், பலதரப்பட்ட எண்ணங்களுடன், பலதரப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வாழ்கிறார்கள்.

1821. உள்ளூரில் படிக்காதவன் அரைநிஜார் அணிந்தால் அதற்கு ஒரு மரியாnதை,வெளி நாட்டிலிருந்து வந்த படித்தவன் அணிந்தால் அதற்கு ஒரு மரியாதை. ஏன்?

1822. பெண்டாட்டி பேச்சைக் கேட்டு பெற்றோர்களைத் தவிக்க விடுவதும், பெற்றோர்கள் பேச்சைக் கேட்டு பெண்டாட்டியைத் தவிக்க விடுவதும், இரண்டுமே தவறானதே.

1823. தெய்வம் நின்று கொல்லும் என்றால், ஒருவர் திருந்த பல சந்தர்ப்பங்கள் கொடுக்கும் என்று அர்த்தம்.

1824. அது அழகானது, வெண்மையானது, ஆரோக்கியமானது, சுவையானது, எளிதில் ஜீரணமாவது, மலிவானது, சிறந்தது, நோயாளிகளுக்கு உகந்தது, எல்லோரும் விரும்புவது. அது இட்லி ஒன்றே.

1825. நம் தவறை பிறர் சுட்டி காட்டும் போது உடனே ஒப்புக்கொண்டால் அல்லது பிறர் தவறை எப்போதும் சுட்டி காட்டாமல் இருந்தால், நமக்கு கோபம் வரவே வராது.

1826. நானே ராஜா, நானே மந்திரி, நானே சேவகன்  என்கிற மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால் பிறர் தயவை நாடும் நிலைமை வராது. பிறகு ஏன் கவலை?

1827. பிறருடைய வளர்ச்சியைப் பார்த்து நாமும் வளர முயற்சி செய்ய வேண்டும். அதைவிட்டு வயிற்றெரிச்சல் பட்டால் நமக்கு வீணாக குடல் வியாதி தான் வரும்.

1828. வயதான ஒரு தம்பதி கடமைகளை முடித்த பின் இவ்வுலகில் தாங்கள் இருவர் மட்டுமே இருப்பதாக நினைத்து சந்தோஷமாக வாழ்ந்தால் அது ஒரு சொர்க்கம்.

1829. கையில் உள்ள களாக்காய் பெரிது. தூரத்தில் உள்ள பலாக்காய் அல்ல.

1830. "ஐந்திற்க்கு இரண்டு பழுதில்லை" என்றால் என்ன தெரியுமா? (தீனி தின்பதும் சாணி போடுவதும்) 

No comments :

Post a Comment