Monday, September 18, 2023

தயிர் சாதத்தின் சிறப்பு.

வயிற்றைக் கெடுக்காத, அதே சமயம், கெட்டுப்போன வயிற்றை சரி பண்ண, தயிரை [மோரை] அடிச்சுக்க முடியாது.


தயிர் சாதம் கலக்கறதுக்கு, சாதத்தை கொஞ்சம் குழைவா வடிக்கணும். எப்பவும் விடறதை விட கூட ரெண்டு டம்ளர் ஜலத்தை விட்டு வடிக்கணும்.


 சாதம் ஆறதுக்குள்ள, கொஞ்சம் பச்சை மிளகா, இஞ்சி, கொத்தமல்லி, எல்லாத்தையும் பொடியா நறுக்கிக்கணும்.


இப்போ சாதம் ரெடியானதும், கொஞ்சம் வெண்ணெயை ஒரு ஸ்பூன் அந்த சுடற சாதத்துக்குள்ள போட்டு, உப்பு [பெருங்காயம் optional] போட்டு, மசியப் பிசையணும். வெண்ணெய் போடறதால, தயிர் சாதம் வெள்ளைக் கலரா, வெழுமூண இருக்கும்.


இப்போ சாதம் ஓரளவு ஆறினதும், கெட்டித் தயிரை விட்டு, கரண்டியால ஜோரா மசிச்சு கலக்கணும். வெண்ணை போட்டதுனால, தயிர்சாதம் இப்போ கெட்டியாக இருக்கும்.


இப்போதான் மிளகா, இஞ்சி, கறிவேப்பிலை,கொத்தமல்லி ஆறின சாதத்துலதான் போடணும். இல்லாட்டா கலர் மாறிடும்.


ஒரு கரண்டியில நல்லெண்ணெய் விட்டு, கடுகு, உளுந்தம்பருப்பு, [மிளகா வத்தல் optional] தாளிச்சு, அழகா ப்ரௌன் கலருக்கு உளுந்து மாறினதும், தயிர்சாதத்துல கலக்கணும்.


இதுக்குத் தொட்டுக்க என்ன?


வெறும் இஞ்சியை பொடியா நறுக்கி, உப்பு எலுமிச்சம்பழம் பிழிஞ்சு சாப்பிடலாம்;


இலுப்பைச்சட்டியை வெச்சு, மொறு மொறுன்னு கொஞ்சம் மோர்மிளகாய் நன்னாக் கறுப்பா வறுத்துக்கலாம்;


மணத்தக்காளி வத்தலை வறுத்து தயிர்சாதத்தோட சாப்பிட்டா, நம்ம நாக்கும் மூக்கும் நம்மளை வாழ்க வாழ்கன்னு வாழ்த்தும்.


அடுத்தது, வேப்பிலைக்கட்டி. (எலுமிச்சை, நாரத்தை இலையில பண்ற இந்த ஐட்டத்துக்கு ஒரு ஜே!)


வத்தக்குழம்பு, கீரை மிஞ்சியிருந்தா! ரெண்டையும் ஒண்ணாக் கலந்து தயிர் சாதக்குள்ள வைத்து சாப்பிடலாம்.


இட்லி மிளகாய்ப்பொடியை கலந்து சாப்பிடலாம்! சாதத்துல மோரை நிறைய விட்டு, கரைச்சாப்பல சாப்பிடும் போதும், மிளகாய்ப்பொடி ஜோரா இருக்கும்.


அப்பறம் மாவடுவும், மாவடு ஜலமும்!

காரமா, கெட்டியா மாவடு இருந்தா, அதோட ஜலத்தை அப்பிடி ஸைடுல விட்டுண்டு தோச்சுண்டு சாப்பிடலாம்.


மாகாளிக்கிழங்குன்னு ஒரு கிழங்கு. அதை தோல் சீவி, பொடிப்பொடியா நறுக்கி, மோர்ல உப்பு காரம் போட்டு ஊறவெச்சு சாப்பிடலாம்.


எலுமிச்சங்கா, கிடாரங்கா, நெல்லிக்கா, ஆவக்காய் ஊறுகாய் இதெல்லாம் தயிர்சாதத்துக்கு நாலு தூண்கள்!


பச்சைப்பசேல்ன்னு வாழை இலைல வெள்ளைவெளேர்ன்னு வெண்ணைக்கட்டியா தயிர்சாதம் ! என்ன அழகு!


உடம்பு சரியில்லியா? காய்ச்சல் இருந்தாலும், ஜில்லுனு இல்லாம, அம்ஸமா ஒரு தயிர் சாதத்தோட காய்ஞ்ச நார்த்தங்கா இருந்தா போறும்! பரம ஔஷதம்!


ஒரு தயிர்சாதத்துக்கு இத்தனை buildup-பான்னு சிலபேருக்கு தோணும். ஆனா, அதோட அருமை தெரிஞ்சவாளுக்குத்தான் இது புரியும்.

No comments :

Post a Comment