Saturday, March 7, 2020

தேவதைகளின் ஆட்சி

நமது ஆயுளில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வெவ்வேறு தேவதைகளின் கட்டுப்பாட்டில் வாழ்கிறோம். சௌனகர், போதாயனர் உள்ளிட்ட மகரிஷிகள் இதற்கான விதிகளைத் தெளிவாக வகுத்திருக்கிறார்கள். 

குழந்தை பிறந்து 1வது வயது வரை ஆயுர் தேவதை எனப்படும் அக்னியின் ஆட்சிக்குள் அடங்குகிறோம். அந்த ஆயுர்தேவதைக்கு ப்ரீதியாக முதல் வயது பூர்த்தி அடையும்போது ஆயுஷ்ய ஹோமம் செய்வார்கள்.

1வது வயது முதல் 20வது வயது வரை மனிதன் பிரம்மாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறான். அதனால்தான் அந்த குறிப்பிட்ட காலத்தில் அவனுக்கு பிரம்மோபதேசம் செய்யப்படுகிறது. அந்த வயதுடைய இளைஞனை பிரம்மச்சாரி என்று அழைக்கிறார்கள். 

20 வயது முதல் 40 வயது வரை விஷ்ணுவின் ஆட்சி நடக்கிறது. இந்தக் குறிப்பிட்ட காலத்தில் அவன் தானம் செய்வதற்கும், தானம் பெறுவதற்கும் தகுதியாகிறான். கன்யாதானம் வாங்கிக்கொள்ளும் வாலிபனை நாராயண ஸ்வரூபனாக சாஸ்திரம் வர்ணிக்கிறது. 

40 வயது முதல் ருத்ரனின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறான். ருத்ரனுக்கு பல்வேறு ரூபங்கள் உண்டு. 59 வயது முடிந்து 60வது வயது துவங்கும்போது உக்ரரத சாந்தி என்று அழைக்கப்படும் உக்ரரத ருத்ரனுக்கான பூஜையை செய்ய வேண்டும். 

அறுபது வயது முடிந்து விட்டால் மறுபிறவி. இந்திர சபைக்கு போய் திரும்பவும் மறுவாழ்வு. இந்திர சபையில் அனுமதிக்கும் முன் 59 வயதில் உக்ர ரத பிரவேசம்!! இந்திரன் வைக்கும் பரிட்சையில் பாஸ் பண்ண வேண்டும். எல்லா விதமான தொல்லைகளும் உடல் உபாதைகள் உள்பட கொடுக்கப்படும். இந்த ஒரு வருட ரத பயணம் நன்றாக முடிய வேண்டும் என்பதற்காக உக்ர ரத சாந்தி.

60 வயது பூர்த்தி அடைந்து 61 துவங்கும்போது செய்வதை சஷ்டிஅப்த பூர்த்தி சாந்தி என்று சொல்கிறோம். இதில் கௌரீ சமேத ம்ருத்யுஞ்ஜய ஸ்வாமிக்கு விசேஷ பூஜைகளைச் செய்கிறோம். 

69 வயது முடிந்து 70வது வயது துவங்கும்போது பீமரத சாந்தி என்று சொல்லப்படும் பீமரத ருத்ரனுக்கான பூஜையை செய்கிறோம். பீமரத சாந்தியை புரியும்படியாகச் சொல்ல வேண்டும் என்றால் 70ம் கல்யாணம் என்று குறிப்பிடலாம்.

77 வருடம், 7 மாதம், 7வது நாள் அன்று விஜயரத சாந்தி என்று விஜயரத ருத்ரனுக்கு ப்ரீதி செய்யும் விதமாக பூஜைகளை நடத்துகிறோம். 

80 வது வயது முதல் மனிதன் மீண்டும் பிரம்மாவின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறான். 80வது வயதில் செய்யப்படும் பூஜையானது சதாபிஷேகம் என்று அழைக்கப்படுகிறது. இதில் பிரதானமாக பிரம்மா பூஜிக்கப்படுகிறார். 

திருக்கோவிலூர் K.P. ஹரிபிரசாத் சர்மா

No comments :

Post a Comment