Thursday, July 2, 2020

ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாம மகிமை

ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்வதால் ஏற்படும் நன்மைகள்.

மகாபாரதத்தின் இறுதிக்கட்டம். பீஷ்மர் அம்புப் படுக்கையில் மரணத்தை எதிர்நோக்கிப் படுத்திருக்கிறார். அப்போது அவர் கூறியது தான் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாமம்.

அதாவது, எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனை ஆயிரம் பெயர் சொல்லி அர்ச்சித்து அவன் மனம் குளிர வேண்டினால் தர்மம் மீண்டும் தழைக்கும் என்பதுதான் விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் மகிமை. 

பகவானுக்கு ஆயிரம் பெயர்கள் உண்டா என்று வியப்படையலாம். இந்த ஆயிரம் பெயர் களைச் சொல்லி, பகவானை வேண்டினால் கொஞ்சமாவது தர்மம் பிழைக்கும் என்பது பீஷ்மர் வாக்கு.

உடனே பார்வதிதேவிக்குச் சந்தேகம் வந்து விட்டது. சர்வேஸ்வரனான தன் கணவனைப் பார்த்து, ”சுவாமி, இது எப்படி சாத்தியமாகும்? ஆயிரம் நாமங்கள் சொல்லி அதனால் தர்மம் தழைக்கும் என்றால், அந்த நாமங்களை பண்டி தர்களால் சொல்ல முடியலாம்; படித்தவர்களால் சொல்ல முடியலாம். ஆனால் படிக்காத ஒருவன் தர்மம் தழைக்க வேண்டும் என்பதற்காக ஆயிரம் பெயர்களை நினைவில் வைத்துக் கொண்டு சொல்ல முடியுமா?” என்று கேட்டாள்

ஈஸ்வரன் புன்னகைத்தார்.”தேவி, நீ சொல்வது சரிதான். ஏதுமறியாத ஒருவன் ஆயிரம் பெயர் சொல்லி திருமாலை வேண்டுவது நடக்காத காரியம்தான். ஆனால் அதற்கும் ஓர் வழி உண்டு..."

“ஸ்ரீராம ராம ராமேதி
ரமே ராமே மனோரமே
ஸஹஸ்த்ர நாம தந்துல்யம்
ராம நாம வரானனே”

இப்படி மூன்று முறை சொன்னால் போதும். சஹஸ்ர நாமம் சொன்ன பலனை அடையலாம்” என்று பார்வதிதேவியின் சந்தேகத்தை நிவர்த்தி செய்தார் ஈஸ்வரன்.

சரி; இப்படி சொல்வதால் நமக்கு என்ன பலன் கிடைக்கும்? என்று கேட்கலாம். மரா, மரா, மரா என்று சொல்லியே ராமநாமத்தை உச்சரித்த வேடனும் திருடனுமாக இருந்தவனே வால்மீகி மகரிஷியாக உயரவில்லையா? அது தான் ஸ்ரீராம நாம மகிமை.

மேலும் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைவரும், அனைத்து இனத்தைச் சேர்ந்தவர்களும் சொல்லலாம். முழு மனதோடு பகவானைச் சரணாகதி அடைந்தால் பலன்களை அவன் தருவான்.

பேய், பிசாசுகள் அண்டாது. வியாதிகள் அணுகாது. வைத்தியர்கள் கைவிட்ட தீராத நோயும் தீரும். சுகப்பிரசவம் சரியாக நேரும். நோயாளி களின் காதருகே அவர்கள் மனம் கேட்கும் படியாக சஹஸ்ர நாமப் பாராயணம் செய்வது மிக மிக உத்தமம். மேலும் தர்மங்களும் தழைக்கும்.

“பரித்ராணாய ஸாதுநாம்
விநாசாயச துஷ்க்ருதாம்...
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய
ஸம்பவாமி யுகே யுகே.."

அனைவரும் விஷ்ணு சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்து விஷ்ணுவின் அருளை பெறுவோமாக!
ஸ்ரீ க்ருஷ்ணா, உன் திருவடிகளே சரணம்.

No comments :

Post a Comment