நமது தினசரி வாழ்க்கையில் சந்தோஷமும் துக்கமும் மாறி மாறி வருகின்றன. சந்தோஷத்தை அனுபவிக்கிறோம், துக்கத்தை வெறுக்கிறோம். இரண்டையும் சமமாகப் பார்க்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.
எல்லாம் பூர்வ ஜன்ம பலன் என்று நினைக்கிறார்கள். ஆனால் அதைப்பற்றி யாராலும் உறுதியாக விளக்க முடியாது. உண்மையிலேயே நமது துன்பங்களுக்குக் காரணம் நாம் தான். வேறு யாரும் இல்லை.
குறிப்பாக நமது மனோபாவம் [எண்ணங்கள்], வாழ்க்கை முறை, உணவுப் பழக்க வழக்கம் இவைகள் தான் நமது இன்ப துன்பங்களுக்குக் காரணம். நல்ல எண்ணங்களும், இறை நம்பிக்கையும், ஆரோக்கியமான உணவும், எளிமையான வாழ்க்கையும், போதும் என்ற மனமும் நமக்கு எப்போதும் இன்பதையே தரும்.
நல்ல மனோபாவம், சரியான வாழ்க்கைமுறை, உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி இவை நான்கும் இருந்தால் ஆரோக்கியம் தானே வரும். அதையும் மீறி வரும் நோய்கள் தலைவிதி. அனுபவித்துத் தான் தீரவேண்டும். வேறு வழியில்லை.
மற்றொரு முக்கியமான காரணம் எப்போதும் எதையாவது யாரிடமாவது எதிர்பார்ப்பது. எதிர்பார்ப்பதும், பிறரை மதிப்பீடு செய்வதும் தான் நமக்குக் கஷ்டங்களைக் கொடுக்கின்றன. நமது வாழ்க்கையை நாம் சரியாக வாழத் தெரிந்தால் ஒரு கஷ்டமும் வராது. இது பலருக்குத் தெரிவதில்லை.
கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, அனுசரித்து வாழ்வது சிறந்தது. அங்கு அமைதி நிலவும், ஆனந்தம் பெருகும். இல்லாவிடில் யாராவது ஒருவர் ஆட்சி செய்வது பரவாயில்லை. ஓரளவுக்கு வண்டி ஓடும். இருவரும் ஆட்சி செய்ய நினைப்பது கொடுமை. ஒரே உறையில் இரு கத்திகளை வைப்பது போல. அது விவாகரத்தில் தான் முடியும்.
பொறுமையைவிட மேலான தவம் இல்லை. திருப்தியை விட மேலான இன்பம் இல்லை. இரக்கத்தை விட உயர்ந்த அறம் இல்லை. மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதம் இல்லை.
இவைகளை மனதில் வைத்து, உங்கள் வாழ்க்கையை நேர்மையான முறையில் வாழுங்கள். சந்தோஷம் தானாகவே வரும். இறைவனின் ஆசீர்வாதம் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். அதில் சந்தேகமே இல்லை.
No comments :
Post a Comment