Sunday, March 31, 2019

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1171 TO 1185

1171. வெற்றி அடைய வயது முக்கியமில்லை.எந்த வயதிலும் முயற்சி செய்தால் வெற்றி அடைவது நிச்சயம்.பிறகு வருத்தப்பட்டு விளக்கம் கூறத் தேவையில்லை

1172. 
உறவினர்களுடன் பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும், இலை மறைவு, காய் மறைவு போல எப்போதும் பழகினால் உறவு நிச்சயம் நீடித்து நிற்கும்.

1173. தன்னை மறந்து, உணர்ச்சி வசப்பட்டு, அதிக அளவில் ஒருவருடன் பழகுவதால் தான்,கருத்து வேறுபாடு மற்றும் பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன.


1174. தான் அறிவாளி,மற்றவர்கள் முட்டாள் என்று நினைப்பது தவறான,விரும்பத்தகாத அணுகுமுறை. மற்றவர்களுக்கும் அறிவுண்டு என்று நினைக்க வேண்டும்.


1175. உண்மையாக, மனப்பூர்வமாக ஒருவரைப் பாராட்டுங்கள். பிறகு பாருங்கள், அவர் உங்களிடம் காட்டும் அன்பை. அப்படியே சொக்கிப் போய் விடுவீர்கள்.


1176. உளவியல் ரீதியாக, மனைவியைக் கிண்டல் செய்யும் பல கணவன்மார்கள், தங்கள் மனைவியை அதிகம் நேசிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். சரியா தவறா?


1177. நாட்டு வைத்தியத்தில் நம்பிக்கை உள்ளவர் பலர். ஆங்கில மருத்துவத்தில் நம்பிக்கை உள்ளவர் பலர். நம்பிக்கை நோயின் தீவீரத்தைப் பொருத்தது.


1178. பூந்தி கொட்டையைப் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? அதன் உபயோகம் என்ன தெரியுமா? தெரிந்தால் கூறுங்களேன். மற்றவர்கள் அறியட்டும்.


1179. சென்னையில் பருவநிலை டிஸம்பர்,ஜனவரி மாதங்களில் மட்டும் நன்றாக இருக்கும். ஹைதராபாதில் ஏப்ரல்,மே மாதங்களில் மட்டும் நன்றாக இருக்காது.


1180. கல்யாண விருந்து சாப்பாடு சாப்பிடப் போனவர்களுக்கு கஞ்சியும், கூழும் கடித்துக் கொள்ள சிறு வெங்காயமும் கொடுத்தால் என்ன நினைப்பார்கள்?

1181. என் அனுபவத்தில் பார்த்தால், 65 வயதுக்குப் பிறகு உலக நடப்புகள் ஒருவரை பாதிக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. உங்கள் அனுபவம் எப்படியோ?


1182. 
புளியம்பழம் ஏன் வளைந்து இருக்கிறது என்ற தத்துவார்த்தமான கேள்விக்கு, பலர் விடை எழுதுகிறார்கள். அது இறைவனின் படைப்பு என்பதைத் தவிர!!

1183. காலையும், மாலையும் "ஆர்கனிக் இந்தியா" விற்கும் துளசி கிரீன் டீ பைகள் [ஜிஞ்ஜர்,லெமன் கலந்தது] வெந்நீரில் கலந்து குடிப்பது நல்லது.


1184. 
50 வயதுக்கு மேற்பட்டவர், ஓம்ரான் [OMRON] தானியங்கி ரத்த அழுத்தக் கருவி [ரூ.1750] வாங்கி வாரா வாரம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

1185. ஒரு சின்ன தூசி என் கண்ணில் விழுந்து விட்டது.டாக்டருக்கு ரூ.700/மருந்து ரூ.800/போக்குவரத்து ரூ.300/ மொத்தம் ரூ.1800/ அடேங்கப்பா !!!


மனதில் தோன்றிய எண்ணங்கள் 1156 TO 1170

1156. எல்லோரும் அரசியலைப் பற்றி எழுதுகிறார்கள். ஒரு அரசியல் கட்சியை ஆதரிப்பதால் என்ன பலன் என்று சொன்னால், நானும் ஒரு கட்சியை ஆதரிக்கலாம்.

1157. ஜனநாயகம் என்பது, பலருடைய சந்தோஷத்திற்காக ஒருவர் கஷ்டப்படுவது. இப்போது ஒருவருடைய சந்தோஷத்திற்காக, பலர் கஷ்டப்படுகிறார்கள். சரிதானே?


1158. தலைவர் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறார். தலைமைப் பதவி ஒரு திறமை. சைக்கிள் ஒட்ட, சமையல் செய்ய கற்றுக்கொள்வது போல அதை கற்க வேண்டும்


1159. தெரியாத தேவதையை விட தெரிந்த சாத்தான் மேல் என்று நமக்கு சிறு வயதில் இருந்தே பாடம் நடத்தி மண்டையில் ஏற்றி இருக்கிறார்களே என்ன செய்ய?


1160. கொஞ்சமும் தகுதி இல்லாதவர்களை தேர்ந்தெடுத்து விட்டு குத்துதே,குடையுதே என்றால் யார் என்ன பண்ண முடியும்?ஐந்து வருடம் பொறுக்க வேண்டும்


1161. அரசியல்வாதிகள் ஊழல் அதிகம் செய்கிறார்களா, மக்கள் அதிகம் ஊழல் செய்கிறார்களா, என்பது விவாதிக்க வேண்டிய ஒன்று. நீங்களே சொல்லுங்களேன்.


1162. தேர்தல் ஆணையத்தை நியமித்து விட்டு அதன் விதிமுறைகளை பின்பற்றாமல் செலவு செய்வது என்ன நியாயம் என்று யாராவது எண்ணிப் பார்க்கிறார்களா?


1163. ஹிந்தி பேசாத பல மாநிலங்கள் அகில இந்திய கட்சிகளைத் தவிர்த்து பிராந்தியக் கட்சிகளை ஆதரிக்கின்றன.இது நமது நாட்டிற்கு நல்லதா, கெடுதலா?


1164. ஒரு கட்சி பெரும்பான்மை அரசு அமைத்தால்,லஞ்சம், ஊழல்,ஸர்வாதிகாரம் நடக்கிறது.கூட்டணி அமைந்தால், குடுமிபிடி சண்டை நடக்கிறது.என்ன வழி?


1165. சமூகம் இல்லாமல் நாம் இல்லை. அரசியல் இல்லாமல் சமூகம் இல்லை. சமூகம் உய்ய, நாம் அதை முன்னேற்ற அல்லது சீர்படுத்தப் பாடுபடுவது நம் கடமை


1166. ஒருவர் அரசியல் கட்சிகளின் மேல் உள்ள தனது பார்வையை, நடுநிலையோடு விமர்சித்து எழுத வேண்டும். அதுவே அவர் சமூகத்திற்கு செய்யும் தொண்டு.


1167. 
இருப்பதில் நல்லதை, நாட்டிற்கு நல்லதை, நமக்குத் தோன்றும் நல்லதை, நல்லவிதமாக, நாலு பேருக்குப் புரியும் விதத்தில் நாம் சொல்ல வேண்டும்.

1168. லஞ்சம், ஊழல், கறுப்புப் பணம், கற்பழிப்பு, மது, மாது, கொலை, கொள்ளை, அராஜகம், நாடாய்யா இது? இந்தப் புண்ணிய பூமி பாவ பூமி ஆகிவிட்டது.


1169. தனி மரம் தோப்பாகாது.தனி மனிதன் நாட்டை திருத்த முடியாது.முதலில் மக்கள் திருந்த வேண்டும்.பிறகு அரசியல்வாதிகள்.பிறகு அரசு.பிறகு நாடு. 


1170. ஒருவரால் ஏமாற்றப்பட்ட பிறகுதான் உலகம் தெரிகிறது. ஞானம் பிறக்கிறது. ஜாக்கிரதை உணர்வு வருகிறது. தற்காப்பு முயற்சி எடுக்கப் படுகிறது.