Sunday, December 30, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1006 TO 1020

1006. ஹிந்துக்கள் மட்டும் தான் வாழ்த்துகள் சொல்வது. கிரிஸ்தவர்கள், முஸ்லிம்கள் சொல்வது கிடையாது. வாழ்த்தவும் வேண்டாம், வீழ்த்தவும் வேண்டாம்.

1007. திரு எம்.ஜி.ஆர் அவர்களை நாம் போற்றிப் புகழுகிறோம். மக்களுடைய நன்மைக்காக அரசியலில் அவர் செய்த அரிய சாதனைகளை விளக்கிக் கூற முடியுமா?

1008. கட்டிக் கொடுத்த சோறும், சொல்லிக் கொடுத்த வார்த்தையும் அதிக நாளைக்கு நிலைக்காது என்று சொல்வார்கள். தானாக பிழைக்கும் வழி தேடவேண்டும்.

1009. ஒவ்வொருவரும் அரசியலில் ஒரு தலைவரை ஆதரிக்கிறீர்கள். அவர் பதவிக்கு வந்து லஞ்சம்,ஊழல்,ஏழ்மையை ஒழிக்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?

1010. சரி, போகிறது. நமது நாட்டிற்கு இப்போது தேவை முன்னேற்றம் அல்ல. லஞ்சம் ஊழல் ஒழிய வேண்டும். அதற்கு உங்கள் தலைவர் உறுதிமொழி தருகிறாரா?

1011. என்னை தப்பா நினைக்காதீங்க. மதம், சாதின்னு கட்டிக்கிட்டு அலையுறோமே, நாம் நமது  பெற்றோரின் குழந்தைதான் என்று நமக்கு நிச்சயமாக தெரியுமா? 

1012. எனக்கு என் பெற்றோர்களைத் தெரியாது. அவர்கள் தான், நான் அவர்கள் பிள்ளை என்று சொன்னார்கள். அதை நான் இதுவரை நம்பிக்கொண்டு இருக்கிறேன்.

1013. நான் ஒரு முஸ்லிமாக, கிருஸ்துவனாக இருக்கலாம்.நான் பிறக்கும் போது ஆஸ்பத்திரியில் குழந்தை மாறி இருக்கலாம். இறைவனுக்கு தான் தெரியும்.

1014. தந்தை என்பார், சகோதரன் என்பார், நண்பர் என்பார். மன வேற்றுமை வந்து விட்டால் மமதை வந்துவிடும். உறவுமுறை மறந்து விடும். இதுதான் உலகம்.

1015. நாம் பிறக்கும்போதே நமது வாழ்க்கைப் பாதை இறைவனால் போடப்பட்டு விட்டது. அந்த வழியில் நாம் நடக்கத்தான் செய்கிறோம்.அதை மாற்ற முடியாது.

1016. நமக்கு வருடப் பிறப்பு சித்திரை மாதத்தில். ஜனவரிக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் வாழ்த்து சொல்லாமல் யாரும் இருக்கப் போவதில்லை.

1017. நிஜ வாழ்க்கையில் பேஸ்ட்க்கு அப்புறம் காப்பி வரும். கம்ப்யூட்டர் வாழ்க்கையில் காப்பிக்கு அப்புறம் பேஸ்ட் வருது. ஒண்ணுமே புரியலே.


1018. பெண்கள் அசிங்கமாக உடை உடுத்தக் கூடாது என்ற கருத்தை சொல்ல அவர்களுக்கு அசிங்கமாக உடை அணிவித்து திரைப்படம் எடுத்தால் என்ன செய்யலாம்?


1019. கண்ணாடி துண்டும் கற்கண்டும் பார்ப்பதற்கு ஒரே மாதிரித் தெரியும். சுவைத்துப் பார்த்தால் தான் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் தெரியும்.


1020. உணவுப் பசி இரண்டு வகைப்படும். ஒன்று வயிறு காலியாகி கேட்பது. இரண்டு நாக்கு வேண்டும் எனக் கேட்பது.முதலாவது நல்லது.இரண்டாவது கெடுதல்.




Saturday, December 29, 2018

படித்ததில் பிடித்தது..

பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சஹாதேவன் சந்தைக்குள் நுழைந்தான். அழகான குதிரையை அவனும் பார்த்தான். உடனே குதிரையின் உரிமையாளரை நெருங்கி, "குதிரை என்ன விலை..? என்று கேட்டான்.

குதிரையின் உரிமையாளரோ..,


"ஐயா! இந்த குதிரை விற்பனைக்கு அல்ல. நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னால், குதிரையை இலவசமாகவே கொடுப்பேன்" என்றார்.

சகாதேவன் உடனே, "சரி கேள்வியைச் சொல்லுங்கள்.." என்றான்.

குதிரையின் உரிமையாளர், "நன்றாகக் கவனியுங்கள்..! பிறகு பதில் சொல்லுங்கள்..!


ஒரு பெரிய கிணறு. அதில் உள்ள தண்ணீரைக் கொண்டு ஏழு சிறிய கிணறுகளை நிரப்பலாம்...ஆனால், அந்த ஏழு கிணறுகளில் இருக்கும் தண்ணீரை எடுத்து, மறுபடியும் அந்த பெரிய கிணற்றில் ஊற்றினால், பெரிய கிணறு நிரம்பவில்லை.

இது ஏன்..? நன்றாக யோசித்து பதில் சொல்லுங்கள்" என்றார்.

சஹாதேவனால் பதில் சொல்ல முடியவில்லை. அங்கேயே சந்தையில் உட்கார்ந்துவிட்டான்.


சற்று நேரத்தில்.... சகாதேவனை தேடிக்கொண்டு நகுலனும் சந்தைக்கு வந்து விட்டான். அவனும் குதிரையைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான்.


குதிரையின் உரிமையாளர், நகுலனிடம் ஒரு கேள்வி கேட்டார். "ஐயா! நான் ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்லிவிட்டு, குதிரையை இலவசமாகவே பெற்றுக்கொள்ளுங்கள்."


"துணி தைக்கும் ஊசி இருக்கிறது அல்லவா..? அதன் ஓட்டையின் வழியாக ஒரு யானை புகுந்து, அடுத்த பக்கம் போய்விட்டது. ஆனால் யானையின் வால் மட்டும் அந்த ஓட்டையின் வழியாகப் போக முடியவில்லை. ஏன்..?" என்றார்.


நகுலனால் பதில் சொல்ல முடியவில்லை. அவனும் சந்தையில் உட்கார்ந்திருந்த சஹாதேவனுடன் சேர்ந்து உட்கார்ந்துவிட்டான்.


அதன் பிறகு ஒரு சில நிமிடங்களில், அர்ஜுனனும் அங்கு வந்தான். அவனும், குதிரையைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான். குதிரையின் உரிமையாளர், அர்ஜுனனிடமும் கேள்வி கேட்டார்.


"ஐயா! ஒரு வயல் காட்டில் நன்றாக விளைந்து இருந்தது. அதற்கு வேலியெல்லாம் போட்டு பாதுகாப்பாக வைத்து இருந்தார்கள். ஆனால் அறுவடை காலத்தில், அந்த வயல் காட்டில் எதுவுமே இல்லை. வேலியெல்லாம் அப்படியே இருந்தது. அப்படி இருந்தும் விளைந்த தானியங்களை எல்லாம் யார் எடுத்தார்கள்..? "


" பதில் சொல்லிவிட்டு, குதிரையை கொண்டு செல்லுங்கள்" என்றார். அர்ஜுனனால் பதில் சொல்ல முடியவில்லை. அவனும் ஆலோசனை செய்தபடி அங்கேயே உட்கார்ந்து விட்டான்.


சகோதரர்கள் மூவரும் இப்படியே உட்கார்ந்திருக்க, அரண்மனையில் அவர்களைக் காணாமல், தர்மர் திகைத்தார். பீமனைக் கூப்பிட்டு, "தம்பி..! நம் தம்பிகள் மூவரையும் நீண்ட நேரமாக காணவில்லை. நீ போய், அவர்கள் எங்கு இருந்தாலும் தேடி அழைத்து வா..!" என்றார்.


பீமனும் போய் தேடிப்பிடித்து, அர்ஜுனன், நகுலன், சஹாதேவன் மூவரையும் அழைத்து வந்தான். பாஞ்சாலியோடு அரியணையில் அமர்ந்திருந்த தர்மர், அவர்களைப் பார்த்ததும், "அர்ஜுனா..! நீண்ட நேரமாக நீயும் உன் தம்பிகளும் இங்கு இல்லை. எங்கே போய் இருந்தீர்கள்..?" எனக் கேட்டார்.


அதற்குப் பதிலாக அர்ஜுனன், நடந்ததை எல்லாம் சொல்லி, குதிரை உரிமையாளர் கேட்ட மூன்று கேள்விகளையும் சொன்னான்.


அதைக் கேட்டதும் தர்மர் நடுங்கினார். அதைப் பார்த்த தம்பிகள் எல்லாரும் திகைத்தார்கள்.


"அண்ணா! நீங்கள் நடுங்கும்படியாக என்ன நடந்தது..?" எனக் கேட்டார்கள்.


தர்மர்பதில்சொல்ல தொடங்கினார்..


"தம்பிகளே! எதிர்காலத்தில் நடக்கப் போகும் விபரீதங்களை, அந்த மூன்று கேள்விகளும் சொல்கின்றன..."


அதை நினைத்துத்தான் நடுங்கினேன்.


"ஒவ்வொன்றாகச் சொல்கிறேன் கேளுங்கள்.." என்று விரிவாகக் கூறினார்.


"உங்களிடம் கேள்வி கேட்டவன் "கலி புருஷன்" அவன் கேட்ட முதல் கேள்வியில்

" பெரிய கிணறு என்பது பெற்றோர்கள்...
ஏழு சிறிய கிணறு என்பது அவர்களது பிள்ளைகள்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை, அவர்கள் எவ்வளவு பேர்களாக இருந்தாலும் சரி...! அவ்வளவு பிள்ளைகளையும் காப்பாற்றுவார்கள். இதைத்தான் பெரிய கிணற்றின் தண்ணீரைக் கொண்டு சிறிய கிணற்றை நிரப்பினார்கள் என்பது குறிக்கிறது.

ஆனால், அந்த பிள்ளைகளோ, அவ்வளவு பேர்களும் சேர்ந்தால் கூட, தங்கள் பெற்றோரை காப்பாற்ற மாட்டார்கள். இதைத்தான் ஏழு சிறிய கிணறுகளில் உள்ள தண்ணீரைக் கொண்டு, பெரிய கிணற்றை நிரப்ப முடியவில்லை என்பது குறித்தது.."


"அடுத்து இரண்டாவது கேள்விப்படி, இனி வருங்காலங்களில் அக்கிரமங்கள், முறைகேடான செயல்கள் ஏராளமாக நடைபெறும்.

ஆனால், நல்ல செயல்கள் நடைபெறுவது மிகவும் கடினமாக இருக்கும். இதைத்தான் யானையே போன வழியில், அதன் வால் போக முடியவில்லை என்று சொல்லி இருக்கிறார்..."

"அடுத்து மூன்றாவது கேள்வியில், 

"பயிர்கள்" என்பது மக்களைக் குறிக்கும், பாதுகாக்கும் வேலி என்பது அதிகாரிகளைக் குறிக்கும். அதாவது மக்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே அவர்களை அழித்து விடுவார்கள். மக்கள்தான் வறுமையில் வாடுவார்களே தவிர, அதிகாரிகள் செழிப்பாகத்தான் இருப்பார்கள்..."

இதைத்தான், வேலி அப்படியே இருக்க, பயிர்கள் எப்படி அழிந்தன என்ற கேள்வி குறிப்பிடுகிறது என்று சொல்லி முடித்தார் தர்மர்..


கலியுகத்தில் உலகம் இப்படித்தான் இருக்கும் என்பது மகாபாரத காலத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

Tuesday, December 11, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 991 TO 1005

991. குழந்தைகள் தெய்வத்திற்கு சமமானவர்கள். எத்தனையோ லக்ஷக்கணக்கான மனிதர்கள் தங்களுக்கு ஒரு குழந்தை இல்லையே என்று மிகவும் ஏங்குகிறார்கள்

992. குழந்தைகள் விஷமம் செய்வது இயற்கை. அது அவர்களுடைய அறிவை வெளிப்படுத்தும் முறை. சும்மா இருந்தால் மூளையில் ஏதோ கோளாறு என்று அர்த்தம்.


993. குழந்தைகள் செய்யும் விஷமத்தைத் தாங்க முடியாத பெற்றோர்கள் உண்டு.விஷமம் செய்ய ஒரு குழந்தை இல்லையே என்று எங்கும் பெற்றோர்களும் உண்டு.


994. குழந்தைகளை ஒரு போதும் கையால் அல்லது வேறு பொருளால் அடிக்கக் கூடாது. அவர்கள் உடலில் சக்தி வந்தபிறகு உங்களை அடிக்கக் காத்திருக்கும்.


995. குழந்தைகளிடம் ஐந்து வயது வரை அன்பு காட்ட வேண்டும். பதினைந்து வயது வரை சொல்லிக் கொடுக்க வேண்டும். பிறகு நல்ல தோழனாக இருக்க வேண்டும்


996. பெண் குழந்தைகளுக்கு பலவித உடல் மற்றும் மனது சம்பந்தமான பிரச்சனைகள் உண்டு.அவைகளை தாயால் தான் தீர்த்து வைக்க முடியும்,தந்தையால் அல்ல


997. குழந்தைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுப்பதும் தவறு.அதிக கண்டிப்பு காட்டுவதும் தவறு.அவை அளவுடன் இருக்க வேண்டும்.பரஸ்பர அன்பு முக்கியம்


998. குழந்தைகள் தவறு செய்யும் போது கோபத்தை அடக்குவது கஷ்டம்.நாம் அந்த வயதில் எப்படி இருந்தோம் என்று கொஞ்சம் நினைத்து பார்த்தால் போதும்.


999. எல்லாக் குழந்தைகளுக்கும் ஆண்டவன் அறிவை சமமாகப் படைப்பது இல்லை. ஒரு குழந்தையை மற்றொரு குழந்தையுடன் ஒருபோதும் ஒப்பிட்டு பேசக் கூடாது


1000. குழந்தைகளுக்கு தங்களுடைய தாய், தந்தைதான் ஹீரோக்கள். அந்த உயரிய எண்ணத்தை பாதிக்கும்படி பெற்றோர்கள் ஒருபோதும் நடந்து கொள்ளக் கூடாது.


1001. வாழ்க்கையில் என்றாவது ஒருநாள் தன்னுடைய குழந்தைகளின் தயவில் வாழ வேண்டியது வரும் என்ற உண்மையை பெற்றோர்கள் எப்போதும் மறக்கக் கூடாது.


1002. எல்லோரும் தங்கள் மதம் தான் உயர்ந்தது, சிறந்தது என்கிறார்கள். அப்போது எம்மதமும் சம்மதமே என்ற உயரிய கருத்துக்கு கொஞ்சமும் இடமே இல்லை


1003. ஆண்களைப் போல அல்லாமல், பெண்களுக்கு இறைவன் அளித்துள்ள "ஜாக்கிரதை" மனப்பான்மை, அவர்களை ஆபத்துகளில் இருந்து, கவசம் போல பாதுகாக்கிறது.


1004. தந்தை என்பார், அண்ணன் என்பார், நண்பர் என்பார்,மன வேற்றுமை வரும் வரை. பிறகு மமதை வந்துவிடும். உறவுமுறை மறந்து விடும்.இதுதான் உலகம்.


1005. எத்தனை நாள் வெளியூர் சென்றாலும், வெள்ளையில் மூன்றுசெட் 4முழவேட்டி,பனியன், அண்டர்வேர்,இரண்டு ஸ்லாக்,ஒரு துண்டு இவைதான் என் லக்கேஜ்.


Monday, December 10, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 976 TO 990

976. கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வது தான் வாழ்க்கை. விட்டுக் கொடுத்தால் தான் கட்டிக் கொள்ள முடியும். சுதந்திரம் கூடாது

977. "கனியிருப்பக் காய்கவர்ந் தற்று" என்றார் திருவள்ளுவர். ஆனால் இப்போதெல்லாம் காயைத் தான் எல்லோரும் விரும்புகிறார்கள் கனி இருக்கும்போது.

978. அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன் கூறினார்: மக்களுடைய அரசு, மக்களால் ஆன அரசு, மக்களுக்கான அரசு இந்தப் பூமியில் என்றும் அழிவதில்லை

979. அரசின் சலுகைகளைப் பெறுவதற்கு நிதி நிலையை அடிப்படையாக வைத்தால், நமது திறமைசாலிகள் பெரும் பணக்காரரை பரம ஏழையாகக் காட்டி விடுவார்கள்.

980. அரசின் சலுகைகளை பெறுவதற்கு சாதியை அடிப்படையாக வைத்தால், நமது திறமைசாலிகள் வாழ்க்கையில் முன்னேற சிறிதும் முயற்சி செய்ய மாட்டார்கள்.

981. இந்தப் பருவகாலத்தில் சென்னையில் இது வரை 68 செமீ  மழைக்கு பதிலாக 34 செமீ  மழை தான் பெய்துள்ளது. வரும் காலத்தில் தண்ணீர் பஞ்சம் வரும்.

982. ஆங்கிலத்தில் ஒரே உச்சரிப்பு உள்ள இரு வார்த்தைகளுக்கு பல அர்த்தங்கள் உண்டு. அது இடத்திற்கு ஏற்றபடி மாறும். அது ஆங்கிலத்தின் சிறப்பு

983. ஒரு தாய், தனது குழந்தைகளை பாரபட்சமில்லாமல் நடத்த வேண்டும். அதிலும் மூத்தவரை மதிக்க வேண்டும். மற்றவர்கள் அவரை மதிக்க செய்யவேண்டும்.

984. என் பாட்டி சொல்வார்கள், "கழுதை விட்டை கை நிறைய" அதாவது உபயோகம் இல்லாத பொருட்கள்  அதிகம் இருப்பதால் யாருக்கும் எந்தவித பலனும் இல்லை.

985. நமது திரைப்படங்களும் பத்திரிகைகளும், தொலைக்காட்சியும் நமக்குக் கூறுவது இதுதான்."எதையும் அசிங்கமான எண்ணத்தோடு பார்க்காதீர்கள்"என்று

986. மனிதன் மலம், மாட்டுச் சாணம், கழுதை விட்டை, குதிரை / யானை லத்தி, ஆட்டுப் புழுக்கை.பொருள் ஒன்று வார்த்தைகள் பல.ஆஹா,தமிழின் அழகே அழகு

987. மாடு, ஆடு, கோழி, வாத்து, பன்றி,மீன் முதலிய வீட்டுப் பிராணிகளை வளர்த்து குடிசைத் தொழிலாக லாபம் சம்பாதிக்க முயற்சி செய்தால் பலனுண்டு.

988. சாராயக் கடைகளிலும் சினிமா தியேட்டர்களிலும் கூட்டம் அலை மோதுகிறது யார் சொன்னார்கள் மக்கள் கஷ்டப் படுகிறார்கள் என்று?சும்மா காதுல பூ

989. குடும்பம் முன்னேறினால், நாடு முன்னேறும். குடும்பம் முன்னேறாவிட்டால் குடும்பம், நாடு இரண்டுமே முன்னேறாது. பல குடும்பங்கள் ஒரு நாடு.

990. அறிவுள்ளவன் நாம் சொல்வதை ஒப்புக்கொள்ள மாட்டான். அறிவில்லாதவன் நாம் சொல்வதை புரிந்து கொள்ள மாட்டான். இருவரிடமும் பேசுவது வீண் வேலை.

Sunday, December 9, 2018

மாடுகள் எப்போது உறங்கும்?

பரபரப்பான வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்கிறேன். பல பிரச்சனைகள். வீட்டில், தெருவில், ஊரில், உறவில், நண்பர்களிடத்தில், வேலை செய்யும் இடத்தில் என பிரச்சினை, பிரச்சினை, பிரச்சனை... ஏதாவது ஒன்று இருந்து கொண்டே இருக்கிறது. தூங்கமுடியவில்லை. எனக்கு ஏதாவது ஒரு தீர்வு சொல்லுங்கள் சாமி" என்றவாறே அந்த முனிவரின் முன்பாக நின்றிருந்தான் அவன். அப்போது மாலை நேரம்.


முனிவர் அவனிடம் "பின்னால் இருக்கும் தோட்டத்திற்கு சென்று எத்தனை மாடுகள் இருக்கின்றன அவை என்ன செய்து கொண்டு இருக்கின்றன என பார்த்துவிட்டு வா" என்றார். சென்றவன் திரும்பி வந்து... "100 மாடுகள் இருக்கும் சாமி... எல்லா மாடுகளும் நின்றுகொண்டு இருக்கின்றன" என்றான்.


"நல்லது. உனக்கு இன்னிக்கு ஒரு சின்ன வேலை தர்றேன்... நீ அந்த 100 மாடுகளையும் தூங்க வைக்கணும். அந்த 100 மாடுகளும் தரையில் படுத்து ஓய்வானவுடன் அங்கே பக்கத்துலயே இருக்கிற சின்ன ஓய்வறையில் நீ போய் படுத்து தூங்கிக்கலாம்... 100 மாடுகளும் படுக்கணும்... அதுதான் முக்கியம். சரியா? இந்த வேலைய முடிச்சுட்டு காலையில் திரும்பி வா..." என்றார்.


"சரி அய்யா" என்றவாறு தோட்டத்திற்கு போனவன் இரவெல்லாம் இருந்துவிட்டு... கண்களில் தூக்கமின்றி காலையில் களைப்புடன் திரும்பி வந்து "அய்யா.. இரவு முழுவதும் தூங்கவே இல்லை ..." என்றான்.


"என்ன ஆச்சு?" என்றார் முனிவர்...


"100 மாடுகளையும் படுக்க வைக்க படாதபாடுகள் பட்டும் முடியவில்லை. சில மாடுகள் தானாகவே தரையில் படுத்துவிட்டன. சில மாட்டை நான் மெனக்கெட்டு படுக்கவைத்தேன். ஆனால் அனைத்து மாட்டையும் படுக்கவைக்க முடியவில்லை. 


சிலது படுத்தால் சிலது எழுந்து கொள்கின்றன. அனைத்து மாட்டையும் ஒட்டுமொத்தமாக படுக்கவைக்க முடியவில்லை... சாமி! அதனால நான் தூங்குவதற்கு போகவே இல்லை. இரவு முழுவதும் தூங்கவும் இல்லை!" என்றான்.


முனிவர் சிரித்தபடியே, "இதுதான் வாழ்க்கை.! வாழ்க்கையில் பிரச்சனையை முடிப்பது என்பது மாடுகளை படுக்க வைப்பது போன்றது...!*


சில பிரச்சனைகள் தானாக முடிந்துவிடும்... சிலவற்றை நாம் மெனக்கெட்டு முடித்துவிடலாம்... ஆனால் சில பிரச்சனைகள் முடிந்தால் வேறு சில பிரச்சனைகள் புதிதாக எழலாம். அனைத்து பிரச்சனைகளும் முடிந்தால்தான் நிம்மதியாக தூங்குவேன் என்றால் இந்த உலகத்தில் யாராலும் தூங்கமுடியாது...*


பிரச்சனைகள் அனைத்தும் எப்போது முடியும் என கவலைப்பட்டுக் கொண்டே இருக்காதே. தீர்க்கமுடிந்தவற்றை தீர்த்துவிட்டு, மற்றவற்றை கடவுளின் கைகளில் அல்லது காலத்தின் ஓட்டத்தில் ஒப்படைத்துவிட்டு. உனக்கான ஓய்வறையில் நிம்மதியாக இருக்க கற்றுக்கொள்!" என்றார்.


முனிவரை வணங்கிவிட்டு சென்றவன் சிலநாள் கழித்துவந்து முனிவரிடம் "சில மாடுகள் படுக்கவில்லை என்றாலும் நான் நிம்மதியாக படுத்து உறங்குகிறேன்.." என்றான். 


வாழ்வில் பிரச்சனைகள் என்பது நூறு மாடுகள் போன்றது...*அனைத்தும் ஒரே நேரத்தில் படுப்பதற்கான வாய்ப்பு குறைவே. ஒவ்வொன்றும் படுப்பதற்கான காலம் உள்ளது...


அப்படியே நமக்கான பிரச்சனைகள் தீர்வதற்கான காலமும் உள்ளது. ஆகவே சிலவற்றை காலத்தின் கரங்களில் ஒப்படைத்துவிட்டு, வாழ்வை அமைதியாக அனுபவிப்போம்.


வாழ்வு பிரச்சனையாக இருப்பதற்கும் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் மனம்தான் காரணம். சூட்சுமத்தை புரிந்து கொண்டால் சுகமாய் வாழலாம்...

அறிவோம், தெளிவோம். வாழ்க வளமுடன்.




Friday, December 7, 2018

பாரம்பரிய பழக்க வழக்கம்

ஒரே தலைவலி. மருந்துக் கடைக்குச் சென்றேன். மருந்துக் கடையில் இருந்த வேலைக்காரப் பையன் தலைவலிக்கான மாத்திரை ஸ்டிரிப் ஒன்றைத் தந்தான். உனது ‘ஓனர்’ எங்கேப்பா என்று கேட்டேன்.


அவருக்குச் சரியான தலைவலி. அதோ அந்தக் காப்பிக் கடையில் காப்பி சாப்பிடப் போயிருக்கிறார் என்றான் அவன்!


என் கையிலிருந்த தலைவலி மாத்திரை ஸ்டிரிப் என்னைப் பார்த்து ‘ஙே’ என்று விழித்தது!


அம்மாவுக்கு பிபியும் (ப்ப்) ஷுகரும் ஏறி விட்டது. ஆகவே அலறி அடித்துக் கொண்டு டாக்டரைப் பார்க்க காலையிலேயே அம்மாவுடன் கிளம்பினேன்.


டாக்டர் யோகா செய்து கொண்டிருந்தார். முக்கால் மணி நேரம் காத்திருந்தோம். அம்மாவை செக் பண்ணிப் பார்த்த டாக்டர் மருந்துகளை இன்னும் கொஞ்சம் அதிகப் படுத்த வேண்டும் என்றும் வேளாவேளைக்குச் சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை பகன்றார். அவர் எழுதித் தந்த அதிகப்படியான 5, 6 மாத்திரைகள் கொண்ட சீட்டை வாங்கிக் கொண்டேன்.


ஒரு ஆவல் உந்த, “டாக்டர், நீங்கள் யோகா செய்கிறீர்களா?” என்று கேட்டேன். 15 வருடமாகச் செய்து வருவதாகவும் அதனால் தான் பிபி, ஷுகர் இல்லாத ஆரோக்கிய வாழ்வைக் கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.


பிபி, ஷுகரைக் குறைக்க அவர் எழுதித் தந்த நீண்ட மாத்திரை சீட்டைப் பார்த்தேன். அது ‘ஙே’ என்று என்னைப் பார்த்து விழித்தது.


மனைவியின் தலைமுடி கோரமாக ஆகிக் கொண்டிருப்பதாக அவளுக்கு ஒரு உணர்வு. "சரி, வா பியூட்டி பார்லர் போவோம்!" என்றேன்.


நமது நலனைக் கருதி பல்வேறு பேக்கேஜ்கள் நமக்கு உகந்ததாக இருப்பதாக ரிஸப்ஷனிஸ்ட் அன்புடன் சொன்னாள். 1200 ரூபாயில் ஆரம்பம். 3000 ரூபாய் வரை போகிறது லிஸ்ட். பேரம் பேசி 3000 ரூபாய் பேக்கேஜை 2400'க்கு முடித்தேன். (அட, என்ன எனது சாமர்த்தியம் பார்த்தீர்களா!)


மனைவியின் கேசத்தைக் கோதி விட்டுக் கொண்டிருந்த பெண்மணியின் தலை முடி அழகாக இருந்ததோடு கம கமவென ஒரு நறுமணமும் அதிலிருந்து வந்தது.


‘அட, நல்ல வாசனையாக இருக்கிறதே’, என்று அவளைப் பாராட்டினேன்.


அவள் நன்றி தெரிவித்ததோடு, காலம் காலமாக அனைவரும் உபயோகித்து வரும் சம்பிரதாயமான எண்ணெயைத் தான் சூடத்தைக் கலந்து உபயோகித்து வருவதாகவும் அதனால் முடி நீண்டு அழகாக இருப்பதாகவும் தெரிவித்தாள்.


2400 ரூபாய்க்கு பேரம் பேசிய என்னைப் பார்த்து என் மனைவி விழிக்க அவளைப் பார்த்து நான் விழித்தேன்.


ஒருநாள் மதிய உணவிற்குப் புகழ் பெற்ற உணவு விடுதிக்குக் குடும்பத்தோடு சென்றேன்.


சாப்பிட்டு முடிந்தவுடன் பில்லை நீட்டிய மானேஜர், “சாப்பாடு எப்படி சார் இருந்தது? பசு நெய், சுத்தமான ஆயில், பாஸ்மதி அரிசி மட்டும் தான் நாங்கள் உபயோகிக்கிறோம். அடிக்கடி வாருங்கள்” என்று சொன்னார். அத்துடன் தன் கேபினுக்கு அழைத்து தனது விஸிடிங் கார்டையும் கொடுத்தார்.


அங்கிருந்த டிபன் கேரியரை நான் பார்த்தேன். அப்போது ஹோட்டல் பணியாளர்கள் இருவர் தங்களுக்குள் பேசிக் கொண்டதையும் கேட்டேன்.


“சுனில், சாரோட டிபன் பாக்ஸை எடுத்து தனியே வை. அவர் சாப்பிட வர இன்னும் பத்து நிமிடமாகும்”


அவரைப் பார்த்து நான் கேட்டேன், “ஏன், உங்கள் சார் இந்த ஹோட்டலிலேயே சாப்பிட மாட்டாரா?”


“ஊஹூம்! ஒருபோதும் சாப்பிட மாட்டார். அவருக்கு வீட்டு சாப்பாடு தான் ரொம்ப பிடிக்கும்!”


என் கையில் இருந்த 1670 ரூபாய் பில்லைப் பார்த்தேன். அது ‘ஙே’ என்று விழித்தது. 


நமது பாரம்பரிய பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்தோ மானால் நமக்கு செலவுக்குச் செலவும் மிச்சம்; ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமும் அற்புதமாக நிலைத்து நீடித்திருக்கும்!



அவசியமில்லா நுகர்வு

 ``எங்கப்பா என்னைவிட குறைவாதான் சம்பாதிச்சார். வீட்ல  மூணு பேரையும் நல்லாப் படிக்க வச்சு, அவங்களுக்கு வேண்டியதையெல்லாம் பண்ணிட்டு, கொஞ்சம் பணமும் சேமிச்சு சொந்தமா ஒரு வீட்டையும்  கட்டிட்டு, கடன் இல்லாம நிம்மதியா வாழ்ந்தார்.


ஆனா, நான் அவரைவிட அதிகமா சம்பாதிக்கிறேன். ஹவுஸிங் லோன், கார் லோன், கிரெடிட் கார்ட்னு ஏகப்பட்ட கமிட்மென்ட்ஸ், வேலை டென்ஷன், ப்ரஷர்னு என்னால அவரைப்போல நிறைவா ஒரு வாழ்க்கையை வாழமுடியல...’’


இன்றைய தலைமுறைக்கு எவ்வளவு சம்பாதித்தாலும், ஐபோன், லக்ஸரி கார், அபார்ட்மென்ட் என எது இருந்தாலும் உண்மையான மகிழ்ச்சி இல்லை . அதைப் போக்கிக்கொள்ள மாரத்தான் ஓடுகிறார்கள்; பார்ட்டிகளில் ஆடுகிறார்கள்; நிறைய செலவழித்து இன்டர்நேஷனல் டூர்கூட போகிறார்கள்... மகிழ்ச்சி எங்கிருக்கிறது என்பது புரிபடவேயில்லை.


இப்படிப்பட்ட இளைஞர்கள  தங்களுடைய 30-வது வயதில் ஆறு இலக்க சம்பளம், காஸ்ட்லி கார்கள், சகலவசதி வீடுகள், பார்ட்டி, கொண்டாட்டம் என  வாழ்கிறார்கள். ஆனால், ஏதோ குறைவதை உணர்கிறார்கள். உழைத்த பணத்தில் எதை எதையோ வாங்கி, வாங்கிக் குவிப்பதும் மகிழ்ச்சியில்லை என்பதை உணர்கிறார்கள். 


புரிந்துகொண்ட நொடியில் "குறைந்தபட்சம்" என்கிற கான்செப்ட் பிறக்கிறது. பொருள்களை வாங்குவதுதான் மகிழ்ச்சி, என்கிற கருத்து தவறு. உண்மையில், பொருள்களை வாங்குவதில் மகிழ்ச்சியில்லை; அதை எந்த அளவுக்குப் பயன்படுத்துகிறோம் என்பதில் தான் இருக்கிறது.


"குறைந்தபட்சம்" என்றாலே கஞ்சப்பிசனாரி யாக வாழ்வது அல்ல. அவசியமானவற்றுடன் அளவாக வாழ்வது. உடலில் தேவையில்லாத கொழுப்பு சேர்ந்தால், நோய்கள் எப்படி வருமோ அதுபோலவேதான்.  இடநெருக்கடியில் தொடங்கி பணநெருக்கடி வரை அனைத்திற்கும் காரணமாக இருப்பது  இந்த ‘அவசியமில்லா நுகர்வு’தான்.


அதென்ன அவசியமில்லா நுகர்வு?


நடந்துபோகிற தூரத்திற்கு காரில் செல்வது, எல்லோரும் வைத்திருக்கிறார்கள் என்பதற்காகவே அதிக விலைகொடுத்து செல்போன் வாங்குவது, இரண்டுபேர் வாழ கடனுக்காவது நான்காயிரம் சதுர அடியில் மிகப்பெரிய வீட்டை வாங்கிக்கொள்வது, அதில் அலங்காரத்திற்கென லட்ச லட்சமாய் செலவழித்துப் பொருள்களை அடுக்குவது எல்லாமே தேவையில்லா நுகர்வுதான்.


இதைப் பின்பற்றுபவர்கள் . அதிக நேரம், அதிக மகிழ்ச்சி, அதிக சேமிப்பு, அதிக படைப்பாற்றல் என தங்களுடைய வாழ்வில் அவசியமானதை அதிகப்படுத்திக்கொள்கிற வாழ்வையே வாழ்கிறார்கள்’’ நம்முடைய பெற்றோர்களும் முன்னோர்களும் அப்படித்தான் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். 


வீட்டில் தேவையில்லாமல் ஒரு பல்ப் எரிந்தால்கூட ஓடிச்சென்று அணைக்கிற பெரியவர்களை இப்போதும் நம் வீடுகளில் காண முடியும். அதுதான் நம்ம வீட்டு "குறைந்தபட்சம்". இதுபோன்ற சின்னச் சின்ன சேமிப்புகளின் வழிதான் அவர்கள் தங்களுடைய நிம்மதியான வாழ்வாகக் கட்டமைத்தார்கள்.