Thursday, August 13, 2020

தன்னம்பிக்கை

வாழ்க்கையின் பெரும் பகுதியை ஒரு சாதாரண குமாஸ்தாவாக கழித்தவர் சீனிவாசன். வாயையும், வயிறையும் கட்டி தன் ஒரே பிள்ளை கோகுலை இன்ஜினியரிங் படிக்க வைத்து ஒரு வேலை வாங்கிக் கொடுப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது..

தன் முதல்மாத சம்பளம் 30 ஆயிரம் ரூபாயை கவரில் போட்டு அம்மாவிடம் கோகுல் கொடுத்த போது வந்த சந்தோஷம் நீண்ட நாட்கள் நிலைக்காது என்பதை அவர் அப்போது அறிந்திருக்கவில்லை.

கோகுலின் சம்பளம் ஆண்டுதோறும் கூடினாலும், சீனிவாசனின் வங்கிக் கணக்கில் போடும் தொகையோ, கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்தது. பாவம், கல்யாணமாகி ஒரு குழந்தையையும் வைத்துக்கொண்டு அவனுக்கு என்ன கஷ்டமோ?

சில கடைகளில் கணக்கு எழுதி சீனிவாசன், அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து ஓரளவு சரி கட்ட முயன்றார். இருப்பினும், செலவை சமாளிப்பது பிரம்மப் பிரயத்தனமாக இருந்தது. பகவானை வேண்டுவதைத் தவிர அவருக்கு வேறு வழி எதுவும் தெரியவில்லை.

ஒவ்வொரு முறை, சீனிவாசன் பணத்திற்காக அல்லாடும் போது, லட்சுமிக்கு ஏதாவது செய்து, இந்த கஷ்டத்தில் இருந்து வெளிவர வேண்டும் என்ற சிந்தனை ஊறத் துவங்கும். பலவிதமாக யோசனை செய்தாள். வழி எதுவும் புலப்படவில்லை.

ஒருநாள், பக்கத்து வீட்டு, கௌரி அம்மாள், ''உனக்கு தெரிஞ்ச சமையல்காரம்மா யாராவது இருந்தா சொல்லேன் என்றதும், தெனமும் எங்களுக்கு சமைக்கும்போது,  உங்களுக்கு ஒரு டிபன் பாக்சில் போட்டு தருகிறேன்.. தினமும் என்ன சமைக்கணும்ன்னு சொல்லிடுங்க, அதுமாதிரியே சமைச்சு தருகிறேன்.''

அந்த யோசனை நல்லதாகத்தான் பட்டது.  லட்சுமியின் கைப்பக்குவத்தை பற்றி, கௌரிக்கு நன்கு தெரியும். முதலில் ஒரு சில சிரமங்கள் இருந்தாலும், ஒரே வாரத்தில், லட்சுமிக்கும், கௌரிக்கும் இந்த ஏற்பாடு பிடித்து விட்டது. 

கௌரியின் தயவால், லட்சுமியின் கைப்பக்குவம் பற்றிய செய்தி, அக்கம் பக்க வீடுகளில் வேகமாகப் பரவ, மேலும் பலர், சாப்பாடு செய்து தரமுடியுமா என்று கேட்கத் துவங்கினர்.

இந்த நான்கு மாதத்தில், ஐ.டி.,யில் வேலை பார்க்கும் ஒண்டிக்கட்டைகள், வயதான தனிமை தம்பதியர், சமையல் செய்ய சோம்பல் படும், 'ஸ்விகி ஜெனரேஷன்' குடும்பங்கள் என்று, லட்சுமியின், 'கேட்டரிங் சர்வீசு'க்கு, அநேகம் பேர் வாடிக்கையாளர்களாகி இருந்தனர்.

லட்சுமி, சமையலை கவனித்துக்கொள்ள, சீனிவாசன், கணக்கு வழக்கு மற்றும் சாப்பாடு விநியோக உரிமையை எடுத்துக் கொண்டார். காய்கறி நறுக்க, பாத்திரம் கழுவ ஒரு உதவியாளர், சாப்பாடு விநியோகத்திற்கு ஒரு பையன் என்று, இரண்டு ஆட்களை வேலைக்கு அமர்த்தி, இப்போது ஒரு முதலாளி ஆகிவிட்டிருந்தாள், லட்சுமி.

அன்று, மாதக் கணக்கை பார்த்த, சீனிவாசனுக்கு சந்தோஷம் தாளவில்லை. ''லட்சுமி, உன்னோட கைராசி, இந்த மாசம் நம் வருமானம், 40 ஆயிரம் ரூபாய்.'' ஆரம்பத்தில் இருந்த சிரமங்களைத் தாண்டி, தங்கள் உழைப்பின் பலனை கண்கூடாகப் பார்க்கும்போது, லட்சுமிக்கும் - சீனிவாசனுக்கும் மனது நிறைவாக இருந்தது.


No comments :

Post a Comment