டேய் கும்பகர்ணா, சூரியன் உதிச்சு ரொம்ப நாழியாச்சு. மணி ஆறு. எழுந்து பாயை சுத்தி வைச்சுட்டு பல் தேச்சுட்டு வா. கொல்லை வரந்தா சுவத்து பிறையிலே அலுமினியம் கிண்ணத்ல கரியும் செங்கல் பொடியும் புதுசா கலந்து வச்சிருக்கேன்.
வாசலுக்கும் கொல்லைக்கும் உலாத்தாம சீக்கரம் குளிக்க போ. காவேரியில் நுங்கும் நுரையுமாக ஜாலம் போறதாம். காவேரிக்கு போனால் காலை ஒடித்துவிடுவேன்! கிணத்தடில தண்ணி எறச்சு குளி.
அக்கா பாத் ரூம்ல தலைக்கு எண்ணை தேச்சு குளிக்கறா. சந்தி பண்ணினாதான் காப்பி. பாத்து ஓரமா போ. பாட்டி மடி பொடவைய கொடில காயப்போட்டிருக்கா.
ஸ்டோர் ரூம்லயிருந்து சரகு எலைய எடுத்துண்டு சாப்பட வா. பழையதுக்கு தொட்டுக்க மோர் மெளகாயா, உப்பு நார்தங்காயா?சாயந்தரம் வர போது நாலு போஸ்ட் கார்டு வாங்கிண்டு வா. காசு அப்பா தருவா.
ஸ்கூலுக்கு சின்ன சில்வர் தூக்ல தயிர் சாதமும் மாவடுவும் வச்சிருக்கேன். விறகு கடை கடங்காரன் நைசா ஈர விறகா சரிச்சுட்டு போயிட்டான். ஈர புகை. சமயல் ரூம்ல உப்புக்கும் சக்கரைக்கும் வித்யாசம் தெரியல.
டீ கோமு. பாச்சா சாப்டுட்டு போயிட்டான். சாப்ட எடத்த நல்லா மொழுகு. கிணத்தடில சாணி இருக்கு.
வாங்கோ, வாங்கோ, சித்தப்பா. இவளே, சித்தப்பாவுக்கு பலகா எடுத்துப்போடு. அப்படியே பானைலேயிருந்து ஜலமும் ஓல விசிறியைும் எடுத்து கொடு. என்ன வெய்யல்.
உூர்ல எல்லாரும் சௌக்கியா சித்தப்பா. நமஸ்காரம் பண்றேன். வத்சலா குளிச்சிண்டு இருக்காளா. விசேஷம் உண்டா. எல போடரேன். கால அலம்பிண்டு சாப்பட வாங்கோ. பாகற்கா பிட்ளை பண்ணியிருக்கேன். நன்னா சாப்டுட்டு ஓரமா பலகால தலய கொஞ்சம் சாயுங்கோ.
கோமு, இந்த வாரம் விகடன்,கல்கி எல்லாம் எங்கே. ரேடியோவ சித்த தணிச்சு கேளு. சித்தப்பா தூங்கரா. மாடில வடாம் காயப்போட்டிருக்கேன். ஒரு நடை எட்டி பாத்துட்டு வா.
டீ, சீப்ப எடுத்துண்டு இங்க வந்து உக்காரு. வெளக்கு வைக்கறத்துக்கு முன்னால நல்லா சிடுக்கு எடுத்து வாரி விடறேன். சித்தப்பா முன்னால தாம், தூம்ணு அடக்கம் இல்லாம நடக்கதே. போத்திண்டு, பொண்ணா,லக்ஷணமா இரு.
வாடா. எங்கடா சுத்திட்டு வரே. கார்டு எங்கே. டிபனெல்லாம் பண்ணல. சமயல் அற மேடைல பித்தளை பேசின்ல இட்லியும், ஜிலேபியும் இருக்கு. கோமுவுக்கு வச்சிட்டு எடுத்துக்கோ.
நாளாண்ணிக்கு நம்ம ஐயந்தெரு விசு மாமா காலமாயிட்டாரே அவருக்கு பத்து. அதான் கொடுத்துட்டு, வரச்சொல்லிட்டு போனா. நீ லீவு போட்டுட்டு வர வேண்டாம். ஒழுங்கு மரியாதையா ஸ்கூலுக்கு போ.
மூஞ்சிய அலம்பிண்டு நெத்திக்கு இட்டுண்டு, ஸ்வாமி ஸ்லோகம் சொல்லிட்டு படிக்க ஒக்காரு. மணி ஆறு.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு நடுத்தர பிராம்ண குடும்பத்தின் தினசரி அல்லது சராசரி உரையாடல்களிள் சில இது. இந்த காலத்தில் இதமாதிரி சம்பாஷணைகளை எங்கே கேட்கப்போகிறோம்?
உறவுகளும், வாழ்க்கை முறையும் ரொம்ப மாறித்தான் விட்டன. அந்த உறவுகளின் நெருக்கம்? இன்னும் இருக்கிறதா, இல்லை, மாறித்தான் விட்டது!. மாற்றம் ஒன்றே நிரந்தரம்.
No comments :
Post a Comment