Wednesday, March 10, 2021

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1606 TO 1620

1606. பக்தியும், உண்மையும், சத்தியத்தின் நேர்மையும், குறையாத இறை நம்பிக்கையும், இரக்க குணமும் உள்ள ஒருவனை இறைசக்தி ஒரு போதும் கைவிடாது.

1607. பள்ளியில் பாடம் சொல்லிக் கொடுத்த பின் தேர்வு வைக்கப்படுகிறது. ஆனால் வாழ்க்கையில் தேர்வு வைத்தபின் பாடம் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

1608. கஷ்டத்தில் சந்தர்ப்பத்தைப் பார்க்கிறவன் வெற்றி அடைகிறான். சந்தர்ப்பத்தில் கஷ்டத்தைப் பார்க்கிறவன் தோல்வி அடைகிறான்.  அது மனோபாவம்.

1609. சிக்கனமாக இருப்பது என்பது ஒருவர் எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறார் என்பது அல்ல. எவ்வளவு உபயோகமாக செலவிடுகிறார் என்பதைப் பொறுத்தது

1610. தாய் தந்தையை சந்தோஷப் படுத்தும் நேரம், கடமையில் வழுவாத நேரம், அறவழியில் பொருள் சேர்க்கும் நேரம் பிரம்மமுகூர்த்தம்.

1611. ஒருவனுக்கு எது தகுதியோ அது முயற்சியால் அவனை வந்து சேரும். அவன் எதை ஆசைப் படுகிறானோ, என்ன முயற்சி செய்தாலும் அது அவனை வந்து சேராது.

1612. யூதிஷ்டிரன்:தினம் பலர் முதுமையாலும் இறப்பாலும் படும் கஷ்டத்தை பார்த்தும், தான் மட்டும் மாறாமல் இருப்போம் என்று நினைப்பது ஆச்சரியம்.

1613. யூதிஷ்டிரன் கூறியது : பிறப்பினாலோ படிப்பினலோ ஒருவன் பிராமணன் ஆக மாட்டான். நல்ல குணம், நல்ல நடத்தையாலேயே  ஒருவன் பிராமணன் ஆகிறான்.

1614. நாம் வெறும் கையோடு வந்தோம். வெறும்  கையோடு போகப் போகிறோம். ஒருவரை ஏமாற்றி மற்றோருவர் நிம்மதியாய் வாழ்ந்து சிறந்தது என்பது கிடையாது.

1615. எல்லோரிடத்தும், எப்பொழுதும் மகிழ்ச்சி தரும் இனிமையான சொற்களைப் பேசுபவர்களைத் தேடி எல்லோரும் வருவார்கள். வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

1616. இறைவன் கொடுத்த தண்ணீரை வீண் ஆக்கினால், பணம் சேராது என்பது முதுமொழி. தண்ணீரை வீணாக்காதீர்கள். அது நாட்டிற்கும், வீட்டிற்கும் கேடு.

1617. குத்தக் குத்தக் குனிவார்கள், குனியக் குனியக் குத்துவார்கள் என்பது முதுமொழி. நான் குனிவதும் இல்லை, குத்துவதும் இல்லை. இது என் வழி.

1618. என்னங்க, நல்லவர்களைக் காக்கவும், கெட்டவர்களை அழிக்கவும்,  இறைவன் அவ்வப்பொழுது இந்த பூமியில்  அவதரிப்பராமே. ஏன் இன்னும் காணோம்?

1619. தோப்புக்கரணம் ஆண்களின் பிறப்புரிமை. பலர் மனைவிக்கு மறைவாக தினம் போடுவது. எண்ணிக்கைதான் 3,12,108 என்று மாறுபடும். நான் 12, நீங்கள்?

1620. அரசியல், மதம், ஜாதி, சினிமா பற்றி எழுதுவது, பேசுவது எல்லாம் பலன் இல்லாத செயல் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். 

No comments :

Post a Comment