Monday, November 27, 2017

வயதான தந்தையின் வேதனை.

டேய், என்னைத் தெரியுதா? நான் தான் உன் அப்பாடா. எனக்கு இன்னைக்கு 85 வயசு ஆவுது. உனக்கு என் பிறந்த நாள் ஞாபகம் இருக்கா? டேய், உன் கூட பேசணும். உனக்கு நேரம் இல்லைனு எனக்கு தெரியும். உனக்கு பல ஜோலீ. பெண்டாட்டிய கவனிக்கணும், பிள்ளையைப் பாக்கணும், பல இடத்துக்கு போவணும். 

அப்பதான் பணம் பண்ண முடியும். நீ பணக்காரன் என்று எனக்கு தெரியும். உலகத்தில் உள்ள பணம் எல்லாம் உங்கிட்டெ இருக்கு. எனக்கு பல சௌகரியம் பண்ணி கொடுத்து இருக்கே. ஆனா நான் எத்தன நாளைக்கு இப்படியே படுத்துக்கிட்டு இருக்க முடியும்? 


எத்தன  நாளைக்கு மோட்டு வளைய பாத்துக்கிட்டு இருக்க முடியும்? இந்த பாட்டை எத்தன  நாளைக்கு கேட்டுக்கிட்டு இருக்க முடியும்? முதுகு எல்லாம் வலிக்கறதுடா. என்னைக் கொஞ்சம் தூக்கி பிடிச்சுக்கோ. கை எல்லாம் நடுங்குது. எதையும் கையாலே பிடிக்க முடியல்லெ. புத்தகம், போன் எதையும். 


கண்ணு சரியா தெரியல்லெ. எழுத்தெல்லாம் சின்னதா இருக்கு. படிக்க முடியல்லெ. வேலைக்காரி குடுக்கற கஞ்சி கசக்குது. மாத்திரை சாப்பிட்டு நாக்கெல்லாம் செத்துப் போச்சு. உன் அம்மா ஞாபகம் வருது. புண்ணியவதி போய் சேர்ந்துட்டா. அவ இருந்தா  சொர்க்கமா இருக்கும்.


கிட்ட வாடா. பக்கத்துல உட்காருடா. என்னைப் பாருடா. என்னோட கலங்கிய கண்ணைப்  பாருடா. என் முடியெல்லாம் கொட்டி போச்சு. தோல் எல்லாம் சுருங்கிப் போச்சு. கண்ணெல்லாம் கலங்கிப் போச்சு. வயசாயிப் போச்சு. என்னடா சிரிக்கரே. அதுலே கொஞ்சம் கூட பிரியத்தை  காணோமே.


தனிமை கொல்லுது. நான் உனக்கு அப்பாடா. என் வாழ்க்கை முடிஞ்சு போச்சுடா. உன் மேலே எவ்வளவு பிரியம் வைத்து இருந்தேன். உனக்காக எதையும் செய்வேன்டா. உன் கூட ஒரு நிமிஷம் இருந்தா போதும் எனக்கு. யாராவது என்னைப் போல கிழவன் செத்துப் போய்ட்டா ரொம்ப வருத்தப்படரே. 


உன் கண் முன்னாலே நான் செத்து கிட்டு இருக்கிறது உனக்கு தெரியெல்லே. யாராவது சின்ன வயசுலே செத்துப் போய்ட்டா  கண்ணுலே ரத்தம் வருது. ஆனா உன் கண் முன்னாடி நான் தினமும் கிழவனாகிறது உனக்குத் தெரியல்லெ. பணம் பண்ணுவதிலேயே  குறியா இருக்கே. 


நான் சாகும் போது கூட உன் மேல் உள்ள பிரியம் போகாதுடா. நாளைக்கு நான் இருக்க மாட்டேன். அடுத்த வாரம் சந்தேகம். எனக்காக நீ நிச்சயம் கண்ணீர் விடுவாய். என்னுடன் பேச வில்லையே என்று உன் நெஞ்சு வலிக்கும். உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன். உன் கண்ணீர் என் நெஞ்சைத் தொடும்.


நாம் இப்பொழுது உயிரோடு இங்கே இருக்கிறோம். நாம் இருவரும் மனம் விட்டுப் பேசுவோம் . தகப்பனும் பிள்ளையுமா இல்லை. ஒரு நல்ல நண்பரா  பேசுவோம். உனக்கு சில விஷயம்  நான் சொல்லணும். உன்னை பெற்றதே என் அன்பை உன்னுடன் பகிர்ந்து கொள்ளத்தான். ஆனா நீ வித்யாசமா  இருக்கே.


உன்னைப் பற்றி எனக்கு நல்லாத்  தெரியும். நீ என் மகன். உன்னை நான் மிகவும் விரும்புகிறேன். எனக்காக கொஞ்சம் என் அருகில் வா. உன் நெஞ்சைத் திறந்து பேசு. சீக்கிரம் வா. இந்தக் கடைசி நிமிடங்களில் நாம் ஒருவரை  ஒருவர் புரிந்து கொள்வோம். வா ராஜா வா.

Sunday, November 19, 2017

ஒரு ஹோட்டல் முதலாளியின் சிநேகிதம்.

1967 ம் வருடம் நான் சென்னை தியாகாராய நகரில் குடி இருந்தேன். பாண்டி பஜாரில் சாந்தா பவன் என்ற ஹோட்டல் ஒன்று உண்டு. இப்பொழுது அதற்கு பாலாஜி பவன் என்று பெயர். அப்பொழுது அது மிகச் சிறிய ஹோட்டல். பொருட்கள் வெளியே தயாரிக்கப்பட்டு இங்கே கொண்டு வந்து விற்கப் படும்மொத்தம் 6-8 மேஜைகள் தான். 

தரம் நன்றாக இருக்கும். அதனால் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பிட்ட வேளையில் குறிப்பிட பொருட்கள் தான் கிடைக்கும். சாப்பாடு கிடையாது. டிபன் மட்டும்தான். சினிமா துறையைச் சேர்ந்த பல பெரும் புள்ளிகள் இரவில் இங்கு வந்து சாப்பிடுவார்கள். இரவில் ஹோட்டலுக்கு வெளியே மேஜை போட்டு வியாபாரம் நடக்கும். அங்கு தக்காளிச் சட்னி மிகவும் பிரசித்தம்.


ஹோட்டல் முதலாளியின் பெயர் தேஜு ஷெட்டி. 45 வயது இருக்கும். கொண்கனி நாட்டைச் சேர்ந்தவர். கரகரத்த குரலில் நன்றாகத் தமிழ் பேசுவார். பருத்த உடல், பெரிய தொப்பை, அழகில்லாத தோற்றம், உதடுகள் வெட்டுப் பட்டு இருக்கும். எப்பொழுதும் வெள்ளை உடை அணிந்து இருப்பார். என்னிடம் மிக சிநேகிதமாகப் பழகுவார். 


ஹோட்டலில் பொருட்களின் தரத்தைப் பற்றி அக்கறையுடன் விசாரிப்பார். எனது காப்பியில் சிறிது குடித்துப் பார்த்து தரத்தைப் பரிசோதிப்பார். ஹோட்டலில் என்ன முன்னேற்றம், மாறுதல் செய்யலாம் என்று கேட்பார். தொழிலில் அவருக்கு இருந்த அக்கறையும், கஸ்டமர்களிடம் உள்ள மரியாதையையும் நான் மிகவும் பாராட்டுவேன். 

சாப்பிட்டபின் பணம் கொடுக்காமல் நானோ, வாங்காமல் அவரோ இருந்ததில்லை. 

என் வேண்டுகோளை ஏற்று இரண்டு கடை தள்ளி இருந்த ஹோட்டல் ஒன்றை வாங்கி சாப்பாடு போட்டு நல்ல முறையில் நடத்தினார். அந்த அளவு நேர்மையாகவும், பக்தியுடன் வியாபாரம் செய்வது கஷ்டம். சிறிது சிறிதாக வியாபாரத்தை மேலே கொண்டு வந்தார். நம்பிக்கை, நாணயமாக வேலை செய்ய சொந்த ஊரில் இருந்து ஆட்களை கொண்டு வந்து, ஒரு வீடு வாடகைக்கு எடுத்து, தங்க வைத்து,  சாப்பாடு  போட்டு, சம்பளம், விடுமுறை கொடுத்து கவனித்துக் கொண்டார்.


எல்லோரும் ஒரு குடும்பம் போல் வாழ்ந்தனர். பக்கத்து கடைகளை விலைக்கு வாங்கி, மாடியில் இடத்தைப் பெருக்கி, பெரிய ஹோட்டல் ஆக  மாற்றினார். வியாபாரம் நன்றாக நடந்தது. விலை ஏற்றம் செய்யும் போதெல்லாம் என்னிடம் விவரம் கூறுவார். லாப நஷ்டம், உணவில் விஷம் கலக்கும் ஆபத்து, பலருக்கு சாப்பாடு போடும் திருப்தி பற்றி பேசுவார்.


இடத்திற்கு வாடகை, வேலைக்காரர்களுக்கு சம்பளம், மூலப் பொருட்கள், பகடி, கடை  விஸ்தாரிப்பு செலவு, மின்சாரம், ஏஸீ, மேஜை நாற்காலிகள் பழுது பார்ப்பது, தேய்ந்து போன தரையை மாற்றுவது, மருத்துவ செலவு, கடன் பேரில் கட்டும் வட்டி என்று பலவிதமான கஷ்டங்களை என்னிடம் சொல்வார். 


ஹோட்டல் நடத்துவது, தினம் கல்யாணம் செய்வது போல். வெற்றியும் வரும் தோல்வியும் வரும். நடிகரின்  வாழ்க்கையைப் போல் இது நிரந்தரம் இல்லை என்று கூறுவார். ஏன் பல ஹோட்டல்கள் சீக்கிரம் மூடி விடுகிறார்கள் என்று எனக்கு அப்பொழுது புரிந்தது. 1974 இல் எனக்குத் திருமணமான போது எங்கள் இருவருக்கும் ஒரு விருந்து கொடுத்தார். 


அதன் பிறகு நான் திருவல்லிக்கேணி சென்று விட்டதால், அடிக்கடி ஹோட்டலுக்கு செல்வதில்லை. ஒரு நாள் போனபோது கடையை விற்று விட்டு சொந்த ஊருக்குச் சென்று விட்டார் என்று கேள்விப் பட்டேன். என்ன காரணம் என்று தெரியவில்லை. கொஞ்சம் வருத்தமாகவும், ஏமாற்றமாகவும் இருந்தது. பிறகு அவரைப் பார்க்க முடியவில்லை. ஒரு நல்ல நண்பரை இழந்த வருத்தம் இப்பொழுதும் எனக்கு உண்டு. 

























  
  

Saturday, November 11, 2017

MY PRIDE VANISHED INTO THIN AIR / என் கர்வம் காற்றில் பறந்தது.

MY PRIDE VANISHED INTO THIN AIR
I belong to Tamil Nadu and I resided in Chennai for 50 years since 1967. To the extent of my knowledge, the standard of English was reasonably good in Tamil Nadu. For the past year, I am now residing in Hyderabad. The standard of English here is not so good and people mostly talked in Telugu or Hindi.

Yesterday, I went to a leading nationalized bank on some work. I met the branch manager who was a lady in her 40s. She was a Telugu but talked fluent English. She said she had worked in Erode in Tamil Nadu for 5 years and she knew Tamil also. During the talk, I told her that in the whole of India, only in Tamil Nadu, people could manage in English without knowing Tamil.


What she replied was a great shock to me. She said, "Sir, what you say is an old story. When I was in Erode, I suffered a lot, in dealing with people, without knowing Tamil. No one understood English and I had to learn Tamil with great difficulty." I had to cut a sorry figure before her. My pride about my native state vanished in thin air.


என் கர்வம் காற்றில் பறந்தது

நான் தமிழ் நாட்டைச் சேர்ந்தவன். 1967இல் இருந்து சென்னையில் 50 வருடங்கள் வாழ்ந்தவன். என் மாகாணத்தைப் பற்றி எனக்கு ஒரு கர்வம் உண்டு. 1990 வரை ஆங்கிலத்தில் மிகப் புலமை வாய்ந்தது. 

இப்பொழுது மூன்று வருடங்களாய் ஹைதராபாத்தில் இருக்கிறேன். இங்கு ஆங்கிலம் பலருக்குத் தெரியவில்லை. எல்லோரும் தெலுங்கும் ஹிந்தியும் தான் பேசுகிறார்கள்.

சமீபத்தில் ஒரு பெரிய வங்கிக்கு ஒரு வேலையாய்ப் போய் இருந்தேன். அங்கு தலைமை அதிகாரியை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அவர் ஒரு 40 வயது மதிக்கக்கூடிய மங்கை. அவர் தெலுங்கு பேசுபவர். 

ஆனாலும் நல்ல ஆங்கிலத்தில் பேசினார். பேசும் பொழுது, அவர் நல்ல தமிழிலும் பேசினார். தமிழ் நாட்டில் ஈரோடில் 5 வருடங்கள் வேலை பார்த்ததாகவும் அதனால் தமிழ் தெரியும் என்று சொன்னார். 

நான் சொன்னேன், இந்தியாவிலேயே தமிழ்நாடு ஒன்றில் மட்டும் தான் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள், தமிழ் தெரியாதவர்கள் ஆங்கிலத்தில் பேசி சமாளிக்க முடியும் என்று சொன்னேன்.

அதற்கு அவர் கூறிய பதில் எனக்கு மிக அதிர்ச்சியாய் இருந்தது. " சார், நீங்கள் சொல்வது ஒரு பழைய கதை. இப்பொழுது அப்படியில்லை. நான் ஈரோடில் வேலை பார்க்கும் பொழுது தமிழ் தெரியாமல் மிகவும் கஷ்டப் பட்டு விட்டேன். 

பலருக்கு ஆங்கிலத்தில் பேசினால் புரியவில்லை. அதற்காக நான் கஷ்டப் பட்டுத் தமிழ் கற்றுக்கொண்டேன்" இதை கேட்டு எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. தமிழ் நாட்டைப் பற்றிய என் கர்வம் காற்றில் பறந்தது.

Tuesday, November 7, 2017

யார் சிறந்த நடிகர்?

வெற்றி அடைந்து விட்டால் ஒருவர் சிறந்த நடிகர் இல்லை. அது அவரது வியாபாரத் திறமையைக் காட்டுகிறது. அவர் படம் அதிக நாட்கள் ஓடி விட்டால் அவர் சிறந்த நடிகர் இல்லை. அந்தப் படத்தில் மற்றவர்களின் பங்கு இருக்கிறது. 

சிலருக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும். நல்ல இயக்குநர்கள் அவரை நடிக்க வைத்து இருப்பார்கள். நல்ல தயாரிப்பாளர்கள் அவரை உபயோகப் படுத்தி இருப்பார்கள். நல்ல கதையோ, பாட்டோ அந்தப் படத்தின் தரத்தை உயர்த்தி இருக்கும்.


எப்பொழுதும் கதாநாயகனாகவே நடித்து, ஒரு பெண்ணுடன் பல நாடுகளில் காதல் பாட்டுக்கள் பாடி, பத்து பேரை அடித்து வீழ்த்தி, "." வசனம் பேசி, ஊருக்கெல்லாம் நல்லவனாக நடிப்பவர் சிறந்த நடிகர் இல்லை. அவர் ஒரு சிறந்த வியாபாரி. மக்களின் ரசனையை நன்கு புரிந்து கொண்டவர்.


ஒரு திறமையான நடிகர் கதாநாயகன், வில்லன், அப்பா, சகோதரன், இளைஞன், வயதானாவன் என்று பலவிதமான பாத்திரங்களை ஏற்று, இயற்கையாக நடித்து, பல கோணங்களில் அந்தப் பாத்திரத்திற்கு உயிர் ஊட்ட வேண்டும். அவர் நடிப்பைப் பார்த்து மக்கள் உணர்ச்சி வசப் பட  வேண்டும்.


ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். தமிழில் "ஆசை" என்று ஒரு படம். திரு. பிரகாஷ் ராஜ் வில்லனாக நடித்திருப்பார். படத்தில் அவரைப் பார்த்தால் அவரைக் கொலை செய்ய வேண்டும் போல் ஒரு வெறுப்பை உண்டாக்குவார். அதற்குப் பெயர் நடிப்பு.


தனக்காக நடிக்காமல் பாத்திரத்திற்காக நடிக்க வேண்டும். ஓரளவுக்கு தான் நடிக்கும் எல்லாப் படங்களிலும் அப்படி நடிக்கும்  நடிகர் தமிழ் நாட்டில்  திரு பிரகாஷ் ராஜ் ஒருவர் மட்டும் தான். ஹிந்தியில் அநுபம் கெர் .இது என் தாழ்மையான அபிப்பிராயம். உங்கள் அபிப்பிராயம் வேறு மாதிரி இருக்கலாம். அதற்கு நான் என்ன செய்வது?


Monday, November 6, 2017

HOW TO BE A GOOD GUEST? / நல்ல விருந்தாளியாக இருப்பது எப்படி?

HOW TO BE A GOOD GUEST?

There was a time, with no communication facility, friends and relatives longed to see each other once in a while and enjoy their company to develop love, affection, and intimacy. Now with modern development in communication people do not have the mind or means to visit the other. However, there are certain unwritten rules to be observed during a visit to have smooth sailing. 


1. The visit may be voluntary and or on the invitation. But it should be mutual.

2. The guest must get gifts for the host according to his status.
3. If there is a lack of space in the host's house, the guest must stay outside.
4. The guest should not visit when the host has another guest.
5. The guest should not visit during exam time for children.
6. The guest must come forward to share outside expenses with the host.
7. The guest must share the domestic chores with the host.
8. The guest must adhere to the timings, food habits etc of the host.
9. It is better to avoid discussions on controversial topics.
10. If the visit is for sightseeing, the guest should make his own arrangements.
11. The stay must not exceed 3 to 5 days covering weekends/holidays.
12. It is better not to give special attention to our family members.
13. We should ignore the fight, if any, among the children.
14. We must handle their household equipment with care and concern.
15.Any other welcome steps you are already following.

நல்ல விருந்தாளியாக இருப்பது எப்படி? 

சில வருடங்களுக்கு முன்பு வரை உறவினர்களையும், நண்பர்களையும் சந்தித்து மகிழ எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். இப்போது அதற்கு நேரமில்லை மேலும் தொலைபேசியில் பேச முடிகிறதால் சந்திக்க ஆர்வமில்லை. நாம் நமது உறவினர்களையும், நண்பர்களையும் சந்தித்து, அவர்களுடன் தங்கி நமக்குள் அன்பு, பாசம், அன்நியோனியம் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி அவர்களுடன் தங்கும் பொழுது சில வழி முறைகளைப் பின் பற்ற வேண்டும். அது ஒருவருக்கு ஒருவர் நல்ல உறவை ஏற்படுத்தும். 

1. தானாக அல்லது அழைப்பின் பேரில் நாம் போகலாம். ஆனால் அது பரஸ்பரமாக இருக்க வேண்டும்.

2. போகும் போது, நமது தகுதிக்குத் தகுந்தால் போல் பரிசுகள் வாங்கிச் செல்ல வேண்டும்.
3. அங்கு இடப் பற்றாக்குறை இருந்தால் வெளியே ஹோட்டலில் தங்குவது நல்லது.
4. அங்கு ஏற்கனவே ஒரு விருந்தாளி இருக்கும் போது,  போவது நல்லது அல்ல.
5. பள்ளி நாட்களிலும் பரிட்சை சமயத்திலும் போவதை தவிர்க்க வேண்டும்.
6. வெளியே செல்லும் போது,  ஆகும் செலவுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
7. வீட்டு வேலைகளில் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்க வேண்டும்.
8. அவர்களுடைய நேரம், உணவுப் பழக்கம் முதலியவற்றை அனுசரிக்க வேண்டும்.
9. பிரச்சனைகள் வரும் விஷயங்களைப் பற்றி விவாதிக்காமல் இருப்பது நல்லது.
10.போவது, ஊர் சுற்றிப் பார்க்க என்றால், நாமே தனியாகப் போவது நல்லது.
11. அங்கு 3-5 நாட்களுக்கு மேல் தங்கக் கூடாது. விடுமுறை நாட்களில் செல்வது நல்லது.
12. தன்னுடைய குடும்பத்தைத் தனிப்பட்ட முறையில் கவனிப்பதை தவிர்க்க வேண்டும்.
13. குழந்தைகள் சண்டையை பெரிது படுத்தக் கூடாது.
14. அவர்கள் வீட்டுப் பொருட்களை ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும்.
15. நீங்கள் ஏற்கனவே அனுசரிக்கும் வேறு நல்ல வழிமுறைகளைக் கடைப் பிடிப்பது நல்லது.





Sunday, November 5, 2017

ராமன் எத்தனை ராமன் ?

காலை மணி ஆறு . எழுந்தவுடன் பல் விளக்கி, முகம் கழுவி சாப்பாட்டு மேஜைக்கு வந்தேன். என் மனைவி காப்பி கொடுத்தாள். "அப்பாவிற்கு" என்றேன். "இன்னம் எழ வில்லை" என்றாள். 

காப்பியுடன் மெதுவாக அவர் அறைக் கதவைத் திறந்து உள்ளே சென்றேன். அப்பொழுதான் விழித்திருப்பார் போல. என்னை பார்த்து மெலிதாக புன்னகை செய்தார். அந்த அழகே தனி. 


பணம், வசதி, நல்ல வகையான கவனிப்பு, சாப்பாடு, நிம்மதியான உறக்கம் மட்டும் தாய், தகப்பனை சந்தோஷப்படுத்தாது. அதற்கும் மேலே தன் பிள்ளைகளிடம் அவர்கள் எதிர்பார்ப்பது.


காப்பியை பக்கத்தில் வைத்துவிட்டு, அவரது வலுவற்ற புஜங்களுடன் சேர்த்து அணைத்து கையைப் பிடித்து நிற்க வைத்தேன். 85 வயதிலும் எல்லாம் தானே செய்து கொள்ள விரும்புவார். பிறர் உதவி பிடிக்காது, என்னைத் தவிர.  


என் மீது அவருக்குத் தனிப் பாசம் உண்டு. ஏன் என்றால் நான் ஒரு மகன் தான். மற்ற இருவரும் பெண்கள். அம்மா இல்லை. எழுந்து பல் விளக்கி நாற்காலியில் அமர்ந்தார். காப்பியைக் கொடுத்தேன். 


அவர் கைக்கு தாங்குவது போல் சூடு இருந்தது. அவரிடம் எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி எதுவும் கிடையாது. அவர் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். எனக்கு ஒரு ரோல் மாடல்.


குடித்து முடித்ததும் இரவு தூக்கம் பற்றி விசாரித்தேன். என்னப்பா, எப்படி இருக்கீங்க? சாப்பாடு டேஸ்டா இருக்கா? பேரன்,பேத்திகள் ஏதும் உங்களுடன் பேசினார்களா? இன்றைக்கு  உங்க பிறந்த நாளுப்பா! நான் ஆபிசுக்கு லீவு போட்டிருக்கேன்பா.


அதான் உங்களுக்குப் பிடிச்ச லைட் ரோஜா கலர்ல ஒரு சட்டை, சிம்பிளா ஒரு 4 முழ வேஷ்டி வாங்கியிருக்கேன். உங்க பிறந்த நாளுக்கு, காலைல நம்ப தெரு பிள்ளையார் கோவிலில் காலை, மதியம் இரண்டு வேளை அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்திருக்கேன்.


சாயந்திரம் உங்களுக்கு புது கண்ணாடியும், நீங்கள் கேட்ட புத்தகமும் ஆர்டர் பண்ணி இருக்குப்பா. அவருக்கு பிடித்த பால் பாயசம் மனைவி செய்து இருந்தாள். அவர் குளித்த பின் கிளம்ப வேண்டும். வாளியில் சரியான சூட்டில் சூடுநீர் வைத்து விட்டு டவல்ஐ  கொடுத்து குளியல் அறைக்கு அனுப்பி வைத்தேன். 


நான் செய்த ஏற்பாடுகளை கேட்டு மனதில் சந்தோஷப் படுவார். அன்ன தானம் அவருக்கு மிகவும் பிடிக்கும். ஏழைகளை கண்டு இறங்கும் குணம் அவரது.  என் கையைப் பிடித்துக் கொண்டு சோபாவில் வந்து அமர்ந்தார். மூக்குக் கண்ணாடியைத் துடைத்து விட்டு அவருக்குப் போட்டு விட்டேன். இதோ இன்னம் சிறிது நேரத்தில் கிளம்ப வேண்டும். அப்புறம் பார்க்கலாமா?

குழந்தைகளை யார் கெடுத்தது?

நான் என் குழந்தைகளின் தாயார். நீ பாட்டி. நீ அவர்களுக்கு ரொம்ப செல்லம் கொடுக்கிறாய். நீ அவர்களுக்கு இல்லை என்று சொல்வதே இல்லை. நான் கண்டிப்பாக வளர்க்க நினைத்தால் அதை நீ கெடுக்கிறாய். தானே பல் தேய்க்க, தலை வாரிக் கொள்ள, தானே சாப்பிட, தானே ட்ரெஸ் போட்டுக்க, நேரத்துக்குத் தூங்க, வீட்டுப் பாடத்தை எழுத. எல்லாவற்றிலும் நீ தலை இடுகிறாய்.

நான் அவர்கள் கெட்டுப் போவதை விரும்பவில்லை. அவர்கள் நல்ல குழந்தைகள் ஆக வளர வேண்டும். அவர்களுக்கு டிசிப்லின் வரணும். தானே எல்லாவற்றையும் செய்து கொள்ள, ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்க, பகிர்ந்து கொள்ளத் தெரியாது. அவர்கள் குழந்தையாய் இருந்த போது தானே தூங்க வேண்டும் என்று நான் நினைத்தால், நீ அவர்களை தோளில் போட்டு தூங்கப் பண்ணுவாய்.


அவர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் உடனே ஓடுகிறாய். எப்படி அவர்கள் தானே செய்து கொள்வார்கள்? அவர்களுக்கு நிறைய பரிசுகள் கொடுக்கிறாய். அவர்கள் அதை பார்த்து சந்தோஷப் படுகிறார்கள். அந்த மாதிரி என்னால் கொடுக்க முடியாது. என்னை பற்றி என்ன நினைப்பார்கள்?


பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பி வந்தால் உடனே அவர்களிடம் ஓடுகிறாய். அவர்களுக்கு பிடித்தமான இனிப்பு, பணியாரம் எல்லாம் செய்து கொடுக்கிறாய். அதனால் அவர்கள் எப்பொழுதும் உன்னிடம் வருகிறார்கள். எல்லாப் பாட்டிகளும் இப்படித்தான். குழந்தைகளைக் கெடுக்கிறார்கள். உன்னை ஊருக்கு அனுப்பி விடலாமா என்று கூட யோசித்தேன்.


நீ இறந்து போகும் வரை.


எப்படி அவர்களுக்கு சொல்வது? சாவு என்றால் என்ன வென்று தெரியாதே. நம்ப மாட்டார்களே. தினம் உன்னை நினைத்து அவர்கள் அழுகிறார்கள். இப்பொழுது எனக்கு புரிகிறது. அவர்களுக்கு நீ எவ்வளவு முக்கியம் என்று. உன்னை எவ்வளவு நேசித்தார்கள் என்று. இவ்வளவு சீக்கிரம் நீ இறப்பாய் என்று நான் நினைக்கவில்லை.


இப்பொழுது அவர்கள் யார் உதவியும் இல்லாமல் எல்லா வேலைகளையும் தானே செய்து கொள்கிறார்கள். நல்ல மார்க்கு வாங்குகிறார்கள். படிப்பில் கவனம் செலுத்துகிறார்கள். உன் சமையல், சாப்பாடு, கதைகள், அன்பான வார்த்தைகள், கை மருந்துகள், எல்லாவற்றையும் விட உன் அன்பு எல்லாவற்றையும் நேசிக்கிறார்கள்.


நான் தவறு செய்து விட்டேன். உன்னை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. உன்னை நினைத்து என் குழந்தைகள் ஏங்குகின்றன. எப்பொழுதும் சிரித்த முகத்துடன் சந்தோஷமாக இருக்கும் பாட்டி நீ. உன்னுடைய அறிவுரை, கவனிப்பு, அன்பு அவர்களுக்கு இப்பொழுது கிடைக்க வில்லை.


இப்பொழுது அவர்கள் வெற்றி காணும் பொழுது உன்னை நான் நினைக்கிறேன். உன்னைக் கடும் சொற்களால் பேசியது என் தவறு. நீ உடனே திரும்பி வா. நான் ஒரு வார்த்தை கூட கடிந்து சொல்ல மாட்டேன். நீ அவர்களுக்கு எதை வேண்டுமானாலும் கொடு. எனக்கு சம்மதம். திரும்பி வா.


உன்னால் வர முடியாது என்று எனக்குத் தெரியும். அவர்கள் மனதில் என்ன எண்ணங்கள் ஓடுகிறது என்று என்னை விட உனக்குத்தான் நன்கு தெரியும். அவர்கள் நம்பிக்கை, பயம், தனிமை எல்லாவற்றையும் பற்றி உனக்குத் தெரியும். வா. வந்து அவர்கள் எவ்வளவு மாறி விட்டார்கள் என்று பார்.


அவர்கள் கண்களைப் பார், புதிய உடைகளைப் பார், காற்றில் அவர்கள் முடி பறப்பதைப் பார், அவர்கள் வயது வந்தவர்களாக பொறுப்புடன்  இருப்பதை பார். நீ அவர்களை விட்டுப் போகவில்லை. அவர்களுடன் நீ சந்தோஷமாக இருந்தாய். உன்னுடைய அன்பு தான் எல்லாமே. உனக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரிய வில்லை. நீ திரும்பி வந்தால் மிகவும் சந்தோஷப் படுவேன். வருவாயா?


இப்படிக்கு உன் அன்புள்ள 

மருமகள் / மகள்