Friday, July 24, 2020

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1486 TO 1500

1486. ஸ்ரீராமர் தெய்வம் ஆனால் அவர் மனித இலக்கணங்களுக்கு உட்பட்டவர். ஸ்ரீகிருஷ்ணரும் தெய்வம், ஆனால் அவர் தெய்வ இலக்கணங்களுக்கு உட்பட்டவர்.

1487. நற்சிந்தனைகளை விதைத்து, நல் உறவை உரமிட்டு, மனக் கவலைகளைக் களைந்து, ஆத்ம நட்பை வளர்த்தால், ஆனந்தம் என்னும் பயிரை அறுவடை செய்யலாம்.

1488. கடைசிக் கடலை சொத்தையாக இருந்து விட்டால், அதற்கு முன் உண்ட எல்லாக் கடலைகளின் சுவையும் கசந்து விடுவது போல, நம் சொற்களும் உறவுகளும்.

1489. ஒருவருடைய பிறவி குணத்தை மாற்றவே முடியாது.என் பாட்டி ஒரு பழமொழி சொல்லுவார்கள்."குணம் செத்தால் போகும், ரூபம் சுட்டால் போகும்" என்று.

1490. நமது வாழ்வின் அஸ்திவாரமே நம்பிக்கை தான். ஒருவரது நம்பிக்கை மூடநம்பிக்கை எனில், அவருக்கு இவர் நம்பிக்கை மூடநம்பிக்கையாகத் தெரியும்.

1491. நான் நல்ல நம்பிக்கை, மூட நம்பிக்கை என்று பார்ப்பதில்லை. என்னை பாதிக்கவில்லை என்றால் பின்பற்றுவேன். இல்லையென்றால் பின்பற்ற மாட்டேன்.

1492. ஒருவர் தனது கீழ் உள்ளாடையை நின்றவாறு அணிந்தால் அவர் இளைஞர். உட்கார்ந்து அணிந்தால் அவர் முதியவர். படுத்துக்கொண்டு அணிந்தால் நோயாளி.

1493. குளிக்கும் போது பாதங்களின் மேலும் கீழும் பியூமிஸ் [பமிஸ்] கல்லால் நன்கு தேய்த்து குளித்தால் பாதங்கள் சுத்தமாக நோயின்றி இருக்கும்.

1494. நான் வாழ்க்கையில் நன்கு கற்றுக்கொண்டு தீவீரமாகப் பின்பற்றியது மூன்றே மூன்று வார்த்தைகள் தான்.அவை 1.சிக்கனம் 2.சிக்கனம் 3.சிக்கனம்.

1495. 2017 முதல் இன்று வரை நான் பணத்தைத் தொட்டது கிடையாது. என்னுடைய எல்லா வரவு, செலவுகளையும் என் மகள்/மருமகள் பார்த்துக் கொள்கிறார்கள்.

1496. இந்தியாவில் குற்றவாளி, தான் நிரபராதி என்று நிரூபிக்கவேண்டும். ஆனால் அமெரிக்காவில், குற்றம் சாட்டுபவர் குற்றத்தை நிரூபிக்கவேண்டும்.

1497. அமெரிக்காவில் ஜூரி முறை பின்பற்றப் படுவதால், சட்டமும், மனித நேயமும் கருதப்படுகிறது. இந்தியாவில் சட்டம் மட்டுமே பார்க்கப்படுகிறது.

1498. பிரபலமானவர்களிடம் இருந்து நான் எதிர்பார்ப்பது இரண்டே இரண்டு விஷயங்கள் தான். ஒன்று திறமை. இரண்டு நேர்மையான வாழ்க்கை. உங்களுக்கு எது?

1499. ஒருவர் திங்கட்கிழமை இறந்து விடுகிறார். வியாழன், ஞாயிறு தான் துக்கம் கேட்க வேண்டும் என்பார்கள். என்னால் அதுவரை காத்திருக்க முடியாது.

1500. தயிர் சாதத்தில் மாங்காய், இஞ்சி, பச்சைமிளகாய், மாதுளை, திராட்சை, க்ரேப்ஸ், வெள்ளரி, முந்திரியுடன் கடுகு தாளித்து சாப்பிட்டது உண்டா?


Wednesday, July 22, 2020

RANDOM THOUGHTS 841 TO 855

841. In a chase between the lion and the deer, many times the deer wins because it runs for its life while the lion runs for its food.

842. If you do not fight for what you want, do not cry for what you have lost. Nothing depends on luck. Because even luck has to work.

843. Faith and belief are purely personal. Everyone has their own faith and belief to follow. If this is understood PEACE will prevail.

844. Suffering differs from person to person. The rich want sugar for the milk. The poor need salt for the broth. The severity is the same.

845. Most of us are not taught to wish "good morning" even in a family. But we never fail to wish if we seek any favour from a person.

846. People with liberal views condemn conservatives. The conservatives condemn the liberals. This is like two sides of the same coin.

847. To pledge the wife's jewels is a crime. Even when put into a very critical situation, one should never pledge his wife's jewels.

848. Research shows countries that gave compulsorily BCG and TRIPLE ANTIGEN vaccines at childbirth are not much affected by Coronavirus.

849. Earlier, men had a towel on the shoulders to wipe the tears of their wives or daughters. Now, both the towel and tears are missing.

850. I earnestly request all my friends who are 60+ to read the book VEDANTHA TREATISE by Swami Parthasarathy from Amazon without fail.

851. In money dealings, it is not advisable for the lender to ask for payment and it is not advisable for the receiver to delay payment.

852. While dealing with mother, sister, or wife, do not take up the issue of one with the other. They will get fed up and become friends.

853. One will be heartbroken when the people whom he loves to the core do not reciprocate it and that their love is with someone else.

854. A Judge disposes of 2500 cases every year in India. In the USA, 9 judges of the Supreme Court only dispose of 81 cases in a year.

855. A judge in India is doing almost 40 times more work than a judge in the US that too for lesser pay, allowances, and facilities.

Monday, July 20, 2020

மனித உருவில் கடவுள்

அந்தப் பெரியவருக்கு அறுபது வயதிருக்கும். ஹைவேஸில் போகின்ற வண்டிகளை அந்தக் கடைக்கு வருமாறு அழைத்துக் கொண்டிருந்தார். உணவுண்டு வந்த பிறகு கவனித்தேன், அவர் இடம் மாறவேயில்லை. அமரவே இல்லை. மெல்ல பேச்சு கொடுத்தேன்.

”பேரென்னங்க ஐயா“

“முருகேசனுங்க“

”ஊருல என்ன வேல“

”விவசாயமுங்க“

”எத்தன வருசமா இந்த வேல செய்றீங்க“

”நாலு வருசமா செய்றேங்க“

”ஏன் விவசாயத்த விட்டீங்க“

”எனக்குத் தஞ்சாவூர் பக்கம் கிராமமுங்க; ஒரு பொண்ணு, ஒரு பையன். விவசாயந்தான் பொழப்பே நமக்கு. ஆனா, மழை இல்லாம, விவசாயமெல்லாம் பாழா போச்சு சார். கடன உடன வாங்கி, என்னென்னமோ பண்ணி பார்த்தேன், ஒண்ணும் விளங்கலே. இதுக்கு மேல தாளாதுன்னு, இருக்கிற நிலத்த வித்து, கடனெல்லாம் அடைச்சுட்டு, மிச்ச மீதிய வச்சு, பொண்ணுக்கு கல்யாணத்த பண்ணேன்.

நாலு வருசத்துக்கு முன்னாடி இங்க வந்து வேலைக்கு சேர்ந்தேன். மூணு வேளை சாப்பாடு. தங்க இடம், மாசம் 7500/- ரூபா சம்பளம். இந்த வேலையப் பாத்துகிட்டே, பையன என்ஜினியருக்குப் படிக்க வைச்சேன். படிச்சி முடிச்சிட்டு, போன மாசம் தான், பையன் கோயம்புத்துருல வேலைக்குச் சேர்ந்தான்.”

“அப்படியா, உங்க பையன் என்ஜினியரா, சூப்பர். சரி, அதான் பையன் வேலைக்கு போறான்ல, நீங்க ஊரோட போக வேண்டியதுதானே, பெரியவரே“

”போவேன் சார், என் பையனே நீ கஷ்டப்பட்டது போதும்ப்பா, வந்துடு, எல்லாம் நான் பாத்துக்கிறேன்னு” தான் சொல்லுறான், ஆனா கொஞ்சம் கடன் இருக்கு, அதையும் அடைச்சிட்டா ஊருக்கு போயிடுவேன் சார்“

”எப்போ”

”இன்னும் இரண்டு மாசம் ஆவும் சார்”

”சரி, கடவுள் இருக்கார் பெரியவரே, நல்லதே இனி நடக்கும்“.

பெரியவர் சிரித்தார். “மனுஷங்கதான் ஸார், கடவுள், முகம் தெரியாத, என்னை நம்பி வேலை தந்து, வேலைகாரன்தானேன்னு பாக்காம, இதோ, வயசானவனுக்கு கால்வலிக்கும்ன்னு உக்காற சொல்ற என் முதலாளி ஒரு கடவுள்,

“உங்கப்பா ஏன் இப்படி கஷ்டப்படணும், பேசாம நம்ம கூட வந்திருக்கச் சொல்லு, கூழோ, கஞ்சியோ பகிர்ந்து சாப்பிடலாம்னு ” சொன்ன, என் மாப்பிள்ள ஒரு கடவுள்.

“நீ வேலைக்கு போவாதப்பா, எல்லாம் நான் பாத்துகிறேன்ன்னு சொன்ன என் புள்ள, ஒரு கடவுள்; 

"நான் கடன அடைச்சுடுவேன்னு என்னை நம்பி, தொந்தரவு பண்ணாத எனக்கு கடன் கொடுத்தவங்க ஒரு கடவுள்.

"அப்பப்ப ஆதரவா பேசுற, உங்களைமாதிரி இங்க வர்ற ஆளுங்க எல்லாரும் தான் சார் கடவுள். மனுசங்கதான் சார் கடவுள் “

அவருக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்தேன். தன்னுடைய தவறுகளால் வருவது கஷ்டங்கள். கடவுள் ஒவ்வொருவர் கஷ்டத்தைத் தீர்க்க அவர்கள் முன்னே சங்கு சக்கரத்தோடு வர முடியாது. அதனால் மனிதர்களை அனுப்புகிறார்.

கடவுள் மனித உருவத்தில் உதவி செய்கிறார். “தேவானாம் மானுஷ்ய ரூபாணாம்”

Saturday, July 18, 2020

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1471 TO 1485

1471. ஒவ்வொருவருக்கும் குலதெய்வம் உண்டு.அந்த தெய்வத்தை தினம் தொழ வேண்டும். நேரில் சென்று தரிசித்தால் கஷ்டங்கள் தீரும் என்று சொல்வார்கள்.

1472. தானம் பலனை எதிர்பார்த்துச் செய்வது. தர்மம் ஸ்வபாவமாக பகவத் ப்ரீதியாகச் செய்வது. ஸ்வபாவம் என்றால் இயற்கையான குணம் என்று பொருள்.

1473. சென்னையில் வானிலை ஜனவரி மாதம் மட்டும் சுகம்.மற்ற பதினொரு மாதங்கள் நரகம். ஹைதராபாத்தில் மே மாதம் மட்டும் நரகம். மற்ற பதினொரு மாதங்கள் சுகம்.

1474. மெட்ரோ வாட்டரை குடுவையில் அடைத்து மினரல் வாட்டர் என்று குறைந்த விலையில் விற்கிறார்கள்.நல்ல தரமான கம்பனி குடிநீரை மட்டும் வாங்கணும்.

1475. அப்பளம்,வடாம்,சிப்ஸ் போன்றவற்றை உணவுக்கு பக்கவாத்யமாக சாப்பிட்டால், காய்கறிகளின் அளவு குறைந்து ஆரோக்கியம் கெடும் என்பது என் எண்ணம.

1476. தத்துவங்கள், உபதேசங்கள், அறிவுரைகள் ஆகியவற்றை யாரும் இப்போது விரும்புவது இல்லை. பொழுதுபோக்கு அம்சங்களுக்கே வரவேற்பு மிகவும் அதிகம்.

1477. தலையில் நிறைய முடி உள்ளவர்கள் எப்போதும் லைட் கலர் சீப்பையே உபயோகப் படுததவேண்டும். அப்போது தான் சீப்பில் அழுக்கு நன்றாகத் தெரியும்.

1478. எல்லோரும், குறிப்பாக 60 வயதானவர்கள் இரவு 7 மணிக்குள் அல்லது படுக்கப் போவதற்கு 3 மணி நேரத்திற்கு முன் இரவு உணவை சாப்பிடுவது நல்லது.

1479. ஆண்டவன் நமக்குள்ளே ஆத்மான்னு ஒரு காமெரா வச்சி ரெக்கார்ட் பண்றான்.நாம பண்ற அக்கிரமத்துக்கு வட்டியும் முதலுமா ஒருநாள் வாங்கிடுவான்.

1480. ஒரு பொருள், நமக்கு அதிகமாகக் கிடைக்கக் கிடைக்க, அதன் மீது விருப்பம் குறையும் என்பது பொருளாதாரத்தில் ஒரு தியரி. இதில் பணம் சேருமா?

1482. தனது தாய், தந்தையரைக் காப்பாற்றுபவன் கெட்டவானாய் இருந்தாலும் நல்லவனே. அப்படிக் காப்பாற்றாதவன் நல்லவனாய் இருந்தாலும் கெட்டவனே.

1483. வசதியான பெண் கவரிங் நகை அணிந்தால் அது தங்கம் எனக் கருதப்படும். வசதி இல்லாத பெண் தங்க நகை அணிந்தாலும் அது கவரிங் என்றே கருதப்படும்.

1484. வெளிநாட்டு திரைப்படங்களைப் போல, 1.30 மணி நேரத்தில் ஒரு திரைப்படத்தை எடுத்து, செலவை குறைத்து, டிக்கெட்டின் விலையையும் குறைக்கலாமே.

1485. ஒரு சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்ட காலம் உண்டு.கடின உழைப்பாலும்,சிக்கன வாழ்க்கையாலும், நேர்மையான எண்ணங்களாலும் நிம்மதியாய் இருக்கிறேன்.




Thursday, July 16, 2020

சிரிப்பு வெடிகள் - 10

1. என் பையன் முதல் வகுப்பிலே பாஸ் பண்ணிவிட்டான்.

சரி, மேலே என்ன படிக்கப்போறான்?

வேறென்ன, இரண்டாம் வகுப்புதான்.
**************************

2. மண்டையை பிச்சுகிற மாதிரி வேலை இதுன்னு முதலாளிக்குத் தெரியும் போல இருக்கு!

ஏன் என்ன ஆச்சு?

ஸிம்பாலிக்கா "கையோட முடின்னு" சொன்னாரே!
************************

3. ஏம்பா, ஸெக்யூரிடீ வேலைக்கு வரியே, உனக்கு என்ன தகுதி இருக்கு?

சின்ன சத்தம் கேட்டாலும் உடனே முழிச்சுப்பேன் சார்.
**************************

4. ஏம்பா, நீ யாருன்னே தெரியாது, கடன் கேட்கிறாயே?

தெரிஞ்சவர்கள் கிட்டே எல்லாம் வாங்கிட்டேன் சார்.
***************************

5. வாத்தியார்: ஒரு நல்ல குடிமகனுக்கு என்ன தேவை?

மாணவன்: ஊறுகாய் சார்.
***************************

6. என்ன திமிர்பிடிச்சவ, ராட்சசி, ராங்கிக்காரீன்னு உங்கம்மா திட்றாங்க.

அவங்களுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான் விடு.
**********************

7. நபர் 1.என்னங்க நீக்க லிப்ட்ல முன்ன பின்ன போனதில்லையா?.

நபர் 2. இல்லைங்க மேலும் கீழும்தான் போயிருக்கேன். உங்களைப் பத்தி தெரியாது.
***************************

8. ஜோசியர்: குரு ஏழாம் வீட்டில் இருந்து பார்க்கிறான்.

தந்தை: பிரச்சனையே இப்போ அதுதானே.
*****************************

9. முட்டை போடும், ஆனா குஞ்சு பொரிக்கத் தெரியாது, அது எது?

கணக்கு வாத்தியார் சார்.
*************************

10. பஸ் கண்டக்டரிடம் பயணி "பின்னாலே கண்ணாடி போட்டவர் டிக்கட் வாங்குவார்"

கண்டக்டர் "யாருய்யா பின்னாலே கண்ணாடி போடுவாங்க?"
*****************************

Tuesday, July 14, 2020

முட்டை மதிப்பெண்

ஒரு மாணவன் தனது தேர்வு ஒன்றில் முட்டை மதிப்பெண் கிடைத்ததால் பெரும் அதிர்ச்சி ஆனான்! காரணம் அவன் அனைத்து கேள்விகளுக்கும் சரியாக பதிலளித்திருப்பதாகவே நம்பினான்!

சரியான பதிலை எழுதியதாகவே.. அந்த மாணவன் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம்..வாதாடினான்..! சரி.. அப்படி என்ன தான் கேள்விகளுக்கு பதில் அளித்தான் எனப் பார்ப்போம்!

🔵கேள்வி;- எந்தப் போரில் திப்பு சுல்தான் உயிரிழந்தார்..?

பதில்;- அவரது கடைசிப் போரில்..!

🔵கேள்வி;- இந்திய சுதந்திரத்திற்கான.. பிரமாணம் எங்கே கையெழுத்திடப்பட்டது..?

பதில்;- காகிதத்தின் அடிப் பகுதியில்..!

🔵கேள்வி;- சுப நிகழ்ச்சிகளில்..வாழை மரங்கள் எதற்காகக் கட்டப்படுகிறது..?

பதில்;- அவைகள் கீழே விழாமல் இருப்பதற்காகக் கட்டப்படுகிறது..!

🔵கேள்வி;- விவாகரத்திற்கான முக்கியகாரணம் என்ன?

பதில்;- திருமணம் தான்..!

🔵கேள்வி;- இரவு- பகல் எவ்வாறு ஏற்படுகிறது..?

பதில்;- கிழக்கே உதித்த சூரியன் மேற்கில் மறைவதாலும், மேற்கில் மறைந்த சூரியன் மீண்டும் கிழக்கில் உதிப்பதாலும், இரவு- பகல் ஏற்படுகிறது..!

🔵கேள்வி;- மகாத்மா காந்தி எப்போது பிறந்தார்?

பதில்;- அவரது பிறந்த நாளன்று..!

🔵கேள்வி;- திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதா..?

பதில்;- இல்லை.. திருமணங்கள் செய்யும் அவரவர் வீட்டில்..!

🔵கேள்வி;- தாஜ்மகால் யாருக்காக.. யார் கட்டினார்..?

பதில்;- சுற்றுலா பயணிகளுக்காக..கொத்தனார்களால் கட்டப்பட்டது..!

🔵கேள்வி;- 8 மாம்பழங்களை 6 பேருக்கு எப்படி சரியாகப் பிரித்து கொடுப்பது..?

பதில்;- ஜூஸ் போட்டு.. 6 டம்ளர்களில் சரியான அளவாக ஊற்றிக் கொடுக்கலாம்..!

பயபுள்ள சரியாக தானே சொல்லிருக்கான்..???

Friday, July 10, 2020

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1456 TO 1470

1456. உலகில் நடப்பது எல்லாம் ஏதோ ஒரு காரணத்திற்காக நடக்கிறது என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும். அவனல்லால் இப்புவி மீதே ஓர் அணுவும் அசையாது.

1457. அர்த்தபஞ்சகம், அடையப்படும் பிரம்மம், அடையும் ஜீவன், அடையும் வழி, அடைவதால் ஏற்படும் பயன், அடைவதற்கு உள்ள தடைகள் இவற்றைக் குறிக்கும்.

1458. பெற்றோர் காட்டுவது பாசம். மற்றது ப்ரியம். பாசம் நிரந்தரமானது, எதிர்பார்ப்பு இல்லாதது. ப்ரியம் தற்காலிகமானது, எதிர்பார்ப்பு உள்ளது.

1459. முடி, நகம் வேகமாக வளர்கிறது. வேகத்தைக் குறைக்க முடியாது. அறிவு மெதுவாக வளர்கிறது. வேகத்தைக் கூட்ட முடியாது. நம் உடல் நம் வசமில்லை.

1460. வாழ்வில் பல நிலைகளில், நாம் சிறந்தவர்கள் என்பதை எல்லோருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. நமக்கு காலம், பொருள், ஆற்றல் விரயம்.

1461. மனைவி வேலைக்குப் போவதால் கணவனுக்கு பல நன்மைகள் உண்டு. அதில் முக்கியமானது அவன் தன் வேலையை எப்போது வேண்டுமானாலும் ராஜினாமா செய்யலாம்.

1462. நமக்கு காலை வணக்கம் சொல்வது கற்றுத் தரப்படவில்லை. அதனால் வழக்கத்தில் இல்லை. காரியம் ஆகவேண்டும் என்றால் வணக்கம் சொல்லுவது பழக்கம்.

1463. தொலைபேசியில் பேசும்போது யார் குறுக்கிட்டாலும் அவரை ஒதுக்குகிறோம்.நேரில் பேசும்போது தொலைபேசி குறுக்கிட்டால் அதை ஏன் ஒதுக்குவதில்லை?

1464. "என்னை ஏன் என்று கேட்க இங்கே ஒரு ஆள் இல்லை" என்று ஒருவர் இளமையில் கூவினால் அது கர்வம். அதையே அவர் முதுமையில் கூறினால் அது பரிதாபம்.

1465. கொரோநாவால் ஏற்பட்ட மிகப் பெரிய நஷ்டம், நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுடைய இறுதிச் சடங்கிற்குப் போக முடியாமல் தடை செய்து விட்டது.

1466. திரைப்படத்தில் பிரச்சனைகள் முடிந்த பிறகு திருமணம் நடக்கிறது. நிஜ வாழ்க்கையில் திருமணம் நடந்த பிறகுதான் பிரச்சனைகள் ஆரம்பிக்கின்றன.

1467. கடினம் என்றால் செய்ய முடியாதது எனப் பொருள் கொள்ளக் கூடாது. இன்னும் அதிகமாக முயற்சி செய்ய வேண்டும் எனப் பொருள் கொள்ள வேண்டும்.

1468. ஒரு அழகான சிலையை செய்வதற்கு உளி எவ்வளவு அடி வாங்குகிறது? ஒரு தரமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள நாம் எவ்வளவு முயற்சி செய்ய வேண்டும்?

1469. வருமானத்தை அதிகமாக்கி செலவைக் குறைத்தால் சேமிப்பு அதிகமாகி சந்தோஷம் வரும். சேமிப்பைக் கூட்டாமல் செலவைக் கூட்டினால் கஷ்டம் வரும்.

1470. ஒரு சோப்பு தீரும்போது மீதி உள்ள சோப்பை தூக்கி ஏறியாமல் அடுத்த சோப்பில் ஒட்டிக் கொள்வது என் பழக்கம்.இது சிக்கனமா அல்லது கஞ்சத்தனமா?






Wednesday, July 8, 2020

புதிய வத்தல் குழம்பு. / NEW VATHAL KUZHAMBU

1. துவரம் பருப்பு - 4  தேக்கரண்டி.
     Toor dhal  - 4 - teaspoons

2. கடலை பருப்பு  - 1  தேக்கரண்டி
      Bengal gram -  1  -  teaspoon

3. வெந்தயம்  1 - தேக்கரண்டி.
      Fenugreek seeds  -  1  -  teaspoon

4. கடுகு  1 - தேக்கரண்டி
      Mustard   -   1  -  teaspoon

5. தனியா 1 - தேக்கரண்டி.
       Coriander seeds  -  1  -  teaspoon

6. மிளகு  1/2 - தேக்கரண்டி.
       Black pepper  -  1/2  teaspoon

7. மிளகாய் வத்தல் - 5 அல்லது 6.
       Red chilies -  5 or 6

இவற்றைத் தனித்தனியாக வெறும் வாணலியில், எண்ணை விடாமல் வறுத்து எடுத்து, ஆறிய பிறகு, மிக்ஸியில் நைசாக பொடி பண்ணவும்.
Fry the above ingredients individually without oil on a dry pan. After it becomes cool, grind all the items into a fine powder in a mixie.

வத்தல் குழம்பு செய்யும் போது, வாணலியில் நல்லெண்ணை விட்டு, கடுகு, வெந்தயம், பெருங்காயம், ஏதாவது ஒரு வத்தல் அல்லது வெங்காயம், முருங்கை, பூண்டு, முள்ளங்கி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
When you start preparing vathal kuzhambu, heat Gingelly oil in a dry pan. Add mustard, fenugreek seeds, asafoetida, and some vaththal or vegetables like onion, drumstick, garlic, or radish and fry them.

அதனுடன் தேவையான அளவு இந்தப் பொடியையும் சேர்த்து வதக்கி, புளி ஜலம் விட்டு, உப்பு போட்டு, கொதிக்க விடவும். குழம்பு கெட்டியானவுடன் சிறிது கருவேப்பிலை சேர்க்கவும். அருமையான, ருசியான புதிய வத்தல் குழம்பு ரெடி. சாப்பிடும் போது என்னை நினைத்துக் கொள்ளவும்.
Add the required quantity of the above powder and fry it. Add tamarind juice, salt and boil it till it becomes thick. Add curry leaves at the end. Now you have a tasty, delicious vathal kuzhambu. Think about me when you eat.


Monday, July 6, 2020

நாய்க் குட்டிகள் விற்பனைக்கு

"நாய்க் குட்டிகள் விற்பனைக்கு" என்று எழுதிய பலகையை, தனது கடையின் கதவுக்கு மேல் மாட்டிக் கொண்டிருந்தார் அதன் உரிமையாளர்.

அந்தப் பலகை குழந்தைகளை வெகுவாகவே ஈர்க்கும் என்றும் நினைத்தார் அவர். அதன் படியே ஒரு சிறுவன், கடையின் முன்னே வந்து நின்றான்.

நாய்க் குட்டிகளை நீங்கள் என்ன விலைக்கு விற்கப் போகிறீர்கள் ? என்று கேட்டான். 1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாய் வரை என்று கடைக்காரர் பதில் சொன்னார். நான் நாய்க் குட்டிகளைப் பார்க்கலாமா? என்று கேட்டான்.

கடை உரிமையாளர் புன்னகைத்து, உள் பக்கமாக திரும்பியே விசிலடித்தார். நாய்க் கூண்டிலிருந்து பந்துகளைப் போல, ஐந்து குட்டியூண்டு நாய்க் குட்டிகள் வேக வேகமாக ஓடி வந்தன.

ஒரே ஒரு குட்டி மட்டும் மிகவும் பின் தங்கி மெல்ல மெல்ல மெதுவாகவே ஓடி வந்தது. பின் தங்கி, நொண்டி நொண்டி தயங்கியே வந்த அந்த நாய்க் குட்டியை கவனித்த அந்த சிறுவன், ஏன், என்னாச்சு அதுக்கு ? என்று கேட்டான்.

அந்தக் குட்டி நாயைப் பரிசோதித்த கால் நடை மருத்துவர், அதற்குப் பின் கால் தொடைப்பகுதி சரியாக வளர்ச்சி அடையவில்லை. எனவே எப்போதும் முடமாகவே தான் இருக்கும் என்று, கூறி விட்டதாகவே சிறுவனிடமும் விளக்கினார் கடைக்காரர். சிறுவனின் முகத்திலே ஆர்வம். இந்தக் நாய்க் குட்டி தான் எனக்கு வேணும் என்றான்.

தம்பி, அப்படின்னா நீ அதுக்குக் காசே கொடுக்க வேணாம். நான் அதை உனக்கு இலவசமாகவே தருகிறேன் என்றார் கடைக்காரர். அந்தக் குட்டிப் பையனின் முகத்தில் இப்போது சிறு வருத்தம்.

கடைக்காரரின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்து விரலை நீட்டிச் சொன்னான். நீங்க ஒண்ணும் எனக்கு இலவசமாகக் கொடுக்க வேண்டாம். மற்ற நாய்க் குட்டிகளைப் போலவே, இதுவும் விலை கொடுத்து வாங்கத் தகுதியானது தான். 

நான் இந்தக் குட்டிக்கு உரிய முழுத்தொகையையும் கொடுக்கிறேன். ஆனால், இப்போது எங்கிட்ட கொஞ்சம் தான் பணம் இருக்கு. பாக்கித் தொகையை அடுத்த வாரம் தருகிறேன் என்றான்.

ஆனாலும் கடைக்காரர் விடவில்லை. பையா, இந்த நாய்க் குட்டியால, உனக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை. இதனால் மற்ற நாய்க் குட்டிகளைப் போல, ஓடி ஆடி விளையாட முடியாது, துள்ளிக் குதிக்கவும் முடியாது, உன்னோட விளையாடவும் முடியாது என்றார்,

உடனே, அந்தப் பையன் குனிந்து தனது இடது கால் பேண்டை உயர்த்தினான். வளைந்து, முடமாகிப் போயிருந்த அந்தக்காலில், ஓர் உலோகப்பட்டை மாட்டப்பட்டிருந்தது.

இப்போது அவன் கடைக்காரரை நிமிர்ந்து பார்த்துச் சொன்னான். என்னாலும் தான் ஓடி ஆட முடியாது, குதிக்க முடியாது. இந்தக் குட்டி நாயின் கஷ்டத்தைப் புரிஞ்சிக்கிறவங்க தான் இதுக்கு இப்போதைக்குத் தேவை  என்றான்.

கடைக்காராரின் கண்களில் கண்ணீர் வழிந்து சிறுவனை உடனே பற்றி இறுகவே கட்டி அணைத்துக் கொண்டார். இந்த உலகில் பல தரப்பட்ட மனிதர்கள் நிறைய பேர் வாழ்கிறார்கள். ஆனால் மனிதநேயதுடன் வாழ்பவர்கள் எத்தனைப் பேர்?

உன் வலியை உன்னால் உணர முடிந்தால், நீ உயிரோடு இருக்கிறாய் என்று அர்த்தம். பிறர் வலியையும் உன்னால் உணர முடிந்தது என்றால், அப்போது தான் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என்று அர்த்தம்.

Thursday, July 2, 2020

ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாம மகிமை

ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்வதால் ஏற்படும் நன்மைகள்.

மகாபாரதத்தின் இறுதிக்கட்டம். பீஷ்மர் அம்புப் படுக்கையில் மரணத்தை எதிர்நோக்கிப் படுத்திருக்கிறார். அப்போது அவர் கூறியது தான் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாமம்.

அதாவது, எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனை ஆயிரம் பெயர் சொல்லி அர்ச்சித்து அவன் மனம் குளிர வேண்டினால் தர்மம் மீண்டும் தழைக்கும் என்பதுதான் விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் மகிமை. 

பகவானுக்கு ஆயிரம் பெயர்கள் உண்டா என்று வியப்படையலாம். இந்த ஆயிரம் பெயர் களைச் சொல்லி, பகவானை வேண்டினால் கொஞ்சமாவது தர்மம் பிழைக்கும் என்பது பீஷ்மர் வாக்கு.

உடனே பார்வதிதேவிக்குச் சந்தேகம் வந்து விட்டது. சர்வேஸ்வரனான தன் கணவனைப் பார்த்து, ”சுவாமி, இது எப்படி சாத்தியமாகும்? ஆயிரம் நாமங்கள் சொல்லி அதனால் தர்மம் தழைக்கும் என்றால், அந்த நாமங்களை பண்டி தர்களால் சொல்ல முடியலாம்; படித்தவர்களால் சொல்ல முடியலாம். ஆனால் படிக்காத ஒருவன் தர்மம் தழைக்க வேண்டும் என்பதற்காக ஆயிரம் பெயர்களை நினைவில் வைத்துக் கொண்டு சொல்ல முடியுமா?” என்று கேட்டாள்

ஈஸ்வரன் புன்னகைத்தார்.”தேவி, நீ சொல்வது சரிதான். ஏதுமறியாத ஒருவன் ஆயிரம் பெயர் சொல்லி திருமாலை வேண்டுவது நடக்காத காரியம்தான். ஆனால் அதற்கும் ஓர் வழி உண்டு..."

“ஸ்ரீராம ராம ராமேதி
ரமே ராமே மனோரமே
ஸஹஸ்த்ர நாம தந்துல்யம்
ராம நாம வரானனே”

இப்படி மூன்று முறை சொன்னால் போதும். சஹஸ்ர நாமம் சொன்ன பலனை அடையலாம்” என்று பார்வதிதேவியின் சந்தேகத்தை நிவர்த்தி செய்தார் ஈஸ்வரன்.

சரி; இப்படி சொல்வதால் நமக்கு என்ன பலன் கிடைக்கும்? என்று கேட்கலாம். மரா, மரா, மரா என்று சொல்லியே ராமநாமத்தை உச்சரித்த வேடனும் திருடனுமாக இருந்தவனே வால்மீகி மகரிஷியாக உயரவில்லையா? அது தான் ஸ்ரீராம நாம மகிமை.

மேலும் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைவரும், அனைத்து இனத்தைச் சேர்ந்தவர்களும் சொல்லலாம். முழு மனதோடு பகவானைச் சரணாகதி அடைந்தால் பலன்களை அவன் தருவான்.

பேய், பிசாசுகள் அண்டாது. வியாதிகள் அணுகாது. வைத்தியர்கள் கைவிட்ட தீராத நோயும் தீரும். சுகப்பிரசவம் சரியாக நேரும். நோயாளி களின் காதருகே அவர்கள் மனம் கேட்கும் படியாக சஹஸ்ர நாமப் பாராயணம் செய்வது மிக மிக உத்தமம். மேலும் தர்மங்களும் தழைக்கும்.

“பரித்ராணாய ஸாதுநாம்
விநாசாயச துஷ்க்ருதாம்...
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய
ஸம்பவாமி யுகே யுகே.."

அனைவரும் விஷ்ணு சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்து விஷ்ணுவின் அருளை பெறுவோமாக!
ஸ்ரீ க்ருஷ்ணா, உன் திருவடிகளே சரணம்.