Friday, July 13, 2018

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே

1960 ஆம் ஆண்டு, எனக்குப் பதினைந்து  வயது. எனது அம்மா வழிப் பாட்டி தாத்தாவுடன் தங்கி பள்ளி இறுதி வகுப்பு [SSLC] படித்துக் கொண்டிருந்தேன். தாத்தாவிற்கு நிலம் நீச்சு எல்லாம் உண்டு. நெல், உளுந்து, பயறு முதலியன அறுவடை ஆகும். 

அறுவடை நாட்களில் நானும் என் சகோதரனும் வயலுக்குச் சென்று மேற்பார்வை பார்ப்பது எங்கள் வேலை. அறுவடையான பொருட்களை திருட்டுப் போகாமல் இருக்க இரவில் களத்து மேட்டில் திறந்த வெளியில் படுத்துக் காவல் காக்க வேண்டும்


மறுநாள் எல்லாப் பொருட்களையும் மூட்டையாகக் கட்டி வண்டியில் ஏற்றி வீட்டுக்குக் கொண்டு வந்து ஹாலில் கொட்டி வைப்போம். தினம் அதை ஒரு கூடையில் அள்ளி, வாசலில் தெருவில் வெய்யிலில் காய வைக்க வேண்டும்.


காய வைத்த தானியங்களை மறுபடியும் மாலையில் வீட்டுக்கு உள்ளே கொண்டு செல்ல வேண்டும். இது மாதிரி பல தடவை செய்து நன்றாகக் காய்ந்த பின்பு நெல்லை பத்து அடி உயரத்தில் உள்ள நெல் களஞ்சியத்தில் ஏற்ற வேண்டும்.


நெல்லை ஏற்றுவதற்கு முன்பு களஞ்சியத்தில் சுற்றி தரை ஓரமாக நெல் படுதைகளை விரித்து பிறகு நெல்லைக் கொட்ட வேண்டும். அரை அரை மூட்டையாக தோளில் சுமந்து ஏணியில் ஏறிக்  கொட்ட வேண்டும். அவ்வளவு நெல்லையும் கொட்டுவதற்குள் உடல் முழுதும் நெல் புழுதி படிந்து அரிக்கும்..


தேவையான போது கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து நெல் மஷினுக்கு எடுத்துச் சென்று அரைத்து அரிசியாக வீட்டிற்குக் கொண்டு வர வேண்டும். அரிசியைத் தவிர குறுணை, தவிடு ஆகியவற்றைத் தனியாக வைக்க வேண்டும்.


அரிசியில் பலவகை சாதங்களும், குறுனையில் நொய்ப் பொங்கல், உப்புமாவும், சமைப்பார்கள்  தவிடை புன்ணாக்கு, பருத்திக் கொட்டை ஆகியவற்றுடன் தண்ணீரில் கலந்து மாட்டிற்குத் தீவனமாகக் கொடுப்பார்கள். எங்கள் வீட்டில் இரண்டு பசு மாடுகள் உண்டு. 


ஒன்று வெள்ளை மற்றது செவலை. விடுமுறை நாட்களில் தொழுவத்தை சுத்தம் செய்து, மாடுகளைக் குளிப்பாட்டி, பொட்டு வைத்து, சாம்பிராணி காட்டி, காய்கறி, வாழைப்பழ தோல், தவிடு, புன்ணாக்கு, பருத்திக் கொட்டை முதலியவற்றை உண்ணக் கொடுப்போம்.


ஒன்று லக்ஷ்மி, மற்றது கல்யாணி. கூப்பிட்டால் ஓடி வரும். வாஞ்சையுடன் கையை நக்கிக் கொடுக்கும். காலையும் மாலையும் கோனார் வந்து பால் கறந்து கொடுப்பார். பாட்டி அப்பொழுதான் கறந்த நுரைப் பாலை தினமும் எங்களுக்குக் குடிக்கக் கொடுப்பார்கள்.


சில சமயங்களில் மாடுகள் ஓயாமல், நிறுத்தாமல் தொண்டை கிழியக் கத்தும். கேட்கப் பரிதாபமாயும், நாராசமாயும் இருக்கும். பாட்டியிடம் கேட்டால் அது உம்மாச்சியைப்  பார்த்துக் கத்துகிறது என்பார். பாட்டி சொல்வதை உண்மை என்று நம்புவேன்.


பிறகு கோனார் வந்து பத்து ரூபாய் வாங்கிக் கொண்டு அதைக் கூட்டிச் சென்று கத்துவது நின்ற பிறகு கொண்டு விடுவார். அது உம்மாச்சியைப்  பார்த்து விட்டது என்று நினைப்பேன். ரொம்ப வருடம் கழித்துத் தான் எனக்கு அது ஏன் கத்தியது என்று புரிந்தது..


அரை நீஜார் மட்டும் அணிந்து மேல் சட்டை அணியாமல் வேர்க்க விறுவிருக்க வேலை செய்ய வேண்டும். ஒவ்வொரு தடவையும் வேலை முடிந்த பிறகு, நன்றாகக் குளித்து விட்டு வந்தால் பாட்டி சாப்பாடு போடுவார்கள். 


பொன்னி பச்சரிசியின், பழைய சாதத்தில், தாளிதம் செய்து, உப்புப் போட்டு, ஆடையுடன் பசுவின்  தயிரைக் கலந்து, நன்கு பிசைந்து, மாவடு, நாரத்தங்காய் ஊறுகாய், பழைய வத்தல் குழம்புடன் கையில் போடுவார்கள் பாருங்கள். சொர்க்கம் தெரியும்.


இன்று ஓரளவு ஆரோக்கியமாக இருப்பதன் காரணம் அன்று சாப்பிட்ட சாப்பாடும் உழைப்பும் தான். அதில் சந்தேகம் எதுவும் ல்லை. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே, இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே ஏன் நண்பனே?

Thursday, July 12, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 556 TO 570

556. மனைவி உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பது போல, நாமும் மனைவிக்கு உண்மையாய் இருக்க வேண்டும். அதுவே மனைவிக்குக் கொடுக்கும் பரிசு

557. கோபம் ஒருவரை சிந்திக்க விடாது. வாழ்வில் எந்தக் காரணத்திற்காகவும் கோபப்படக் கூடாது. மன வேற்றுமைக்கும், பிரிவினைக்கும் இதுவே காரணம்.


558. நேர்மையாக இருப்பவர்களுக்கு சோதனை மேல் சோதனை வரும். அதற்காக அவர் நேர்மையை கை விட்டுவிடக் கூடாது. அந்த நேர்மையே அவரைக் காப்பாற்றும்.


559. நேர்மையாக வாழ்வது கடினம். நேர்மையாக வாழ்ந்து என்ன சாதித்தோம் என்று யாரும் நினைக்கக் கூடாது. நேர்மையாக வாழ்வதே பெரிய சாதனையாகும்.


560. பணம் நாம் வாழ்வதற்கு மிக முக்கியம். ஆனால் பணம் தான் வாழ்க்கை அல்ல. வாழ்வின் அர்த்தமே வேறு. அந்த வாழ்க்கையை ரசிக்கத் தெரிய வேண்டும்


561. ஒருவருக்கு ஒருவர் அன்பாலும், ஆதரவாலும், அரவணைப்பினாலும் ஒற்றுமையாக வாழ வேண்டும். நல்லதை வரவில் வைப்போம், கெட்டதை செலவில் வைப்போம்.


562. பின் ஏன் ஒருவருக்கு ஒருவர் வெறுப்பு, விரோதம், புகைச்சல் என்று எனக்கு விளங்க வில்லை. எல்லா ஜாதிகளிலும் கருப்பு ஆடுகள் இருக்கின்றன.


563. என்னை பொருத்தவரை ஜாதி என்பது உணவு மற்றும் வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்டது. எல்லோருக்கும் மரபு அணுக்கள் ஒன்றுதான். மாற்றமில்லை.


564. பழம் தானாக கனிய வேண்டும்.தடியால் அடித்து அல்ல.ஆன்மீகம் ஒருவருக்கு தானாக வரவேண்டும். சொல்லிக் கொடுத்து அல்ல.இறைவனை உணர்வது ஆன்மீகம்


565. இறைவனைப் பற்றிய ஞானமும் பக்தியும் வரவேண்டும் என்றால், ஆசைகளைத் துறக்க வேண்டும், பிற ஜீவன்கள் மீது குறையாத அன்பு செலுத்த வேண்டும்.


566. ஞானம் என்பது பல ஆன்மீக புத்தகங்களை படிப்பதாலும், ஞானிகள் அறிவுரையை கேட்டு நடப்பதாலும் வருகிறது.பக்தி இறைவனை தியானிப்பதால் வருகிறது


567. இறைவனை அடைவது தான் ஆன்மீகத்தின் ஒரே குறிக்கோள். அது சுலபமல்ல. அதற்கு இறைவனைப் பற்றிய ஞானமும், இறைவனிடம் மிகுந்த பக்தியும் வேண்டும்


568. ஆன்மீகம் என்பது கதைப் புத்தகங்களைப் படித்து விட்டு அதை மற்றவர்களுக்குச் சொல்வது அல்ல. அது உணர்வு பூர்வமாக இறைவனை பற்றி சிந்திப்பது


569. ஆன்மீகம் சம்பந்தமாக கடைகளில் நிறைய புத்தகங்கள் விற்க படுகின்றன. கற்று தெளிந்தவரை கலந்து ஆலோசித்து நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும்


570. இளம் வயதில் தன்னுடைய கடமைகளைச் செய்ய வேண்டும்.ஆன்மீகம் வயதான பிறகு.அதை அடைய நிறைய ஆன்மீகப் புத்தகங்களைப் படித்துத் தெளிய வேண்டும்.

மனதில் தோன்றிய எண்ணங்கள் 541 TO 555

541. என்னுடைய தமிழ் பதிவுகளுக்கு இருக்கும் வரவேற்பு ஆங்கிலப் பதிவுகளுக்கு இருப்பதில்லை. ஏனென்றால் பலருக்கு ஆங்கிலம் தெரியாத காரணம்தான்.

542. எந்த மொழியையும் வெறுப்பதன் மூலம் ஒருவன் தாய்மொழிக்கு நன்மை செய்ய முடியாது. அது மட்டும் அல்ல; அவன் தனக்கே துரோகம் செய்து கொள்கிறான்


543. தாய் மொழிப் பற்று வேறு. உலக அறிவு வேறு. தாய் மொழியை யாராவது இழிவு படுத்தினால் கோபம் கொள்ள வேண்டும். இன்னொரு மொழியைக் கற்பது நல்லது


544. வயது அதிகமானவராக இருந்தால் முடியாது,வேறு வழியில்லை. இளைய தலைமுறையினர் ஆங்கிலம் கற்க முயற்சி செய்ய வேண்டும்.அதனால் நிறைய பலன் உண்டு


545. தமிழர் ஒருவருக்கு தமிழ் அறிந்த அளவு ஆங்கிலம் தெரிய வாய்ப்பில்லை. தாய் மொழியைத் தவிர வேறு ஒரு மொழியை கற்ப்பதால் நஷ்டம் எதுவுமில்லை.


546. தமிழ் தெரியாதவருடன் பேசிப் பழக உதவும். ஆங்கிலத்தில் பேச,புத்தகங்கள் படிக்க முடியும். தாழ்வு மனப்பான்மை விலகும். உலக அறிவு வளரும்.


547. எனக்கு ஆங்கிலத்தில் புலமை கிடையாது.எனக்கு தெரிந்ததெல்லாம்  புத்தகங்களையும், நாளிதழ்களையும் திரும்பத் திரும்ப படித்து அறிந்தது தான்


548. பலர் ஆங்கிலத்தை விரும்புவது இல்லை.அதில் கஷ்டம் ஒன்றும் கிடையாது.படிக்க படிக்க சுலபமாக புரியும்.முயற்சியும் ஆர்வமும் தான் முக்கியம்


549. ஆங்கிலம் படிக்கும் போது புரியாத வார்த்தைகள் வந்தால் அதை உபயோகப் படுத்திய முறையை மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டும். பிறகு கஷ்டம் இல்லை.


550. பாதையிலே வெளிச்சமில்லை,பகல் இரவு புரியவில்லை,பாதையும் தெரியவில்லை.ஆயிரம் தான் வாழ்வில் வரும்,நிம்மதி வருவதில்லை.அறிவே வா,அறிவே வா 


551. இளைஞர்களே, மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. முயற்சி திருவினையாக்கும். முயற்சி செய்யுங்கள். வெற்றி நிச்சயம் கிட்டும். வாழ்த்துக்கள்.


552. இதை பற்றி யாரும் கவலை படுவதில்லை. இரண்டு நாட்களுக்கு சமூக வலை தளங்களில் கருத்துக்கள் பரிமாறப்படும்.பிறகு மறக்கப்படும்.ஜெய் ஹிந்த்.


553. முதலில் நான் இந்தியன் என்பார்,பின் தமிழன் என்பார்,இந்த மதம் என்பார்,இந்த ஜாதி என்பார்,இந்தக் கட்சி என்பார், வேற்றுமையில் ஒற்றுமை.


554. உச்ச நீதி மன்றம் அனுமதி இல்லாத போராட்டத்திற்கு தடை விதித்து உள்ளது.போராட்டம் நடத்தும் அரசியல் கட்சி நஷ்ட ஈடு தர உத்தரவு இட்டுள்ளது


555. மற்ற பொது மக்களின் பாதுகாப்பு, சொத்துக்களுக்கு அரசு பாதுகாப்புத் தர வேண்டும். இதை நாம் நன்கு உணர்ந்து பொறுப்பாக செயல் பட வேண்டும்.

Wednesday, July 11, 2018

மாமியார் தினம், மாமனார் தினம்

1. இதைப் படித்து விட்டு என்னைப் பலர் ஒரு முட்டாள் என்று நினைக்கலாம். பரவாயில்லை. அதற்காக நான் இதை எழுதாமல் இருக்கப் போவதில்லை.

2. அன்னையார் தினம், தந்தையர் தினம் என்று வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் அவர்களை நினைப்பது போல அந்த தினங்களைக் கொண்டாடுகிறோம்.


3. அன்னையர் தினமும், தந்தையர் தினமும் ஞாயிற்றுக்கிழமை தான் வருமாம். அன்றுதான் வெள்ளையர்கள் தங்கள் பெற்றோர்களைப் பார்க்கப் போவார்களாம்.


4. வெள்ளையனே வெளியேறு என்ற கூக்குரல் இன்னம் கேட்கிறது. இப்போது எதிலும் எப்போதும் வெள்ளையன் செய்வதை சொந்த அறிவில்லாமல் பின்பற்றுகிறோம்


5. தமிழ், தமிழர் பண்பாடு, தமிழ் வாழ்க என்று கோஷம் போடுகிறோம். பின்பு எங்கே இருந்து எப்படி வந்தது அன்னையர் தினமும், தந்தையர் தினமும்?


6. ஆங்கிலம் ஒரு வார்த்தை தெரியவில்லை. ஒரு வரி படிக்க முடிவதில்லை, பேச முடியவில்லை. ஆனால் MOTHER'S DAY, FATHER'S DAY கொண்டாடுகிறோம்.


7. நமக்கென்று ஒரு குறிக்கோள்,அதற்கென்று ஒரு பாதை, அதை அடைய ஒரு வழி என்று செல்லாமல் வேறு ஒருவன் காட்டும் வழியில் செல்வது மிகவும் ஆபத்து 


8.அன்னையர் தினம், தந்தையர் தினம் என்று கொண்டாடுவது போல மாமியார் தினம், மாமனார் தினம் என்று ஏன் அனுசரிப்பது இல்லை ? அவர்கள் எந்த விதத்திலும் தாய், தந்தைக்கு குறைந்தவர்கள் இல்லை. 


9. தாய் தந்தை குழந்தைகளுக்கு செய்வது அவர்களுடைய பெற்ற கடமை. ஆனால் மாமனார், மாமியார் செய்வது தியாகம். இதை யாரும் உணருவது இல்லை. அது ஒரு துரதிர்ஷ்டம். 

10. 25 வருடங்கள் ஒரு மகனையோ, அல்லது மகளையோ கஷ்டப் பட்டு வளர்த்த பின் அதனால் கிடைக்கும் பலனை அனுபவிக்காமல், ஒரு பெண்ணிடமோ, பையனிடமோ தாரை வார்த்துக் கொடுக்கிறார்கள். 


11. நீங்கள் இருவரும் வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவியுங்கள் என்று கூறுவது மட்டும் இல்லாமல் தன்னுடைய சொத்தில் பங்கும் கொடுப்பது சாதாரண தியாகம் இல்லை.


12. ஆனால் நாம் அவர்களை நினைப்பது இல்லை. அவர்களுக்கு என்று ஒரு தினம் ஏன் கொண்டாடக் கூடாது?. நமக்கு கொஞ்சமும் நன்றி, விசுவாசம் இல்லை.


13. தந்தையர் தினத்திற்கு மறுநாள் மாமனார் தினம், அன்னையர் தினத்திற்கு மறுநாள் மாமியார் தினம் கொண்டாடுவதாய் தீர்மானிக்கப் பட்டுள்ளது

Tuesday, July 10, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 526 TO 540

526. எதிர்ப்பு வேறு போராட்டம் வேறு. நாம் செய்வது போராட்டம். நல்ல கல்வியும் வளர்ப்பு முறையும் தான் நம்மை சரியான வழியில் போகத் தூண்டும்.

527. கதாசிரியர், ஒரு கதையில் ஒரு கதாபாத்திரம் மோசமானவர் என்று கூறினால் போதும். அவர் பேசும் மோசமான வார்த்தைகளை எழுத வேண்டிய அவசியமில்லை.


528. சாதி, மத உணர்ச்சிகள் இருப்பதில் தவறில்லை. வெறி கூடாது.அவர்கள் பரமாச்சாரியாரின் "தெய்வத்தின் குரல்" படிக்கும் படி கேட்டு கொள்கிறேன்


529. என்னால் வழி மட்டும் தான் காட்ட முடியும். போய்ச் சேர வேண்டிய இடத்திற்கு போவது உன் வேலை. அதற்கு மேல் என்னால் ஒன்றும் செய்ய முடியாது.


530. அதைத் தொடர்ந்து "கடை அடைப்பு" என்ற போராட்டம் நடக்கும்.எல்லோரும் தங்கள் கடைகளை மூட வேண்டும்.மூடாத கடைகளின் மீது கல் வீச்சு நடக்கும்


531. வன்முறை அதிகம் ஆனால் போலீஸ் முதலில் எச்சரிக்கை, பின் தடியடி,தண்ணீர் வீச்சு, கண்ணீர்புகை, துப்பாக்கி சூடு நடத்துவார்கள்.இது தேவையா?


532. இது கட்சி அரசியலால் வருவது. இரு கட்சிகள் ஒருவரை ஒருவர் ஜன்ம விரோதிகளாக பார்க்கிறார்கள். அதனால் எந்த போராட்டமும் அமைதியாக நடக்காது.


533. இடையில் வன்முறை எப்படி வந்தது? சமூக விரோதிகளின் மேல் பழி போடுவது சரியில்லை. அவர்கள் எப்படி வந்தார்கள்? வன்முறைக்கு நாமே பொறுப்பு.


534. நம் கோரிக்கையை அரசு முன் வைப்பதுடன் நம் கடமை முடிந்தது. அதை ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் அரசின் முடிவு. அது நாம் தேர்ந்தெடுத்த அரசு


535. அமைதியான முறையில் நம் எதிர்ப்பை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். ஜப்பானில் கறுப்புப் பட்டை அணிந்து வேலையைத் தொடர்ந்து செய்வார்கள்.


536. ஒரு தரம் அதிக மார்க் வரும், இன்னொரு தரம் குறையும். ஒரு பதிவு விரும்பப்படும், மற்றொரு பதிவு விரும்பப் படாது. யூ டேக் இட் ஈஸி கண்ணா.


537. 1.தேர்தலுக்கு முன்பே கூட்டணி இருந்தால் அதில் பெரிய கட்சியை அழைக்க வேண்டும். 2.இல்லையெனில் பெரும்பான்மைக் கட்சியை அழைக்க வேண்டும்.


538. ஒரு தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத போது ஆளுநர் சட்டப்படி செய்ய வேண்டியது என்ன என்று கூற முடியுமா?


539. வாழ்ந்து காட்டுங்கள்.பிறகு பாருங்கள்  நாட்டின் வளர்ச்சியை,மக்களின் மகிழ்ச்சியை.அது சொர்க்க பூமியாக திகழும்.இது சத்தியம்.முடியுமா?


540. ஒவ்வொரு தொகுதியிலும் கட்சி சார்பில்லாத, எல்லா விதத்திலும் சிறந்த ஒருவரை மக்களே தேர்தலில் வெற்றி பெறச் செய்து அரசாள அனுப்பவேண்டும்

மனதில் தோன்றிய எண்ணங்கள் 511 TO 525

511. பொருளாதாரக் கொள்கையை அடிப்படையாக கொண்டு குடியரசு, தொழிலாளர், ஜனநாயகம் என்ற மூன்று அமைப்புகள் மட்டும் நம் நாட்டில் இருக்க வேண்டும்.

512. ஒரு கட்சியின் தலைவரைக் குறை சொல்வதில் அர்த்தமில்லை. அவருக்கு கீழே இருப்பவர்கள் தரும் நெருக்கடி அவர் எடுக்கும் முடிவுகளுக்கு காரணம்


513. ஒரு வேட்பாளர் ரூ100 செலவு செய்தால் ரூ50 கணக்குக் காட்டுவார். மீதி கருப்பு பணம். தேர்தலுக்கு பின் அதை விட பல மடங்கு வாங்கி விடுவார்


514. ஒரு வேட்பாளர் ஒட்டு போடுவதற்கு பணம் கொடுத்தால் அவர் நல்லவர் இல்லை.வெற்றிக்கு பின் உங்களிடம் இருந்தே பல மடங்கு பணம் வாங்கி விடுவார்


515. ஒட்டுப் போடுவதற்கு பணம் கொடுப்பது சரியா அல்லது பணம் கொடுத்தவனுக்கு ஒட்டுப் போடுவது சரியா.இது நம் நாட்டில் தீர்க்க முடியாத பிரச்சனை


516. தேன் எடுத்தவன் புறம் கையை நக்காமல் இருக்கமாட்டான். தேர்தலில் சொந்தப் பணத்தை செலவு செய்தவன் அதை மீட்காமல் விட மாட்டான். அளவு மாறும்


517. தேர்தலில் நிற்கும் வேட்பாளர் யாரையும் பிடிக்கவில்லையா, தயங்காமல் நோட்டா [NOTA] வில் உங்கள் ஓட்டைப் போடுங்கள். அதுதான் சிறந்த வழி.


518. தேர்தலில் நல்லவர்களும், கெட்டவர்களும் வேட்பாளராக நிற்கிறார்கள். கெட்டவர்களுக்கு ஒட்டு போடாதீர்கள். உங்களுக்கு ஏன் அந்த வீண் பாவம்.


519. உங்கள் ஒரு ஒட்டு தான் நாட்டின் விதியைத் தீர்மானிக்கப் போகிறது.நன்றாக யோசித்து முடிவு செய்யுங்கள்.பின்னர் வருந்துவதில் அர்த்தமில்லை


520. உண்மையிலேயே நீங்கள் நாடு முன்னேற வேண்டும் என்று விரும்பினால் கட்சி சார்பாக ஓட்டுப் போடக் கூடாது. வேட்பாளர் நேர்மை, திறமை முக்கியம்


521. நாம் பேசுவதில் வல்லவர்கள்.அதில் மயங்குவதிலும் வல்லவர்கள்.தேர்தலில் வேட்பாளர் பேச்சில் மயங்காதீர்கள்.அவர் வாழ்க்கை தரத்தை பாருங்கள்


522. எவ்வளவோ படித்த,பண்புள்ள,கட்சி சார்பில்லாத நல்ல மனிதர்கள் மக்களுக்காக உழைக்க விரும்புகிறார்கள். அவர்கள் ஏன் நம் கண்ணில் படுவதில்லை.


523. ஏன் நன்கு படித்த, பண்பான, நேர்மையானவர்கள் அரசியலுக்கு வருவதில்லை ? தலை எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆனா நாடு எப்படி உறுப்படும்? 


524. நன்கு படித்த, நேர்மையான, பண்புள்ள, அனுபவப்பட்ட புத்திசாலிகள், அதிகாரத்தில் இருந்தால் தான் நாடும் மக்களும் நல்வழியில் செல்வார்கள்.


525. நாட்டின் பொருளாதாரம் பற்றித் தெரிய வேண்டும்.நோய் நாடி நோயின் குணம் நாடி.எந்தப் பிரச்சனையையும் தீர ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும்

Monday, July 9, 2018

DUTY / கடமை

DUTY
1. The parents, with great difficulty, bring up their children to provide them food, shelter, clothing, medical expenses, and education. Is not what they earn afterward is their money?

2. The parents after their life, gift all their jewels, house and savings only to their children. They should remember that this gift is in some way helpful to them in their future life


3. The children after going for a job, after keeping some money for pocket expenses, should give the entire salary to the parents even without their asking for it.


4. After their marriage, the children should give Rs. 10,000 per month to the parents as per the Law, without their asking. Many parents and children are not even aware of such an Act.


5. If they are unable to give such money to the parents, then they have to keep them with them and look after them and make them happy. This is their duty.


6. If they help their parents without their asking is love. If they help after their asking is sympathy. If they do not help even after their asking is their karma.


கடமை 

1. பல கஷ்டங்களுக்கு இடையே பெற்றவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், மருத்துவச் செலவு, கல்வி முதலியவற்றை அளிக்கிறார்கள். பின்பு அவர்கள் சம்பாதிக்கும் பணம் அவர்களைச்  சேர்ந்தது அல்லவா?

2. பெற்றோர்கள் தங்கள் காலத்திற்குப் பிறகு தங்களுடைய நகைகள், வீடு, சேமிப்பு முதலிய சொத்துக்களை தங்கள் குழந்தைகளுக்குத் தான் அன்பளிப்பாக கொடுக்கிறார்கள். அது அவர்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு விதத்தில் உதவியாய் இருக்கிறது என்பதை அவர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.


3. குழந்தைகள் வேலைக்குச் சென்ற பின், தங்கள் பாக்கெட் செலவுக்கு சிறிது பணம் வைத்துக் கொண்டு மீதி முழு சம்பளத்தையும் பெற்றவர்களிடம் அவர்கள் கேட்காமலேயே கொடுத்து விட வேண்டும்.


4. திருமணத்திற்குப் பின்பு, குழந்தைகள் பெற்றவர்களுக்கு சட்டப் படி மாதம் ரூ.10,000 அவர்கள் கேட்காமலேயே கொடுக்க வேண்டும். இப்படி ஒரு சட்டம் இருப்பதே பல பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் தெரியாது.


5. அவ்வாறு அவர்களால் கொடுக்க முடியவில்லை என்றால், தங்களுடன் அவர்களை வைத்திருந்து அவர்கள் மனம் நோகாமல் காப்பாற்ற வேண்டும். இது அவர்கள் கடமை. 


6. பெற்றவர்களுக்கு கேட்காமல் உதவி செய்தால் அது அன்பு.கேட்டு உதவி செய்தால் அனுதாபம்.கேட்டும் உதவி செய்யவில்லை என்றால் பூர்வ ஜன்ம பலன்.

Sunday, July 8, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 496 TO 510

496. நாட்டின் பொருளாதாரம் மக்கள் கையில் இருக்கிறது. அரசாங்கத்திடம் இல்லை. அரசாங்கம் மக்களின் கணக்குப் பிள்ளை. குடி உயரக் கோன் உயரும்.

497. மக்களால் மக்களுக்காக தேர்ந்து எடுக்க பட்டது அரசாங்கம்.குறை யாரிடம்?பிறரை குற்றம் கூறுவதற்கு முன்னால் தன்னை பற்றி நினைப்பது நல்லது.  


498. 133 கோடி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது சுலபமில்லை. IAS அதிகாரிகள் தான் இந்த நாட்டை நடத்துகிறார்கள் என்பது பலருக்கு புரியவில்லை

499. ஜனநாயகம் என்பது மக்களால் மக்களுக்காக செயல் படும் ஒரு அமைப்பு.அதில் நடக்கும் நல்லது கெடுதலுக்கு அவர்களே பொறுப்பு.வேறு யாரும் இல்லை.


500. சிக்கனமாக வாழணும். வெளி நாட்டுப் பொருள்களை விலக்கணும். வன்முறையை தவிர்க்கணும். பெண்களை மதிக்கணும், பெற்றோரைக் காப்பாற்ற வேண்டும். 


501. மக்கள் நேர்மையாக இருக்க வேண்டும். வரிகளை சரியாக கட்ட வேண்டும். லஞ்சம்,ஊழலுக்கு எப்பவும் ஆதரவு தரக்கூடாது.சட்டத்தை மதிக்க வேண்டும்


502. நாடு எனக்கு என்ன செய்தது என்று கேட்பதற்கு முன், நான் நாட்டிற்கு என்ன செய்தேன் என்று கேட்க வேண்டும். அதை அடுத்த பதிவில் சொல்கிறேன்.


503. நாட்டில் நடப்பது எதை பற்றியும் கவலைப் பட்டு பலனில்லை.என்னால் எதுவும் செய்ய முடியாது என்று தெரியும்.நான் என் வேலையைப் பார்க்கிறேன


504. 
நேரில் பார்க்காத,பழகாத, திரையில் தெரியும், ஒப்பனை செய்யப்பட்ட சினிமா நடிகர் மீது எப்படி பிரியம் வருகிறது என்று எனக்கு புரியவில்லை.

505. விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும். ஒருவருடைய வயதுக்குத் தகுந்த எண்ணங்கள் வேண்டும். அந்த எண்ணங்களுக்குத் தகுந்த எழுத்து வேண்டும்.


506. செருப்பு [வாழ்க்கை] காலில் எங்கே கடிக்கிறது என்பது அணிந்திருப்பவனுக்குத்தான் தெரியும். செருப்பைச் சரி செய்ய வேண்டும். கால்களை அல்ல.


507. எல்லோரும் பிறக்கும் போதே மூச்சு விடுகிறோம். யாரும் கற்றுத் தரவில்லை. வாழ்க்கையின் நுணுக்கங்களும் அப்படித்தான். தானே கற்க வேண்டும்.


508. சிக்கனம் வேறு, கஞ்சத்தனம் வேறு. பற்பசையை அளவாக உபயோகிப்பது சிக்கனம்.தீர்ந்து போன பற்பசையில் தண்ணீர் ஊற்றி பல் தேய்ப்பது கஞ்சத்தனம்


509. சிரார்த்ததிற்கு மறுநாள் பரனேஹி தர்ப்பணம் செய்ய வேண்டும்.எந்த சாஸ்திரிகளும் மறுநாள் வந்து செய்வதில்லை.முதல் நாளே செய்து விடுவார்கள்


510. ஆங்கிலம், தமிழ், தத்துவம், இறையறிவு, புத்தகம், இசை, அரசியல், மதம், ஜாதி, சினிமா, பற்றி நல்ல கருத்துக்களை வளர்த்துக் கொள்வது நல்லது

மனதில் தோன்றிய எண்ணங்கள் 481 TO 495

481. நான் ஒரு பெரிய அறிவுஜீவியும் இல்லை முட்டாளும் இல்லை. நான் ஒரு சாதாரணமானவன். எனக்குத் தெரிந்த நேர்மையான வழியில் வாழ்க்கை வாழ்கிறேன்

482. வருமானத்தை அதிகமாக்கி செலவை குறைத்தால் சந்தோஷமாக வாழலாம். வரவை கூட்டாமல் செலவை அதிகம் ஆக்கினால் கஷ்டம் வரும். முடிவு அவரவர் கையில்


483. 2017-18 ஆண்டில் ஒரு இந்திய பிரஜையின் சராசரி ஆண்டு வருமானம் ரூ1,12,000/ அல்லது மாதம் ரூ10,000/.இதற்குள் ஒரு குடும்பம் வாழ முடியுமா?


484. நாம் வளர்த்த செடி மரமாகி நமக்கு நிழலும் மற்ற பலன்களை அள்ளி அள்ளித் தருகின்றன. மனிதர்கள் அப்படியில்லை. அவர்கள் ஆறறிவு படைத்தவர்கள்.


485. ஒரு பெரிய கல்லை உடைக்க சுத்தியால் பலமுறை அடிக்க வேண்டும்.எந்த அடியில் உடைந்தது என்று சொல்ல முடியாது.வாழ்க்கையில் பொறுமை முக்கியம்.


486. பறவை கிளையில் அமரும்போது கிளை வலுவாக இருக்கிறதா என்று பார்ப்பதில்லை. திறமைசாலியும் முயற்சியில் வெற்றி பெறுவோமா என்று யோசிப்பதில்லை


487. உண்மையில் ஒரு திரைப்படத்தை உருவாக்குபவர் அதன் இயக்குநர். அவர் படும் கஷ்டங்களுக்கு அளவில்லை. ஆனால் அவரை பலரும் நினைப்பது கிடையாது.


488. ஒரு சாதாரண கல், சிலை ஆவதற்கு உளியிடம் எவ்வளவு அடி வாங்குகிறது. அதைப் போல, வாழ்க்கையில் நல்ல மனிதன் ஆக, சோதனைகளை சந்திக்க வேண்டும்.


489. அரசியலை பற்றி மூச்சுவிடாமல் முழங்குகிறார்களே, அப்படி என்ன மாற்றம் வந்து இந்த திருநாடு முன்னேறப் போகிறது மக்களின் மனோபாவம் மாறாமல்?


490. மதம், ஜாதி ஒற்றுமையைப் பற்றி எழுதாமல் வேற்றுமையைப் பற்றி எழுத எழுத மக்களிடையே துவேஷம் தான் அதிகமாகும் என்பது என் தாழ்மையான கருத்து


491. இறைவனை ஏமாற்றினால் அதிக விலை கொடுக்கும் படி இருக்கும். நடப்பது ஒரு காரணத்திற்காக நடக்கிறது. அவனல்லால் இப்புவி மீதே அணுவும் அசையாதே


492. பெயர் வைப்பதில்ஆணுக்கு அன் விகுதி,பெண்ணுக்கு இ விகுதி,கடவுள் பெயர்,சுருக்கமாக, கேட்பதற்கு இனிமையாக இருக்கவேண்டும் என்பது சாஸ்திரம்

493. புத்தகம் படிப்பதில் உள்ள ஆர்வம் மிகக் குறைந்து விட்டது. சிறிய கட்டுரையைக் கூட  படிப்பதில்லை. இது விஞ்ஞான வளர்ச்சியால் வந்த கோளாறு.


494. நாட்டில் நமது தினசரி வாழ்க்கையில் நல்லதும், கெட்டதும் நடக்கின்றன.நல்லதை நாம் பாராட்ட வேண்டும்.கெட்டதை புறக்கணிக்கத் தெரிய வேண்டும்


495. இன்று  நல்ல எண்ணங்களுடன் நல்ல செயல்கள் செய்ய வேண்டும் என்று தினமும் காலையில் உறுதி எடுத்து கொண்டு அதைத் தவறாமல் பின்பற்றவெண்டும்.

Friday, July 6, 2018

ரத்தக்கண்ணீர்

எவ்வளவோ கஷ்டங்களுக்கு இடையில் பெண்ணைப் படிக்க வைத்து ஆளாக்கினேன். அவளால் எனக்கு ஒரு பயனும் இல்லையென்று அவள் பெற்றோர் கதறுகின்றனர். பெண்களைத் தங்களுடைய கண்களுக்கு மேலாக நினைத்து வளர்த்த பெற்றோர்கள் இன்று அவள் படும் கஷ்டத்தை நினைத்து ரத்தக்கண்ணீர் சிந்துகிறார்கள்

இப்பொழுது  கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போகிறார்கள். நன்றாகப் படித்தும், வேலைப்பார்த்தும், சம்பாதித்தும்  பெண்களுக்கு  தன்னுடைய பணத்தை செலவு செய்யும் சுதந்திரம் இல்லை. பல குடும்பங்களில் பண விவகாரங்களை ஆண்கள் தான் கவனிக்கிறார்கள்.

வீட்டு வேலையும் பார்த்துக் கொண்டு, அலுவலக வேலையும் பார்த்துக் கொண்டு, குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு பெண்கள் படும் கஷ்டத்திற்கு அளவேயில்லை . அதனால் அவர்கள் சிறு வயதிலேயே பலவித நோய்களுக்கு ஆளாகிறார்கள்.

இன்னும் ஆணுக்கு அடிமையாகவே இருக்கிறார்கள். பெண்கள், தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை, தங்கள் இஷ்டப்படி கையாள முடியவில்லை என்றால்,ஏன் சம்பாதிக்கணும். அவர்கள் கணவனிடம் கொடுத்து விட்டு அனுமதிக்கப் பட்டதை மட்டும் எடுத்துக் கொள்கிறார்கள். 

இது உண்மையான  பெண்கள் மேம்பாடா? அந்தக் காலம் போல் மறுபடியும் அடிமையாகத்தான் இருக்கிறார்கள். பெண்களில் பலர் தங்கள் திறமையைக் காட்டுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆண்களில் பலர் அவர்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்று தெரியாமல்.

பெண் சுதந்திரம் என்ற பெயரில் தாங்கள் ஏமாற்றப்படுவது கொஞ்சமும் தெரியாமலேயே இன்றைய பெண்கள் கடினமாக உழைப்பது மிகவும் வேதனையான செயல். சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி. இன்றைய இளைஞர்கள் பெண்களின் உழைப்பில் சொகுசு வாழ்க்கை வாழ்வது மிகவும் வேதனையான செயல்.

ஆடற மாட்டை ஆடிக் கறக்கணும் , பாடற மாட்டைப் பாடிக் கறக்கணும். இன்றைய  இளைஞர்களுக்கு இந்தப் பாடம் மிக நன்றாகத் தெரிந்து இருக்கிறது. பெண்ணீயம், பெண் சுதந்திரம், பெண் முன்னேற்றம் என்பதெல்லாம் ஏமாற்று வேலை. அதில் ஏமாந்து பெண்கள் விட்டில் பூச்சிகளாக விழுகிறார்கள்.

இனி ஆண்டவன் தான் பெண்களையும் அவளுடைய பெற்றோர்களையும் காப்பாற்ற வேண்டும். என்ன கதறினாலும் யாரும் கேட்கப் போவதில்லை என்பது நிச்சயம். இந்தக் குறைபாட்டை போக்க, பெண்களுடைய எதிர்காலத்தைப் பாதுகாக்க, நான் ஒரு வழி சொல்கிறேன். ஆனால் பெரும்பாலோர் இதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

கணவனும் மனைவியும் வேலை பார்த்தால் :

1.இருவரும் ஒரு குறிப்பிட்ட தொகையை பாக்கெட் மணியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

2. எல்லா குடும்ப செலவுகளையும் கணக்கு எழுதி அவர்களுடைய சம்பள விகிதத்தில் பிரித்துக் கொள்ள வேண்டும்.

3. மீதி உள்ள பணத்தை அவர்கள் விருப்பம் போல செலவு செய்யலாம்.

4. கடைசியில் மீதி உள்ள பணத்தை அவரவர் பெயரில் கூட்டுக் கணக்காக முதலீடு  செய்யவேண்டும்.


Thursday, July 5, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 466 TO 480

466. நமஸ்காரம் புனிதமானது. நமஸ்காரம் செய்ய வேண்டிய இடத்தில் வணக்கம் சொல்லிப் பலனில்லை. வணக்கம் சொல்லும் இடத்தில் நமஸ்காரம் செய்வது தவறு

467. நமஸ்காரம் பண்ணுவதின் தத்துவம் சரணாகதி. நமஸ்காரம் பண்ணும் அளவுக்கு தகுதி உள்ள ஒருவரை, எதிர்ப்பது, மரியாதை இல்லாமல் பேசுவது கூடாது.

468. தாய் தந்தையை நமஸ்காரம் செய்யும் போது, நமது நெற்றி அவர்களுடைய பாதத்தில் நன்கு படும்படி வைத்து மனப்பூர்வமாக நமஸ்காரம் செய்ய வேண்டும்

469. நமஸ்காரம் கிழக்கு, மேற்கு திசையில் செய்ய வேண்டும். வடக்கு பார்த்து செய்யக் கூடாது. பித்ருக்களுக்கு தெற்கு பார்த்து செய்ய வேண்டும்.

470. அண்ணனின் மனைவி [மன்னி] நம்மை விட வயது குறைந்தவராக இருந்தாலும் அண்ணனுடன் சேர்ந்து நின்று அவர்களை நமஸ்காரம் செய்ய வேண்டியது முறை.

471.திருமணமானவர்கள் முடிந்த வரையில் தம்பதிகளாக, தம்பதிகளை நமஸ்கரிக்க வேண்டும். ஆண் இடது புறமும், பெண் வலது புறமும் இருக்க வேண்டும்.

472. கோயிலில் இறைவனை நமஸ்காரம் செய்யும் போது, துவஜஸ்தம்பத்துக்குப் பின்புறம் தான் நமஸ்காரம் செய்ய வேண்டும். நடுவில் செய்யக் கூடாது.

473. கோயிலில் இறைவனை மட்டும் தான் நமஸ்காரம் செய்ய வேண்டும். வேறு யாரையும் எந்தக் காரணம் கொண்டும் நமஸ்காரம் செய்யக் கூடாது. அது பாபம்.

474. தாய், தந்தை, ஆசிரியர், தெய்வம், மாமனார், மாமியார், அண்ணா, மன்னி தவிர யாரையும் நமஸ்காரம் செய்ததில்லை.எனக்கு செய்வதை விரும்புவதில்லை

475. வாழ்க்கையில் எல்லோரும் விரும்புவது சந்தோஷம். அப்படி சந்தோஷமான வாழ்க்கைக்கு எது மிக முக்கியம்? படிப்பா, வருமானமா அல்லது ஆரோக்கியமா?

476. நாம் நம் தினசரி வாழ்க்கையில் பல தடவை கெட்ட வார்த்தைகளைப் உபயோகப்  படுத்துகிறோம். அவை எப்படி வழக்கத்திற்கு வந்தது? ஒழிக்க முடியாதா ?

477. நாம் ஒருவரிடம் பேசும்போது அவர் நாம் பேசுவதை கவனிக்கிறாரா என்று பார்க்க வேண்டும். இல்லையெனில் பேசாமல் வேறு வேலையை பார்க்க வேண்டும்.

478. ஒருவர் நம்மிடம் பேசும்போது அவர் பேசுவதைக் கவனிக்க வேண்டும். அதைவிட்டு பராக்கு பார்ப்பது, வேறு வேலை செய்வது அவமானப்படுத்துவது ஆகும்

479. நான் கூறும் ஒரு தகவல் சரியில்லை என்று மற்றவர் மறுத்தால், "நீங்கள் சொல்வது சரி" என்று கூறி விடுவேன். அவரிடம் நிரூபிக்க முயலுவதில்லை

480. ஒருவர் கூறும் தகவல் சரியில்லை என்று எனக்கு நன்கு தெரிகிறது. இருந்தாலும்,அவரிடம் "நீங்கள் கூறுவது சரியில்லை" என்று நான் சொல்வதில்லை.




Wednesday, July 4, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 451 TO 465

451. விவாதம் அறிவாளிகள் இடையே நடைபெறுவது. வாக்குவாதம் அறிவு இல்லாதவர்கள் இடையே நடைபெறுவது.விவாதம் பலன் தரும்.வாக்குவாதம் விரோதம் வரும்.

452. எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடாது. நிதானமாக இருக்க வேண்டும். எதையும் விலகி நின்று பார்க்கத் தெரிய வேண்டும். மனம் ஒரு நிலைப் படும்.


453. பிரபலமானவர்களைப் பற்றி எழுதினால் தானும் பிரபலமாகி விடலாம் என்று சிலர் எழுதுகிறார்கள். அது தவறு. சமுதாய முன்னேற்றம் தான் முக்கியம்.

454. ஒரு திரைப்படம் பார்த்த பிறகு, நடிகர்களைப் புகழாமல் கதை, திரைக்கதை, இயக்கிய விதம் பற்றிப் பேசுவது ஒரு ஆரோக்கியமான முன்னேற்றமாகும்.


455. நாட்டில் வன்முறை, கற்பழிப்பு, ரௌடித்தனம், எல்லாம் அதிகம் காணப் படுகிறது. இதற்குக் காரணம் சினிமா, குடிபழக்கம், சமூக வலைதளம் ஆகியவை.


456. இந்தியக் கலாசாரத்தின் ஆணிவேர் குடும்பம். அதன் முக்கியத்துவம் தற்போது நிராகரிக்கப் படுகிறது.மேல் நாட்டு நாகரீகம் பின் பற்ற படுகிறது


457. வாழ்க்கையின் தரம் வாழ்வதில் உள்ளது. நாம் இறக்கும் வரை கற்கிறோம். வாழ்க்கையை, பிறரிடம் கற்பதோ, பிறருக்கு கற்பிப்பதோ, இயலாத காரியம்.


458. யாரும் அழுக்கான உடைகளை அணிவதில்லை. அதை போல் நம் வாழ்வில் உள்ள அழுக்கை மறக்க வேண்டும். நல்லதை பேச வேண்டும், நல்லதை செய்ய வேண்டும்.


459. சங்கீதம் தெய்வீகம். அது பயிர்களை வளர்க்கிறது. மனிதனின் மன அழுத்தத்தைப் போக்குகிறது. சுகமான சங்கீதத்தை ரசிக்க வேண்டும். அது ஒரு கலை


460. வாழ்க்கை என்பது புரியாத புதிர்.நேற்று சரி என்று பட்டது இன்று தவறாக இருக்கிறது.நாளை எப்படியோ?நன்கு யோசித்து முடிவு எடுக்க வேண்டும்.


461. ஒவ்வொரு தடவையும் அவள் சூடான எண்ணையில் பூரியைப் போடும் போது,எண்ணை அவள் கையைச் சுட்டு விடுமோ,என்று மனம் பதை பதைக்கும்.பூரி வேண்டாமே.


462. படிக்காமல், உழைக்காமல், நேர்மையாக சம்பாதிக்காமல், குடும்பத்தைக் காப்பாற்றாமல், நாட்டை, மக்களை, விதியை, இறைவனை திட்டுவது வீண் வேலை.

463. தமிழில் கவிதை எழுதுவது சுலபமல்ல. இலக்கணம் தெரிய வேண்டும். நிறையப் படிக்க வேண்டும். பயிற்சி வேண்டும். கடும் சொல் தவிர்க்க வேண்டும்.


464. காதல்' ஒரு அழகான சொல்.'காசு' அதுவும் ஒரு அழகான சொல்.பலர் ஒன்றை விரும்பி மற்றதைத் தொலைக்கிறார்கள். இரண்டும் முக்கியம்.நிதானம் தேவை


465. பெரும்பாலோர் வாழ்க்கையில் முதல் தடவை சரியான முடிவு எடுக்காமல் கோட்டை விட்டு விட்டு இரண்டாவது சந்தர்பத்திற்குக் காத்திருக்கிறார்கள்


Tuesday, July 3, 2018

WOMEN EMPOWERMENT / பெண்களின் முன்னேற்றம்

WOMEN EMPOWERMENT
During the last 40 years, the parents have educated the girl children for their intellectual growth. They also studied well and succeeded in life like the menfolk.

A lady Psychologist in Chennai, sometime back interviewed about 3000 employed girls and published an article in The Hindu newspaper. The gist of the article is as under.


1. Their starting salary is much more than that of their father after putting in 30 years of service.


2. Therefore their mother gave more importance to the girls than their father.


3. As a result, many girls became assertive in the family.


4. Then they became authoritative in the family.


5. Then slowly they became aggressive in the family.


Education must serve only for intellectual growth and not become arrogant. The doctor concluded by saying that the situation has completely changed.


Until a few decades back the women were protected in the house. Since they are now going for employment, the men lead a luxurious life at the expense of their hard work. Many women are not even aware of this.


பெண்களின் முன்னேற்றம் 

கடந்த நாற்பது வருடங்களாக பெண்களை அவர்கள் பெற்றோர்கள் கல்வி பயில வைத்து வாழ்க்கையில் முன்னேற வைத்துள்ளனர். அவர்களும் நன்றாகப் படித்து, வெற்றி பெற்று இப்போது ஆண்களுக்கு சமமாக சமுதாயத்தில் நல்ல நிலையில் இருக்கின்றனர்.

சென்னையில்  ஒரு பெண் மனோ தத்துவ டாக்டர்  சில ஆண்டுகளுக்கு முன் சுமார் மூவாயிரம் பெண்களை பேட்டி கண்டு ஹிந்து பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் நான் படித்து அறிந்த விவரங்கள் பின்வருமாறு.


1. அவர்களுடைய ஆரம்ப மாத ஆரம்ப சம்பளம், முப்பது வருட அனுபவத்திற்குப் பிறகு அவர்கள் தந்தை வாங்கும் சம்பளத்தை விட பல மடங்கு அதிகம்.


2. அதனால் அவர்களுடைய தாய், மகளுக்கு அவள் தந்தைக்கு மேலாக குடும்பத்தில் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தனர்.


3. அதனால் பல பெண்கள் குடும்பத்தில் தங்களை நிலைநிறுத்த [ASSERTIVE] ஆரம்பித்தனர்.


4. அதன் பிறகு குடும்பத்தில் அதிகாரம் செலுத்த [AUTHORITATIVE] ஆரம்பித்தனர்.


5. கடைசியில் பல பெண்கள் தீவிர மனப்பான்மை அடைய [AGGRESSIVE] ஆரம்பித்தனர்.


கல்வி ஒருவரது அறிவு வளர்ச்சிக்காகவும், அஹங்காரம் கொள்ளாமல் இருக்கவும் பயன் பட வேண்டும். ஆனால் நிலமை மிகவும் மாறிவிட்டது என்று எழுதி இருந்தார்.


சில வருடங்களுக்கு முன்பு வரை பெண்களை வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். இப்போது பெண்களை வேலைக்கு அனுப்பி அவர்கள் உழைத்து சம்பாதித்த பணத்தில் ஆண்கள் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர். இதை பெண்களும் 
அறிந்தும் அறியாதது போல இருக்கின்றனர்.

Monday, July 2, 2018

RANDOM THOUGHTS 46 TO 60

46. The division in humanity is based on food habits, lifestyle, and beliefs. All should forget the differences and live as friends.

47. There are people who will object if you tell them that the sun is rising in the east. It is a wonder to have such intelligent people with us.


48. A person should do his duties, then obtain wisdom and then meditate towards God. Without renunciation, there is no realization.


49. There are many people who did or doing or will be doing good things for our country. That is their job.  Think about what you are going to do.


50. We should know how to lead our life usefully. Talking without purpose, doing things without result will only spoil life.


51. Philosophy is interesting to hear. But only the starved know about hunger. First, remove the hunger then philosophy.


52. To think about the good, to see good things, to hear good aspects, to talk about good, is the auspicious time.


53. Doing one's duty, making the parents happy, helping the poor, and praying to God should be the motive in life.


54. Please spare ten minutes for your parents every morning. Inquire kindly about their sleep, food, and health. They will bless you.


55. Our family is like a car. My daughter is the engine. My son is petrol. My wife is the director. I am the driver. The car is going smooth.


56. The sages and rishis advocated to talk the truth, to talk pleasantly and not to talk anything unpleasant to the ears.


57. Everything in this Universe is born, take shape and merge with truth in the end. There is no place without truth.


58. One should conduct himself according to his status, capacity and standard. He should maintain it. The tiger will never eat grass.


59. We seek friendship in youth. It lasts long. When we are old, we do not seek friendship and we prefer to be alone.


60. The actors and actresses acting in TV serials are good looking and talented. But they do not get chances to act in movies why?

MADURAI OR CHIDAMBARAM? / மதுரையா, சிதம்பரமா?

MADURAI  OR  CHIDAMBARAM?
In earlier days, people used to inquire whether the family is Madurai or Chidambaram. It implies, if it is Madurai, the lady in the family rules and if it is Chidambaram, the man rules.

Whoever rules,  the going should be smooth. There is nothing wrong if one of them is submissive. Otherwise, both will be fighting. This is the secret of happy living.


When you fix up the marriage of the daughter or son, this information may be useful.


1. If the wedding is for the daughter, it is advisable to give her in marriage to a Madurai family where the lady rules. There will be a good understanding between the mother in law and the daughter in law. There will be no problem from the father in law as he is submissive.


2. If the wedding is for the son, it is advisable to get the girl from a Chidambaram family where the man rules. There will be a good understanding between the father in law and the son in law. There will be no problem from the mother in law as she is submissive.


N.B. I followed this formula in the case of my children's weddings. How far this formula is successful depends on one's luck.


மதுரையா, சிதம்பரமா? 

அந்தக் காலத்தில் " உங்க வீட்டிலே எப்படி மதுரையா, சிதம்பரமா?" என்று கேட்பது வழக்கம். மதுரை என்றால் மனைவியின் ஆட்சி, சிதம்பரம் என்றால் கணவனின் ஆட்சி என்று அர்த்தம்.  

யாராவது ஒருவரின் ஆட்சி இருப்பது தான் நல்லது. ஒருவர் பணிந்து போவதில் தவறு ஒன்றும் இல்லை. அப்போதுதான் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும். இல்லாவிடில் எப்போதும் சண்டை, சச்சரவு தான்

மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் செய்யும் போது இந்த விவரம் மிகவும் உபயோகமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

1. மகளுக்குத் திருமணம் செய்து கொடுக்கும் போது மதுரையில் கட்டிக் கொடுக்க வேண்டும். அங்கு மாமியார் ஆட்சி நடக்கும். மாமனார் தலையாட்டி பொம்மை. மகனும் அப்படியே. மாமனார் தொந்திரவு இருக்காது. பெண்ணுக்கு மதிப்பு இருக்கும். மாமியாரும் மருமகளும் ஒற்றுமையாக இருப்பார்கள்.

2. மகனுக்கு திருமணம் செய்து கொடுக்கும் போது சிதம்பரத்தில் பெண் எடுக்க வேண்டும். அங்கு மாமனார் ஆட்சி நடக்கும். மாமியார் தலையாட்டி பொம்மை. மகளும் அப்படியே. மாப்பிள்ளைக்கு மதிப்பு இருக்கும். மாமனாருக்கு மாப்பிள்ளையின் எண்ணங்கள் தெரியும். மாமனாரும் மாப்பிள்ளையும் ஒற்றுமையாக இருப்பார்கள்

பின் குறிப்பு: நான் என் குழந்தைகளுக்குத் திருமணம் செய்யும் போது இந்த பார்முலாவைப் பின் பற்றினேன். இந்த பார்முலா வெற்றி அடைவதோ, தோல்வி அடைவதோ அவரவர் அதிர்ஷ்டத்தைப் பொருத்தது.

Sunday, July 1, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 436 TO 450

436. அமெரிக்காவில் சிறந்த, அழகான, அதிக புத்தகங்கள் கொண்ட, இலவச நூலகங்கள் அதிகம் உண்டு. மலிவு விலையில் அங்கு பழைய புத்தகங்கள் வாங்கலாம்.

437. அமெரிக்காவில் இருக்கும் நண்பர் என் தமிழ் பதிவுகளை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து பிறகு லைக், கமண்ட் செய்கிறார்.இது எப்படி இருக்கு


438. அமெரிக்காவில் லஞ்சம் வாங்காமல், முப்பது நிமிடங்களில், ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல், தகுதி சான்றிதழ், மாசுக் கட்டுப்பாடுப் பரிசோதனை செய்யப் படுகிறது


439. அமெரிக்காவில் பாதையில் வாழும் ஏழைகள் குறைவு. அவர்களுக்கு குளிர் காலத்தில் உணவு, தங்கும் வசதிகள் கிருஸ்துவ மிஷன் செய்து கொடுக்கிறது


440. அமெரிக்காவில் வங்கிகளில் வட்டி விகிதம் [கொடுப்பது/ வாங்குவது] மிகக் குறைவு. அதனால் சேமிப்பு குறைவு. செலவு செய்யும் மனோபாவம் அதிகம்

441. அமெரிக்காவில் 60வயதுக்கு மேற்பட்டவர்களை அரசாங்கம் பாதுகாக்கிறது. அவர்களுக்கு மாத உதவித்தொகை,குறைந்த விலையில் வீடு,ரேஷன் அளிக்கிறது


442. அமெரிக்காவில் அணில் பெருச்சாளி மாதிரி இருக்கும். மேலே கோடுகள் இல்லாமல் பார்க்க சகிக்காது. நமது ஊரில் அணில் எவ்வளவு அழகாக இருக்கும்.


443.அமெரிக்காவில் காய்கறி,பழங்கள், மளிகை சாமான்கள் ஆகிய எல்லாப் பொருட்களின் தரம் சிறப்பாக இருக்கும்.கலப்படம், சொத்தை எதுவும் இருக்காது


444. அமெரிக்காவில் பிரஜை, தொழில் செய்வோருக்கு "சமூக பாதுகாப்பு எண்" ஒன்று தரப்படும்.அது அவர் ஜாதகம்.அது இல்லாமல் எதுவும் செய்ய முடியாது


445. அமெரிக்க மக்கள் தேசப்பற்று மிகுந்தவர்கள்.தேசியக் கொடிக்கு அதிக மரியாதை கொடுப்பவர்கள்.எல்லா இடங்களிலும் தேசியக் கொடியை பார்க்கலாம்.


446. அமெரிக்காவில் மக்கள் குளிர் காலத்தில் தங்கள் உடலை 90 சதவிகிதம் ஆடையால் மறைத்து இருப்பார்கள்.கோடை காலத்தில் 10%மறைத்து இருப்பார்கள்


447. அமெரிக்காவில் தெரு நாய்கள் இல்லை.நாய் வளர்காதவர்கள் குறைவு.அவர்கள் நாய் தெருவில் மலம் கழித்தால் அவர்களே சுத்தம் செய்து விடுவார்கள்


448. அமெரிக்காவில் தூசி என்கிற பேச்சுக்கே இடமில்லை. ஒரு மேஜையின் மேல் ஆறு மாதங்கள் வரை துடைக்ாவிட்டாலும் ஒரு துளி தூசி கூட இருக்காது.


449. அமெரிக்காவில் பட்டப் படிப்பு 4 வருஷம்.கட்டணம் வருஷத்திற்கு 7 லட்சம்.முதுகலை பட்டப் படிப்பு 2 வருஷம்.கட்டணம் வருஷத்திற்கு 17 லட்சம்


450. அமெரிக்கப் புராணம் இத்துடன் முடிவுற்றது. நல்லதை வரவில் வைப்போம். கெட்டதை செலவில் வைப்போம். பொறுமையாக படித்தவர்க்கு நன்றி வணக்கம்..