Friday, November 12, 2021

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1756 TO 1770

1756. நமது மனது, அகங்காரம், பாசம், ஆசைகள், கோபம், வெறுப்பு, கவர்ச்சி போன்ற எண்ணங்களில்  மூழ்கும் நேரம் நமக்கு கெட்ட நேரம்.

1757. இழந்ததைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். இருப்பதைக் கொண்டு சந்தோஷப்படுங்கள். மேலும் முயற்சி செய்தால் இழந்தது திரும்ப வரும்.

1758. தீதும் நன்றும் பிறர் தர வாரா.  நமது சந்தோஷம், கஷ்டங்களுக்குக் காரணம் நாம்தான். வேறு யாரும் இல்லை. இதை நன்கு உணர்ந்தவன் ஒரு ஞாநி.

1759. வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும். துன்பத்தினால் துவளக்கூடாது. அதனால் ஏற்படும் காயங்கள் காலத்தால் குணமாகும். 

1760. நேர்மை, வாய்மை, தேவையான பணம், அளவான உணவு, உடற்பயிற்சி, தியானம் இவைகள் போதும் நோயின்றி, கவலையின்றி ஆரோக்கியமாக வாழ.

1761. மரத்தின் வேர் மரத்தின் உயிரைக் காக்க தகப்பனைப் போல் வேலை செய்கிறது. பூக்கள், இலைகள், காய்கள், கனிகள் குழந்தைகளாக அனுபவிக்கின்றன.

1762. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. நம்முடன் சேர்ந்து வாழ்வோரை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு முன் நம்மை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

1763. ஒருவருக்கு எதையும் எதிர்க்க உரிமை இருப்பது போல, மற்றவர்க்கு  அதை ஆதரிக்க உரிமை இருக்கிறது என்ற உண்மை ஏன் பலருக்குப் புரிவதில்லை?

1764. கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். ஒரு விஷயத்தை தீர விசாரித்து அதைப் பற்றி நன்கு தெரிந்த பின் பேசுவது, எழுதுவது நல்லது.

1765. குடிநீர் நம் உயிர் நாடி. சுதந்திரம் கிடைத்து 70 வருடங்கள் ஆகியும் குடிநீர் பிரச்னை தீரவில்லை. அதற்கு உங்கள் ஆலோசனை என்ன?

1766. இன்னமும் பையனைப் பெற்றவர்கள் பெண்ணைப் பெற்றவர்களை  தரம் குறைந்து  நடத்துகிறார்களா, இல்லை மாறி விட்டார்களா?

1767. கற்றாரை கற்றாரே காமுறுவர். படிக்காதவர்கள் விரும்ப மாட்டார்கள். பொறாமை காரணம் அல்ல. தாழ்வு மனப்பான்மை தான் காரணம்.

1768. திருமணத்திற்கு சிவப்பானவர்களையே பலரும் விரும்புகிறார்கள். நிறம் குறைந்து இருந்தாலும் அழகு, குணம் நிறைந்த பலர் இங்கு இருக்கிறார்கள்.

1769. நட்பு புனிதமானது, ஆழமானது, அழகானது, துயர் துடைப்பது, சிந்திக்க, சிரிக்க, நேசிக்க, விட்டுக் கொடுக்க வைப்பது, நம்மிடம் நிறைந்து உள்ளது.

1770. இன்றய இளைஞர்கள் எதிலும் புதுமை புதுமை என்கிறார்கள். பழமையைப் பற்றி ஒன்றும் தெரியாமல் அவர்கள் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது. 

No comments :

Post a Comment