Friday, January 15, 2021

போகிற போக்கில்.

1. ஞானம்:

மனிதனுக்கு ஒரு பொருள் மேலும் மேலும் வந்து சேரும்போது, அந்தப் பொருளின் மீது உள்ள விருப்பம் குறைகிறது என்பது பொருளாதாரத் தத்துவம். அதே பொருள் அளவுக்கு அதிகமாக வரும்போது அதன் மீது வெறுப்பு உண்டாகிறது. இவ்வாறு ஒவ்வொரு பொருளின் மீதும் வெறுப்பு ஏற்பட்டு, இனி எனக்குப் பொருளே வேண்டாம் என்ற நிலை வருவது தான் ஞானம்.

2. தியானம்:

தியானம் செய்வது என்பது, தரையில் ஒரு ஆசனத்தில் அமர்ந்து, கண்ணை மூடிக்கொண்டு இருப்பது அல்ல. நாற்காலியில் நன்கு சௌகரியமாக அமர்ந்து, இரண்டு கைகளையும் தனது முழங்காலில் வைத்துக்கொண்டு, உள்ளேயும், வெளியேயும் மூச்சு விடுவதை ஒரே சீராகச் செய்து அதில் முழு கவனத்தையும் செலுத்துவதே தியானம் செய்வதாகும்.

3. பேச்சும் / எழுத்தும்:

நமது மனதில் தோன்றும் எண்ணங்களை வாயினால் கூறுவது பேச்சு எனப்படும். அந்த எண்ணங்களை கையினால் எழுதுவது எழுத்து எனப்படும். பேச்சு குழந்தையாய் இருக்கும் போதே வந்து விடுகிறது. எழுத்து பள்ளிக்குச் சென்ற பிறகு வருகிறது. நாம் பேசுவதை விரும்புகிறோம். எழுதுவதை விரும்புவதில்லை.

4. வாயும் வயிறும்:

1. வயிறு உணவு கேட்டால் அது பசி. நாக்கு உணவு கேட்டால் அது ருசி. பசிக்கு சாப்பிடவேண்டும். ருசிக்கு சாப்பிடக் கூடாது. 

2. உணவு உண்டபின் தூங்கக் கூடாது. தூங்குவதற்காக உணவு உண்ணக் கூடாது. 

3. குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடவேண்டும். நினைத்த நேரத்தில் சாப்பிடக்கூடாது.

4. பிறர் விரும்புவதைப் பேசவேண்டும். நாம் விரும்புவதைப் பேசக்கூடாது.

5. இடது /  வலது:

இடது கையால் மணி அடித்துக்கொண்டே வலது கையால் தீபாராதனை காட்டுவது கஷ்டமான காரியம். அதேபோல இடது கையால் ரவையைத் தூவிக்கொண்டே வலது கையால் உப்புமா கிளருவது கஷ்டமான காரியம். ஒன்று மாற்றி ஒன்று செய்து விட்டால் ஆபத்து.

No comments :

Post a Comment